– மு.வி.சோமசுந்தரம்
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை உடும்புப் பிடியாக மக்களின் இரும்புக் கரங்களில் உள்ளது. தமிழரின் உயிர் நிகர் தமிழ்மொழி ஒன்று, அடுத்து ஆங்கிலம்.
‘திராவிடக் குடில்’ என்ற எழில்மிகு இல்லத்துக்கு அழகுடன் அமைந்த நுழைவு வாயில் தமிழ்மொழி. மொழி, கலாச்சார அழிப்புத் திருடர்களின் திட்டங்களுக்கு வாயில் கதவுக்குப் பாதுகாப்புப் பூட்டு ஆங்கில மொழி. சமற்கிருதம், ஹிந்தி என்ற திருடர்கள் புகுந்து வீட்டையே விழுங்கி விடுவார்கள் என்று பூட்டின் அவசியத்தை தந்தை பெரியார் வலியுறுத்திச் சென்றுள்ளார்.
அறிவை விசாலமாக்க…
வெள்ளி நாக்கு (Silver Tongue) சீனிவாச சாஸ்திரி, ஆர்க்காடு இராமசாமி, டாக்டர் கிருஷ்ணசாமி, அறிஞர் அண்ணா போன்றோர் ஆங்கில மொழி வல்லுநர்களாக வலம் வர உதவியது இந்தப் பூட்டு. தமிழ்நாட்டுக்கு பாதுகாப்பு வேலியாக ஆங்கிலம் தேவைப்பட்டது. அதே வேளையில் உலகப் பார்வையை – அறிவை விசாலமாக்க வழிவகுத்தது.
தமிழ்நாட்டின் பார்வைக்கு ஒத்த வகையில் ஜப்பான், சீனா போன்ற நாடுகள் ஆங்கில மொழியை, நாட்டின் தொழில், வளர்ச்சி அணுகுமுறையில் அணைத்துப் பிடித்துள்ளனர் (Utility Volume). அத்தகைய அணுகுமுறை சில கபோதிகளின் கண்களைத் திறக்க உதவும் வகையில், ஜப்பான், சீனா நாடுகளில் ஆங்கிலம் பெற்றுள்ள முக்கியத்துவம் வருமாறு:
ஜப்பான் என்றவுடன், அணுகுண்டினால் அந்நாட்டிற்கு ஏற்பட்ட அழிவையும், மக்கள் மீண்டெழுந்ததும் நினைவுக்கு வரும். சின்னஞ்சிறு நாடாக இருந்தாலும் பாரில் சீர்மிகு நாடாகப் பேசப்படுகிறது. கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் அண்மையில் அந்நாட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு நிகழ்த்திய உரையே இதனைப் பகரும். மேலும் ஜப்பானியக் குழந்தைகளுக்கு ஆரம்பப் பள்ளியிலேயே ‘விடா முயற்சியைக் கைவிடாதே’ (CANBARU) என்ற சொல்லை உள்ளத்தில் பதிய வைக்கின்றனர். திருக்குறள் இதை ‘முயற்சித் திருவிணையாக்கும்’ என்கிறது.
ஜப்பான் நாடு, நான்குப் பெரியத் தீவுகளையும் மற்றும் பல சிறு தீவுகளையும் கொண்ட நாடு. நிலப் பரப்பும் குறைவு. வடக்குத் தெற்காக 3000 கி.மீ. நீளமே கொண்ட நாடு.
ஜப்பானில்…
ஜப்பானின் மொழி மூன்று வகையான எழுத்து வடிவங்களைக் கொண்டது. சீன மொழியினுடன் பெரிதும் தொடர்பு கொண்டது. அம்மொழி, ஆங்கிலம், பிரஞ்சு, போர்ச்சுகீஸ், கொரியன், இத்தாலியன், ஜெர்மன் மொழிகளிலிருந்து சொற்களை கடன் வாங்கியுள்ளது.
உலக அரங்கில் தொழில், உற்பத்தி, வணிகம் போன்றவற்றில் உரிய உயரிடத்தைப் பெற ஆங்கில மொழி அறிந்திருக்க வேண்டியதன் அவசியத்தை ஜப்பானியர் உணர்ந்துள்ளனர்.
