சென்னை, மார்ச் 23 நாடாளு மன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேற் கொண்டு உள்ள கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் பல மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது.
தலைவர்களின் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிகழ்வு பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. சென்னையில் நேற்று (22.3.2025) நடைபெற்ற கூட்டுக் குழு நடவடிக்கை கூட்டத்தில் பங்கேற்கும் வெளி மாநில தலைவர்களுக்கு அந்தந்த மாநில மொழிகளில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.
தலைவர்களின் இருக்கைகளில் அந்த அந்த மாநில மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒடிசா மொழிகளில் பெயர்கள் பொறிக்கப்பட்டு இருந்தது. இது இந்திய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த முதலாவது முயற்சி ஆகும்.
ஒன்றிய அரசு மாநில முதலமைச் சர்களின் கூட்டம், இதர மாநில அமைச்சர் அதிகாரிகள் கூட்டம் போன்றவை நடத்தும் போது ஹிந்தி ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்களை வைத்திருக்கும்.
இது தொடர்பாக 2026 ஆம் ஆண்டு கேரள நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் கேள்வி எழுப்பி இருந்தார். அப்போது பொது மொழி ஆங்கிலம், அரசு தொடர்பு மொழி ஹிந்தி ஆகவே இரண்டு மொழிகள் மட்டுமே போதுமானது என்று அன்றைய மனித வளத்துறை அமைச்சரகம் பதில் கூறி இருந்தது.
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் ஹிந்தி மட்டுமே பயன்படுத்தப் பட்டது, அதிலும் இந்தியா என்ற பெயரை தவிர்த்து விட்டு பாரத் என்று ஹிந்தியில் எழுதப்பட்டிருந்தது. இதற்கும் பிரதமர் அலுவலகம் விளக்கம் கூறியபோது உலக அரங்கில் இந்தியாவைப் பெருமைப்படுத்தும் விதமாக என்று கூறியிருந்தது.
கடந்த அதிமுக ஆட்சியில் சென்னையில் நடந்த ஒன்றிய அரசு சார்பான கூட்டத்தில் முதல் முதலாக ஹிந்தியில் பெயர் எழுதி வைத்தி ருந்தார்கள். இது கடுமையான கண்டனங்களை எதிர்கொண்ட போது இந்த நிகழ்ச்சியை நடத்திக்கொடுக்கும் நிறுவனம் ஏற்ெகனவே வட இந்தியாவில் நடக்க இருந்த கூட்டத்திற்காக தயார்
செய்யப்பட்ட பெயர் பட்டியலை இங்கு கொண்டுவந்துவிட்டது. என்று சாக்குப்போக்கு கூறியிருந்தது.
இந்த நிலையில் நேற்று சென் னையில் நடந்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு அவரவர் மொழிக்கு மரியாதை அளிக்கும் வகையில் அவரவர் மொழியில் பெயர்ப் பலகைகளை வைத்திருந்தது இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது.