பொதுமொழி தேவை என்பதற்கு இந்தி ஆதரிப் பாளர்கள் கூறிய காரணங்கள்: ஒன்று, விடுதலைப் போராட்டத்தில் மக்களனைவரையும் ஒன்றுபடுத்த ஒரு தேசியமொழி தேவை என்பதும் இரண்டாவது, நாடு விடுதலையடைந்ததும் சுதந்திர நாட்டு அரசியல் விவகாரத்துக்கு அதுவே பொது மொழியாக வேண்டும் என்பதுமாகும்.
பொது மொழி?
இந்த இரண்டு காரணங்களில் முதல் காரணம் இன்று அழிந்துவிட்டது. தேசியமொழி ஒன்று இந்தியாவெங்கும் பொது மொழியாவதற்கு முன்பே, பலதிறப்பட்ட மொழிகள் வழங்குங் காலத்திலேயே தேசியமல்லாத அந்நிய மொழியின் உதவியின் பேரிலேயே இந்தியாவுக்கு விடுதலை வழங்கப்பட்டாகிவிட்டது; வெள்ளையதிகாரம் வெளியேறி விட்டது. வேண்டிய சுதந்திரம் மொழி யின்றியே வந்து விட்டது. எனவே அக்காரணம்பற்றி இனிப்பொது மொழி தேவையில்லை.
விடுதலை கிடைத்த பிறகு, இரண்டாவது காரணந்தான் அதிகமாகக் காட்டப்படுகிறது. அரசியல் அலுவல்களுக்காகத் தேசியப் பொதுமொழியைக் கட்டாயமாக எல்லோரும் கற்கவேண்டும் என்று வற்புறுத்திச் சொல்லப்படுகிறது.
அவசியமில்லை
ஒன்றுபட்ட அரசியலமைப்பின்கீழ் பலமொழி வழங்கும் மக்கட் பகுதிகளும் வாழவேண்டும் என்ற அவசியத்திற்காக, ஒரே மொழிதான் அரசியல் மொழியாக வேண்டும் என்ற நியதி கிடையாது. பல்வேறு மொழியின் நாடுகளைக் கொண்ட இந்தியா ஒரே ஆட்சிமுறையோடு இருக்க விரும்புகிறது என்று வைத்துக்கொண்டாலும், அரசியல்மொழி ஒன்றாகத்தான் எங்கணும் நிலவ வேண்டும் என்ற அவசியமுமில்லை.
எடுத்துக்காட்டாக அய்ரோப்பாவில் மிகச் சிறிய நாடு சுவிட்சர்லாந்து. அந்த நாட்டின் மக்கள் எண்ணிக்கை 42 லட்சமாகும். அங்கு நான்கு மொழிகள் சரி சமமாக அரசியல் மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் அரசியல் அலுவல் எதுவும் தடைப்பட்டு விடுவதாக அறியக் கூடவில்லை.
அரசியல் மொழி
42 இலட்சம் மக்கள் ஒன்றி வாழும் சிறிய நாட்டிலேயே அரசியல் மொழி நான்கு என்று ஏற்றுக் கொள்ளப்படும்போது, ஏறத்தாழ 30 கோடி மக்கள் எண்ணிக்கையுடைய, மொழி வாரிப் பகுதிகளாகப் பெரும் பரப்புகள் பிரிந்து நிற்கக்கூடிய இந்தியத் துணைக்கண்டத்தில் உண்மையில் எத்தனை அரசியல் மொழிகள் கொள்ளப்படவேண்டும். அந்தந்தப் பகுதிமொழி அந்தந்தப் பகுதி அரசியல் மொழிகளாக ஆக வேண்டியது தானே இயற்கையான முறையாகும். இந்த மொழி வாரி மாகாண ஆட்சிகளைக் கண்காணிக்க இருக்கும் மத்திய அரசாங்கத்திற்கு ஒரு பொதுமொழி தேவைப்படுகிறது என்றால், அந்தப் பொது மொழியை மொழிவாரி மாகாண மக்களனைவரும் கட்டாயமாகக் கற்றுத்தீரவேண்டும் என்று என்ன அவசியமிருக்கிறது? ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கும் மொழிவாரிப் பகுதிகளுக்குச் சுதந்திர உரிமை உண்டு என்ற அடிப்படையில் மத்திய ஆட்சி அமைக்கப்படுமேயானால், அந்த மத்திய ஆட்சி தன் நலத்திற்கென்று கொள்ளும் ஒரு பொதுமொழியை மொழிவாரிப் பகுதிகளில் சுமத்த விரும்பாது. மாறாக வலுக்கட்டாயமாகப் புகுத்த முற்படுமேயானால், அந்த மத்திய ஆட்சி பாஸிஸப் போக்கு கொண்டதாகும் என்றுதான் பெறப்படும். இந்தப் பொது இலக்கணப்படி பார்த்தால் இந்தியா துணைக் கண்டத்திற்கு ஒரே அரசியல் பொது மொழி தேவையில்லை; கூடவுங்கூடாது என்பது தெளியப்படும்.
