தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்று சாதிப்பது போல, எத்தகைய காரணங்களையும் கவனியாமல் இந்தி பொதுமொழியாக வேண்டும் எனக் கூறுவோர், அது முடியுமா என்பதைச் சிறிது நேரம் சிந்திக்கவேண்டும்.
பொது மொழி
பொது மொழியைப் பற்றிக் காங்கிரஸ் போட்ட தீர்மானங்களைக் கவனித்தாலே இந்தக் கேள்வி இயற்கையாக எழும். இந்தி பொது மொழியாகவேண்டும் என்று பாடுபட்டவர்கள் திடீரென்று இந்துஸ்தானி என்ற பெயருக்குத் தாவுவானேன்? பொதுமொழி இந்தியல்ல என்று காந்தியாரே ஏன் விளக்கம் கூறவேண்டும்? காங்கிரஸ் இந்துஸ்தானியைப் பரப்பப் பெருமுயற்சி எடுத்த போதாவது முடிந்ததா? கடைசியாகப் பொது மொழியாவதற்குரிய சகல தன்மைகளையும் பெற்றிருப்பதாகக் கூறப்பட்ட இந்துஸ்தானி காங்கிரஸாலேயே கைவிடப்பட்டதன் காரணமென்ன? இந்தியை இந்துஸ்தானி என்று அழைத்துத் திட்டத்தை மழுப்பப் பார்ப்பானேன்? ஏட்டிலே எழுதும்போதும், கேள்விக்குப் பதில் கூறும்போதும் சொல்லளவில் இந்துஸ்தானி என்று குறிப்பிட்டு விட்டு நடைமுறையில் இந்தியையே பாடத்திட்டமாக வைப்பதன் கருத்தென்ன?
இந்து – உருது சண்டை
ஒன்று காங்கிரஸின் பொதுத் தீர்மானத்திற்குக் காங்கிரஸ்காரர்களே துரோகம் செய்திருக்க வேண்டும்; அல்லது அவர்களால் முயன்றும் முடியாமற் போயிருக்கவேண்டும். முதற் காரணம் காங்கிரஸ் தலைவர்களின் கண்ணியத்தையே சந்தேகிப்பதாக இருக்கிறது. இரண்டாவது காரணம் தீர்மானத்தின் அடிப்படையிலே இருந்த தவறை எடுத்துக்காட்டுகிறது. இந்த இரண்டு காரணங்களாலும் இந்தி-உருது இவைகளுக்கிருந்த சண்டையைத் தீர்த்து வைத்துப் பொது மொழியை அமைக்க முடியவில்லை என்பது பெறப்படுகிறது. ஒன்றிற்கொன்று தொடர்புடைய மொழிகள் – இரண்டின் வரலாறுகளும் ஒன்றை ஒன்று பின்னிக் கிடக்குங் தன்மையன – இரண்டிற்கும் பொதுப் பண்புகளும் ஒரே இலக்கண, இலக்கிய அமைப்புகளும் இருக்கின்றன என்று இவ்வாறெல்லாம் கூறப்பட்ட இந்தி-உருது இவைகளுக்குள்ளேயே ஒத்துப்போக முடியாத தன்மை இருந்தால், வடநாட்டு மொழிகளினின்றும் தனித்த வரலாறு, கலாச்சாரம், இலக்கண இலக்கியப் பண்பாடுகளை உடைய தமிழ் முதலிய திராவிட மொழிகளிடை எவ்வாறு இந்தி வர முடியும்? வந்தாலும் எப்படி நிலைத்து நிற்கும்? அப்படியே நிற்பதானாலும் எவ்வளவு நாட்களுக்கு நிற்கமுடியும்? வடநாடு-தென்னாடு என்று வழி வழி வந்த பிளவை நோக்கும்போது இந்தி தென்னாட்டில் ஒன்றி வாழ இடமேற்படாது என்று கொள்வதானாலும் கூட, வட நாட்டிலேயுள்ள உருது தவிர்த்த மொழிகள் கூட இந்தியை ஏற்றுக்கொள்ளுமா என்பது அய்யப்பாடே!