8.7.2018 தேதியிட்ட ஆங்கில ‘தி இந்து’ இதழில், ஜப்பானியத் தொழில் நிறுவனங்களில் ஆங்கில மொழிப் பயன்பாடு எந்த அளவுக்கு அத்தியாவசியமாகியது என்பது பற்றி எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம் வருமாறு:
“ரங்கூடன் என்ற ஜப்பானியத் தொழில் நிறுவனம் அந்நாட்டின் முக்கியமானதொரு நிறுவனம். அமேசான் போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடக் கூடியது. அதில் 10,000 ஊழியர்கள் பணியில் உள்ளனர். இவர்களுள் 24 விழுக்காடு ஊழியர்கள் 76 நாடுகளைச் சேர்ந்த அயல்நாட்டவர்கள். இவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் உரையாடுகிறார்கள். மீதமுள்ளவர்கள் ஆங்கில மொழியில் பேச முடியாதவர்கள். இந்நிலையில் 2010ஆம் ஆண்டு ஒரு மொழிப் புரட்சி அந்த நிறுவனத்தில் ஏற்பட்டது. நிறுவனத்தின் செயவைத் தலைவர் ஹிக்கோவத மிக்கித்தானி, ஊழியர்கள் கூட்டமொன்றைக் கூட்டி, அவர்களிடையே ஆங்கிலத்தில் உரையாற்றினார். ”இன்றிலிருந்து நமது ரங்கூடன் நிறுவனம்’ அதன் வழக்கு மொழியாக ஆங்கிலத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. ஊழியர்கள் இரண்டாண்டு காலத்துக்குள், ஆங்கில மொழித் திறமை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் பதவி கீழிறக்கத்தை சந்திக்க வேண்டி வரும்” என்றார்.
ஆங்கிலப் பயன்பாடு
இந்த வியத்தகு அறிவிப்பை மிக்கித்தானி அறிவித்ததற்குக் காரணம், ஆங்கிலம் இல்லாமல் அவருடைய நிறுவனம், உலக அளவில் வலுவாக இயங்க முடியாது என்பதை நன்கு உணர்ந்தார். இந்த அறிவிப்பை அவர் முன் கூட்டியே அறிவிக்காத போதிலும், மறு நாளே, நிறுவனத்தில் உள்ள உணவகங்களில் உணவு வகைப் பெயர் பட்டியல், மின் தூக்கி இடத்து அறிவிப்புப் பலகைகளில் இருந்த ஜப்பானிய எழுத்துகளை நீக்கி ஆங்கில மொழியாக்கப்பட்டது. அத்துடன் நிர்வாகக் கூட்டங்கள் பயிற்சிக் கூட்டங்கள் ஆங்கிலத்தில் நடந்தன. நிறுவனத்தின் ஆவணங்கள் மின்னஞ்சல் ஆகிய அனைத்தும் நிர்வாக எல்லைக்குள் முழுமையாக ஆங்கில மொழிக்கு மாறின. நிறுவன ஊழியர் அவர்தம் ஓய்வு நேரத்தில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். அதைத் தொடர்ந்து நிர்வாகமே, ஊழியர்களுக்கு, ஆங்கில மொழிப் பயிற்சி, இ-பயிற்சி, வாட்ஸ்அப் ஆகியவற்றில் பயிற்சி அளித்தது. இச்செயல்பாட்டால், இன்று ரங்கூடன் தொழிற்சாலை முழுமையாக ஆங்கில மொழிப் பயன்பாட்டில் வந்தது.
உலகத் தேவை
ஹார்வார்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் டிசிதவ் நீயிலி கூறுகையில், “ரங்கூடன் தொழிற்சாலை, ஆங்கில மொழியைப் பயன்பாட்டில் கொண்டு வந்தது. உலகத் தேவையைக் கருத்தில் கொண்டது” என்ற கூறுகிறார். ஜப்பானியர்கள் தங்களின் வழக்கமான நிதானத் தன்மைக்கு மாறாக தொழிற்சாலை ஊழியர்களின் முடிவு அவர்களின் மனத் திட்பத்தைக் காட்டுகிறது.