சிந்தித்துப் பாருங்கள்
இந்தியாவில் தற்பொழுது 30 கோடி மக்கள் கனடா வில் 1 கோடி 50 லட்சம் மக்கள். அங்குள்ள அரசாங்கம் இரண்டு மொழிகளில் நடக்கின்றது. இந்த நிலையில் இந்தியா மட்டும் ஏன் ஒரே அரசியல் பொது மொழியில் நடைபெறவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது? சிந்தித்துப் பார்க்கவும்.
தேவையானால் இன்னும் சில எடுத்துக்காட்டுக்கள். தென் ஆப்பிரிக்கா யூனியனில் 1 கோடி 13 லட்சம் மக்கள். அதற்கு இரண்டு அரசாங்க மொழிகள்.
ஆப்கானிஸ்தானத்தின் குடிமக்கள் 1 கோடி 20 லட்சம். அங்கு இரண்டு மொழிகள் அரசியல் முதன் மொழிகளாக விளங்குகின்றன.
பக்கத்திலிருக்கும் இலங்கைத் தீவில் ஆங்கிலம், தமிழ், சிங்களம் மூன்றும் அரசியலில் உரிமை பெற்றுள்ளன.
பொருளற்ற வாதம்
எனவே அரசியல் அலுவல்கள் ஆற்ற ஒரே மொழிதான் வேண்டும் என்பது பொருளற்றது. நாம் மேலே குறிப்பிட்ட நாடுகளில் பல மொழிகள் இருப்பதால் எத்தகைய இடையூறும் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த நாடுகளைவிட இந்தியா எத்தனையோ மடங்குகள் மக்கள் எண்ணிக்கையிலும், நிலப்பரப்பிலும் பெரிது. ஆனால் அந்த நாடுகளின் பல்வேறு மொழியினரிடைக் காணப்படும் பெருந் தன்மை மட்டும் இந்தப் பெரு நாட்டிற்கு இல்லாமற் போவானேன்?
அவசியமில்லை
சுவிட்சர்லாந்துக்குள்ளேயே பெர்ன் என்ற இடம் இருக்கிறது. அங்கு மட்டும் இரண்டு மொழிகள் அரசியல் மொழிகளாக வழங்குகின்றன. அந்தப் பெர்ன் இடத்தைவிட இந்தியா ஆயிரம் மடங்கு பெரியதாக இருக்கும். அந்தச் சிறு இடத்தில் நடத்திக்காட்ட முடிகிற அரசியலை இப்பெருங்கண்டம் நடத்திக்காட்ட முடியும், பிடிவாதமில்லை யென்றால்; ஒத்துவாழ வேண்டுமென்ற மனமிருந்தால்; நேர்மையோடு நடக்க எண்ணம் ஏற்பட்டால்!
இந்தியாவிற்கு ஒரே அரசியல் பொதுமொழி வேண்டுமென்போர் கூறும் காரணங்களிலே ஒன்று அர்த்தமற்றதாகி விட்டது; மற்றொன்று அவசிய மற்றதாகி விட்டது.