தாய்மொழிப் பற்று
1905இல் கர்சான் காலத்தில் மாகாணத்தை இரண்டாகப் பிளக்கக்கூடாது என்று எந்த வங்காளம் போராடியதோ, அதே வங்காளம் இரண்டாகப் பிரிய 1947இல் சம்மதித்தது. கிழக்கு வங்காளம் பாகிஸ்தானுடனும் மேற்கு வங்காளம் இந்தியாவுடனும் சேர்ந்தன. அப்படி அரசியல் – பொருளாதாரத் துறைகளில் இரண்டாகப் பிரிக்கப்பட்ட போதிலுங்கூட, மொழி வகையில் வங்காள மொழியை விட்டுக்கொடுக்க இரு பகுதிகளும் மறுக்கின்றன. கிழக்கு வங்காளத்தில் உருது அரசியல் மொழியாக ஆக்கப்பட்ட பொழுது எந்தப் பாகிஸ்தானுக்காக அவர்கள் ஓட்டுப் போட்டார்களோ அதே பாகிஸ்தான் உத்தரவை எதிர்த்து கிழக்கு வங்க முஸ்லிம்கள் வங்க மொழிக்காக போராடினார்கள். முஸ்லிம் மாணவர்கள் தாய்மொழியை விட்டுக்கொடோம் எனத் தெரிவித்தார்கள். பின்பு உருது வங்காளம் இருமொழிகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கிழக்கு வங்க முஸ்லிம்கள் போராடியதை ஆதரித்து இந்திய தேசியப் பத்திரிகைகள் எழுதின. அதே மொழிப்பற்று காணப்பட்டால் ஏன் தடுக்கவேண்டும்? ஏளனஞ் செய்வதேன்? வங்காளி காட்டும் தாய்மொழிப்பற்று தமிழனுக்குக் கிடையாதா? வங்கத்தில் ஏற்பட்ட மொழிப் போராட்டத்தைப் பெருமைப்படுத்திய அதே செய்தித் தாள்கள், தமிழ்நாட்டில் இந்தி வேண்டாம் என்று கூறுவதை ஏன் இருட்டடிப்பு செய்யவேண்டும்? ஏன் தாழ்வுபடுத்தி உரைக்கவேண்டும்?
மராட்டியம் மறுத்தது
உண்மையில் இந்தி பொதுமொழியாக வேண்டும் என்ற கொள்கையில் உறுதியிலிருந்தால், வங்கத்தில் முதல் மொழியாகக் கட்டாயப்படுத்திப் பார்க்கட்டும். இந்தி பிறந்த வட நாட்டிலேயே அதற்குச் செல்வாக் கில்லை. அஸ்ஸாமில் இந்தி கட்டாயப் பாடமில்லை. வட நாட்டில் கட்டாயப்படுத்தப்பட்டு வெற்றி பெற்றதும், வேண்டுமானால் தென்னாட்டுக்கு வரட்டும். மராட்டியம் கூட இந்தியை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.
முதலில் விளக்கங் காட்டியபடி இந்தி தோன்றி 150 ஆண்டுகள் கூட ஆகவில்லை. இலக்கிய வளமோ, கலைத் துறை வளர்ச்சியோ இல்லாத மொழி அது. அதைவிட முன்னேற்றமடைந்த, பழம் பெருமை வாய்ந்த மொழிகள் அதற்கு எவ்வாறு முதலிடம் அளிக்க முன் வரும்?
இந்தி பெரும்பாலோரால் பேசப்படுகிறது என்று கணக்கு கொடுக்கப்பட்டு, அந்தக் காரணத்தி னாலேயே அது இந்தியாவின் தேசிய மொழியாகவும், பொது மொழியாகவும் ஆகவேண்டும் என்று வாதிடப் படுகிறது. இந்தி என்பது ஒரு மொழிக்கு மட்டுமல்லாமல் பலவகைப்பட்ட மொழிகளுக்குக் குழுச்சொல்லாகத் தரப்பட்ட பெயர் என்பதையும், விளக்கினோம். இந்தி பெரும்பாலோரால் பேசப்படுகிறது என்று வாதிடப்படுமானால், அது தவறு என்பதை விளக்கிக் காட்ட ஒரே ஒரு சான்று போதும்.
ஏற்றதா?
