சென்னை – திருச்சி, பெங்களூர்-கொல்கத்தா நெடுஞ்சாலைகள் 10 வழிச் சாலைகளாக மேம்படுத்தப்படுமா? மக்களவையில் தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்

2 Min Read

புதுடில்லி, மார்ச் 22- நாளுக்குநாள் பல்கிப் பெருகி வரும் வாகனப் போக்குவரத்தை கணக்கில் கொண்டு சென்னை- திருச்சி, சென்னை-பெங்களூரு, சென்னை-திருப்பதி மற்றும் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைகள் 60 கிலோமீட்டர் தொலைவு வரை 10வழிச் சாலைகளாக தரம் உயர்த்திட ஒன்றிய அரசு முன்வருமா? என்ற கேள்வியை நாடாளுமன்ற மக்களவையில் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப் பினர் டி.ஆர்.பாலு எழுப்பி இருந்தார்.

10 வழிச் சாலைகள்

இதற்கு கடந்த 20ஆம் தேதி ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்து பேசும்போது, இத்தகைய கோரிக்கைகள் அரசுக்கு வந்தவண்ணம் உள்ளன. அவற்றின் மீதான முடிவு குறிப்பிட்ட சாலையில் போக்குவரத்து அடர்த்தி, நெடுஞ்சாலை இணைப்புக்கான அவசியம், முன்னுரிமை தேவை, பிரதமர் கதிசக்தி திட்டத்துடனான இயைபு போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப் படையில் எடுக்கப்படுகின்றன. வினாவில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை நெடுஞ் சாலைகள் மேம்பாட்டுத் திட்ட முன் மொழிவுகள் தொடர்பாக தற்போது ஒன்றிய அரசின் பரிசீலனையில் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

திருப்பெரும்புதூர்- சுங்குவார் சத்திரம்-வாலாஜாபாத் சாலை
நீண்ட தாமதத்துக்குப் பிறகும் நிறைவடையாத திருப்பெரும்புதூர் – சுங்குவார்ச்சத்திரம் – வாலாஜாபாத் சாலைப் பணிகள் எப்போது முடிவடை யும் என்ற மற்றுமொரு கேள்வியையும் டி.ஆர்.பாலு,எம்.பி. நாடாளுமன்றத்தில் கேட்டிருந்தார். இந்தக் கேள்விக்கும் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் பூந்தமல்லி- வாலாஜாபாத் சாலைப் பகுதியை ஆறுவழிப் பகுதியாக தரம் உயர்த்திட மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகள் ஜூன், 2012இல் தொடங்கப்பட்டன. சுங்கச் சாலையாக அமைத்து இயக்கிட இந்த திட்டம் எஸ்ஸெல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால் உரிமைதாரரான எஸ்ஸெல் நிறுவனம் திட்டப் பணிகளை உரிய முறையில் நிறைவேற்றத் தவறிய காரணத்தால் உரிம ஒப்பந்தம் ஜூலை 2016 ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் திருப்பெரும்புதூர்- காரைப்பட்டி, காரைப்பட்டி-வாலாஜாபாத் என திருப்பெரும்புதூர் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் திருப்பெரும்புதூர்-காரைப்பட்டி சாலைப் பணிகள் 2025 ஏப்ரல் இறுதியிலும், அடுத்த பகுதியான காரைப்பட்டி-வாலாஜாபாத் சாலைப் பணிகள் 2026 அக்டோபர் மாதத்திலும் நிறைவடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *