சென்னை, மார்ச் 22- திமுக அரசின் வேளாண் திட்டங்களால் கடந்த 4 ஆண்டுகளில் 5.35 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்று சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று (21.3.2025) பேசியதாவது:
வேளாண் திட்டம்
திமுக அரசின் வேளாண் திட்டங்களால் கடந்த 4 ஆண்டுகளில் 5.35 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர். நெல் ஊக்கத் தொகைக்கு மட்டும் ரூ.1,538 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பயிர் காப்பீடு திட்டம் மூலம் 5,679 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். 23.68 லட்சம் இலவச விவசாய மின்இணைப்புகள் வழங்கப்பட்டு, அதற்காக ரூ.26,724 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் ‘மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம்’ திட்டத்தின்கீழ் ரூ.135 கோடியில் 4 ஆயிரம் பசுந்தாள் உர விதைகள் வழங்கப்பட்டன. ரூ.508 கோடியில் 55,574 வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாங்கி, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊராட்சிகளுக்கு ரூ.787 கோடி ஒதுக்கப்பட்டு, 50.70 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
ரூ.282 கோடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் புதுப்பித்தல், கட்டமைத்தல் பணிகள் செய்யப் பட்டுள்ளன.
புதிய வேளாண் கல்லூரிகளில் 3 ஆயிரம் மாணவர்களை கூடுதலாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, மேலும் 4 புதிய வேளாண் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
விவாதத்தின்போது உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டம் தேவாலா, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால், அங்கு அமைக்க திட்டமிடப்பட்டிருந்த மலர் பூங்கா, நீலகிரி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஒன்றிய அரசு நிதியுதவியுடன் ரூ.70 கோடியில் அமைக்கப்படும்.சாகுபடி பரப்பு குறைந்துள்ளதாக சில உறுப்பினர்கள் கூறினர்.
தமிழ்நாட்டில் மொத்த சாகுபடி பரப்பு கடந்த 2019-2020ஆம் ஆண்டு 1.46 கோடி ஏக்கராக இருந்தது. 2023-2024ஆம் ஆண்டு 1.51 கோடி ஏக்கராக உயர்ந்துள்ளது. சுமார் 4.23 லட்சம் ஏக்கர் பரப்பு அதிகரித்துள்ளது.
உணவு தானிய உற்பத்தி
வனத்துறை வெளியிட்ட அரசாணை அடிப்படையில், வனத்துறை மூலம் காட்டுப் பன்றியை சுட்டுக்கொல்வதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஒன்றிய அரசின் அட்டவணை 2இல் இருந்து காட்டுப் பன்றியை நீக்க, பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் உரிய ஆணை பெற்றுத்தரும் பட்சத்தில் உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பன்னாட்டு கொய்மலர் ஏல மய்யமும், தளியில் கொய்மலர் மகத்துவ மய்யமும் அமைக்கப்படும். தளியில் நறுமண ரோஜாவுக்கான சிறப்பு திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது.
உணவு தானிய உற்பத்தி திறன் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஹெக்டேருக்கு சராசரியாக 2,876 கிலோ என இருந்தது. 2021-2024 வரையிலான திமுக ஆட்சியில் இது 2,980 கிலோ என்று அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.