1936 ஏப்ரல் திங்களில் இந்தி சாஹித்ய சம்மேளனத் தில் தலைமை வகித்த பாபு ராஜேந்திர பிரஸாத் தம் தலைமை உரையில், “புத்தகத்தில் சொல்லப்படுகிற இந்தி மொழி மிகச் சிலருடைய தாய்மொழியாகும்” என்று ஒப்புக் கொண்டுள்ளார். இதை விடப் பலமான வேறு சான்றைத் தேடவும் முடியாது; அவசியமுமில்லை. இந்தி இயக்கத்தின் இருப்பிடமாக விளங்கும் சபையில், சாதாரண சொற்பொழிவாளராகவோ, தீர்மானத்தை ஆதரிப்பவராகவோ அல்ல, தலைவராக அமர்ந்து அவர் நிகழ்த்திய தலைமை உரையில், பிரச்சாரம் செய்யப்படுகிற இந்திமொழி ஒரு சிலருடைய தாய்மொழியே என்று கூறியுள்ளார். அந்த உரையிலிருந்தே நன்கு விளங்கும், நம்மிடம் கூறப்படுகிற இந்தி, பொது மொழியாவதற்கு ஏற்றதா என்பது!
மேல்நாட்டு இந்தி, கீழ்நாட்டு இந்தி என்று பிரிக்கப்பட்ட பெரும் பிரிவுகளிலுள்ள மொழிகளில் ஒரு மொழி பேசுவோர் மற்ற மொழி பேசுவோரின் சொல்லைப் புரிந்து கொள்ள இயலாது என்று கூறப்படுகிறது. இந்த நிலை இங்கு சொல்லிக் கொடுக்கப்படும் இந்தியினை ஏந்திக் கொண்டு வடநாடு முழுவதும் எங்ஙினம் செல்ல முடியும்?
இந்தி ஆதரிப்பாளர்களால் இத்தகைய காரணங் களுக்கெல்லாம் தக்க பதில் கூற வழி வகை இல்லாத நிலையில் தென்னாட்டார் வடநாட்டாரோடு பழகவும், வடநாட்டிற்குச் சென்று வியாபாரம் செய்யவும் இந்தி மொழிப் பயிற்சி வேண்டும் என்று கூறி வாதிடுகின்றனர்.
ஏற்றுக் கொண்டுள்ளார்களா?
வடநாட்டாரோடு பழகுவதற்கு என்று தென்னாட் டிலுள்ளவர்கள் இந்தி படிக்க வேண்டுமென்று கூறுவோர், வடநாட்டிலுள்ளவர்கள் தென்னாட்டவரோடு குறிப்பாகத் தமிழகத்தாரோடு பழகுவதற்கு என்று வடநாட்டின் எந்தப் பகுதியிலாவது தென் மொழியைத் – தமிழை அவர்கள் விருப்பப் பாடமாகவாவது ஏற்றுக் கொண்டுள்ளார்களா என்பதைச் சற்று சிந்திக்கவேண்டும். வடநாட்டு மார்வாரி, குஜராத்தி, மூல்தானி, பனியா, பட்டாணி போன்றவர்கள் தென்னாடு வந்த பிறகு அவசியத்தையொட்டி, பழக்கத்தினால் தப்புந்தவறுமாகக் கற்றுக் கொண்டு தமிழகப் பகுதிகளிலும், ஏனைய திராவிட மொழிப் பகுதிகளிலும் சுற்றித்திரிகிறார்கள். அப்படியே இங்கு வருவோர் யாவரும் கற்றுத் தெரிந்துகொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. பழக்கத்தினால் தெரிந்துகொண்ட ஒருசில சொற்களை வைத்துக் கொண்டே காலங்தள்ளுகிறார்கள். அதுபோல தமிழ் நாட்டாரும், ஏனைய திராவிடப் பகுதியினரும் வடநாடு செல்ல நேர்ந்தால், சென்ற பிறகு அவசியத் தையொட்டி பழக்கத்திலுள்ள சொற்களை மட்டும் தெரிந்துகொண்டு வாழமுடியுமே. இதை விடுத்துத் தமிழ்நாட்டாரனைவரும் இந்தியைக் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறுவதன் காரணம் என்ன? தமிழ்நாட்டிலுள்ள மக்களனைவரும் அடிக்கடி அலகாபாத்துக்கும், ஆமதாபாதுக்கும், டில்லிக்கும், டார்ஜ்லிங்குக்குமாகவா சென்று வருகிறார்கள்? அப்படிச் செல்லுபவர்கள் மிகச் சிலர்தானே இருக்கமுடியும்! அவர்கள் வேண்டுமானால் அவசியத்தை யொட்டித் தாங்களாகவே விரும்பி இந்தியையோ அல்லது வேறு தேவையான மொழியையோ கற்றுக் கொண்டு செல்லட்டுமே! இங்கேயே, என்றென்றும் வாழும் வண்டியோட்டும் வரதன், குப்பை மேட்டுக் குப்பன், வயலோர வேலன், ஒற்றைக் கடை சுப்பன், வேலைக்கார முனியன் இன்னும் இவர் போன்று வேறுபல வேலைகளிலும் ஈடுபட்டிருக்கும் கோடிக்கணக்கானவர்களுக்கு இந்தி தெரிய வேண்டுமென்ற அவசியம் என்ன இருக்கிறது. எதற்காக இவர்கள் மீதெல்லாம் இந்தி கட்டாயமாகவோ, விருப்பப்பாடமாகவோ அவசியமற்ற முறையில் புகுத்தப்படவேண்டும்?