ஜப்பானின் பல தொழிலதிபர்கள், துவத்தில் மிக்கித்தானின் துணிவைப் பார்த்து கேலி செய்தனர். ஹோண்டா நிறுவன செயலவைத் தலைவர், “ஜப்பானியத் தொழிலாளர் இனம், ஜப்பானிய மொழியில் திளைத்திருக்கும்போது, நாட்டின் தொழிற்சாலையில் ஆங்கில மொழியைப் புகுத்தியது முட்டாள்தனம்” என்று கூறினார்.
ஆனால், சில ஆண்டுகள் கழித்து, ஹோண்டா நிறுவனம் அதன் திட்டத்தை வெளியிட்டது. அதன்படி 2020க்குள், உலகத் தொடர்புக்கு ஆங்கிலத்தைத் தன் நிர்வாகத்தில், அதன் நிர்வாக மொழியாக்குவதாகக் என்று கூறினார். அதைத் தொடர்ந்து, பிரிட்றிஸ்கோன் என்ற ‘டயர் ’ நிறுவனமும் ஆங்கிலத்தை நிர்வாகத்தில் பயன்பாட்டு மொழியாக அறிவித்தது.”
அடுத்து, ஆகஸ்ட் 16, 1971ஆம் ஆண்டு ‘தி இந்து’ ஆங்கில இதழில் வந்த செய்தி ஆங்கில மொழி பரவிய வேகத்தைக் காட்டுகிறது.
சீனாவில்
சீன நாட்டுப் பிரதமர் சூயென்வாய் ‘நியூயார்க் டைம்ஸ்’ (The New York Times) இதழின் செய்தியாளர் ஜேம்ஸ் ரெஸ்டோனிடம், ஆங்கிலம் சீனாவின் இரண்டாம் மொழியாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். சீனப் பிரதமரின் இந்த அறிவிப்பு கிழக்காசிய நாடுகளில், ஆங்கிலம் கற்பதில் ஒரு வேகத்தை உண்டாக்கும். கடந்த மூன்றாண்டுகள் வரை ரஷ்ய மொழி, சீனாவில் விரும்பப்பட்ட அயல்நாட்டு மொழியாக இருந்தது. சீனாவின் மய்யப் பகுதியில் ஆங்கிலம் கற்பதில், ‘பிம்பாங்’ அரசியல் உறவு துவங்குவதற்கு முன்னதாகவே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
அடுத்து, நாள்தோறும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் செய்திகளை வெளிட்டும், விமர்சனத்துக்கு வரும் செயல்களை செய்து வரும் அமெரிக்க அதிபர், டிரம்ப் அவர்கள் பிப்ரவரி மாத இறுதியில், அமெரிக்காவின் ஆட்சி மொழி என்ற அங்கீகாரத்தை ஆங்கில மொழிக்கு வழங்கும் ஆணையில் கையெழுத்திட உள்ளதாக 2.3.2025 ஆங்கில ‘தி இந்து’வில் செய்தி உள்ளது.
உலகம் உணர்ந்த ஓர் உண்மையை தமிழ்நாட்டு மக்களின் தேவைக்கு சேவை செய்யும் சேவகனான ஆங்கில மொழியை அடையாளம் காட்டிய அறிஞர் அண்ணாவின் புகழைப் போற்றுவோம்.
“அறிவுடையார் ஆங்கிலமும் அறிவார்
அஃதிலார் ஆதங்கப்பட்ட லைவர்.”
சிங்கப்பூரில்
ஆதங்கப்பட்டுஅலையும் நிலை தன் நாட்டிற்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில் சிங்கப்பூரின் சாதனையாளர் லீ குவான் யூ ஆங்கில மொழிக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்தை, தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தாம்பரம் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் (23.2.2025) சுட்டிக் காட்டத் தவறவில்லை.
ஆங்கில மொழியை அறிந்திருப்பதால், எங்கள் மக்கள், விரைவாக பணி நியமனத்தைப் பெறுகின்றனர். பல நாட்டுத் தொழில் நிறுவனங்கள் இங்கு அமைக்கும் தொழிற்சாலைகள், ஆராய்ச்சிக் கூடங்களில் பணியாற்ற, ஆங்கில மொழியை சரளமாகப் பேசவும், எழுதவும் தெரிந்த தொழிலாளிகளே தேவை என்கின்றனர்.
(Knowing English has also enabled our people to secure jobs much faster)
இனியும் கூற வேண்டுமோ ஆங்கில மொழியின் பயன்பாட்டை?