சிந்திக்க மறுக்கலாமா?
வடநாட்டில் வாணிகம் செய்ய இந்தி தேவைப் படுகிறது என்று கூறுகின்றனர். வடநாட்டிலிருந்து தென்னாட்டிற்கு வந்து வாணிகம் செய்வோரையும், தென்னாட்டிலிருந்து வடநாடு சென்று வாணிகம் செய்வோரையும் கணக்கிட்டுப் பார்த்தால் தென்னாட் டவரைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமாக வடநாட்டார் தென்னாட்டில் குடியேறியுள்ளார்கள். அவர்கள் அனைவரும் விருப்பப்பாடமாகக் கூடத் தமிழைக் கற்றுக் கொண்டு இங்கு வரவில்லை. வந்த பிறகும் கூட தமிழ்மொழியை எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் எண்ணவில்லை. இது போலவே தமிழ் நாட்டாரும் வட நாட்டிற்கு வாணிகம் செய்யச்சென்றால் இதைப் போன்று நடந்து கொள்ளுகிறார்கள். இதைச் சிந்திக்க மறுக்கும் இங்குள்ள குடுகுடுப்பைகள் மட்டும்தான் இந்தியைத் தமிழ் நாட்டாரனைவரும் கற்றுத்தீரவேண்டும் என்று ஓயாமல் கூக்குரலிட்டு வருகின்றனர்.
வடநாட்டார் படையெடுப்பு
வடநாட்டுப் பொருளாதார – வணிகப் படை யெடுப்பும், ஆதிக்கமும் தென்னாட்டில் இப்பொழுதே வலுத்துக்கொண்டு வருவதால், வடநாட்டாருக்கு எளிதான இந்தி இங்கு பரவுமேயானால் மேலும் மேலும் இந்தப் படையெடுப்பு வளர வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்பது மட்டுமல்லாமல், ஊர்தோறும் சவுக்கார்பேட்டைகள் தோன்ற வழியேற்படும், ஏராளமான பொருள் வலிவுபடுத்த வடநாட்டாரும் மேலும் மேலும் வந்து குடியேறிவிடுவார்கள். தென்னாடு – திராவிடம் – தமிழகம் என்றென்றும் நிலைத்த அடிமையாக வாழும்படி நேரிட்டுவிடும். இது வரலாறு கற்பித்துவரும் பாடமாகும்.
வட நாட்டாரோடு பழகவும், வாணிகம் செய்யவும் ஒரு மொழி கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதே நிலையில் உலகத்தோடு பழகவும், வாணிகம் செய்யவும் ஆங்கிலம் அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
உலக மொழி
விரிந்த பரந்த உலகத்திற்காக ஒரு மொழியும் வட நாட்டிற்காக மட்டும் மற்றோர் மொழியும் கற்றுக்கொள்ள வேண்டும். ஏன் இந்த வீண் வேலை? உலகத்திற்காகக் கற்றுக்கொள்ளும் மொழியையே வடநாட்டிற்கும் வைத்துக்கொள்ளலாமே! வடநாட்டிற்காக மட்டும் தனித்து ஒருமொழியைக் கற்றுக்கொள்ள நாட்டு மக்களின் நேரமும், நினைப்பும், உழைப்பும் ஆற்றலும் ஏன் வீணாகச் செலவழிக்கச் செய்யவேண்டும்? உலகத்திற்குத் தெரியும் ஆங்கிலம் வடநாட்டிற்கும் தெரியும்; ஆனால் வடநாட்டில் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் தெரியும். இந்தி, உலகில் வேறு எந்த பாகத்திற்கும் தெரியாது. இந்தி நமக்காகச் செய்ய இருக்கும் உதவியைப் போல் ஆயிரம் மடங்கு அதிகமாக ஆங்கிலத்தால் செய்யமுடியுமே! எனவே இந்தி வாணிகத்திற்குப் பயன்படுவதாகும் என்று கூறும் கூற்றும் அர்த்தமற்றதாகிறது!