பாணன்
தொல்லியல் ஆய்வாளரான ஜான் ஹுபர்ட் மார்ஷலின் சிலை சென்னை எழும்பூர் அருங்காட்சிய வளாகத்தில் நிறுவப்பட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மார்ச் 19ஆம் தேதியன்று திறந்துவைத்தார்.
சென்னையில் சிலை
ஜான் மார்ஷலுக்கு சென்னையில் ஒரு சிலை நிறுவப்படும் என்று சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டதன் நூற்றாண்டு நிறைவு தருணத்தில் முதலமைச்சர் அறிவித்திருந்தார் . அதன்படி, தற்போது எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
ஜான் ஹுபர்ட் மார்ஷல் பிரிட்டனை சேர்ந்த ஒரு தொல்லியலாளர். இந்திய தொல்லியல் கழகத்தின் இயக்குநராக சுமார் 26 ஆண்டுகள் பணியாற்றியவர். இவருக்கு தமிழ்நாட்டில் சிலை வைக்க தமிழ்நாடு அரசு ஏன் முடிவெடுத்தது?
கிழக்கிந்தியர்களின் ஆளுமையின் கீழ் இருந்த 1700களின் இறுதி காலகட்டத்தில் பல ஆங்கிலேய அறிவியல் ஆர்வலர்கள் புத்தரின் அடையாளங்களைத் தேடி அலைந்தனர்.
அப்போது கிடைத்த தகவல்களை ‘நரேட்டிவ் ஆஃப் வேரியஸ் ஜர்னிஸ் இன் பலூசிஸ்தான், ஆப்கானிஸ்தான் அண்ட் தி பஞ்சாப்’ (Narrative of Various Journeys in Baluchistan, Afghanistan, and the Punjab) நூலில் பதிவு செய்துள்ளனர்.
ரயில் பாதைக்கு.
1848-1849இல் பஞ்சாப் மாகாணம் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் கொண்டுவரப்பட்ட பிறகு, இந்தப் பகுதி கராச்சி – லாகூர் ரயில் பாதையை அமைக்க 4000 ஆண்டு பெருமைவாய்ந்த அடையாளம் என்று தெரியாமல் லட்சக்கணக்கான செங்கற்கள் அள்ளிச் செல்லப்பட்டன.
இந்தியாவின் நிர்வாகம் கிழக்கிந்திய கம்பெனியிட மிருந்து நேரடியாக பிரிட்டன் ஆட்சியின் கீழ் வந்த பிறகு தொல்லியல் துறை கூடுதல் கவனத்தைப் பெற ஆரம்பித்தது.
1861இல் இந்திய தொல்லியல் கழகம் உருவாக்கப் பட்டது. அதன் முதல் இயக்குநர் ஜெனரலாக அலெக்ஸாண்டர் கன்னிகம் நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பே ஹரப்பாவை பார்த்திருந்த அவர், மீண்டும் அந்தப் பகுதிக்குச் சென்று ஆராய்ந்தார். ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட சீனப் பயணியான யுவான் சுவாங் குறிப்பிட்ட பவுத்த தலமாக அது இருக்கலாம் என அலெக்ஸாண்டர் கருதினார்.
புத்தர் காட்டிய திராவிட நாகரிக அடையாளம்
அங்கு கிடைத்த ஒரு முத்திரையில் இருந்த எழுத்துகளை புத்தர் காலத்தைச் சேர்ந்தது என அவர் கருதினார்.
இதற்குப் பிறகு, இந்தப் பகுதி மீது பெரிய கவனம் திரும்பவில்லை. 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவின் புதிய வைசிராயாக நியமிக்கப்பட்ட கர்ஸான், ஏஎஸ்அய்யின் இயக்குநர் ஜெனரலாக ஜான் மார்ஷலை நியமித்தார்.
இந்நிலையில், 1914இல் லூஜி பியோ டெஸ்ஸிடோரி என்ற இத்தாலிய ஆய்வாளர் இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் கதைகளைச் சேகரித்துவந்தார். அவருக்கு மார்ஷல் நிதி உதவியைச் செய்துவந்தார். காலிபங்கன் பகுதியை ஆய்வுசெய்த அவர், அங்கு சில முத்திரைகளையும் வேறு சில தொல்பொருட்களையும் கண்டெடுத்தார். இதைப் பற்றி ஜான் மார்ஷலுக்கு எழுதினார்.
பகுத்தறிவுவாதி தயா ராம் சாஹ்னி
ஏற்கெனவே இந்தியாவில் தட்சசீலம், நாளந்தா, பாடலிபுத்திரம், சாரநாத், சாஞ்சி உள்ளிட்ட இடங்களில் ஆய்வுகளை நடத்தியிருந்த ஜான் மார்ஷல், மொஹஞ்சதாரோவிலும் ஒரு தொல்லியல் ஆய்வை நடத்த தயா ராம் சாஹ்னி என்ற தொல்லியல் அதிகாரியிடம் இந்தப் பணியை ஒப்படைத்தார்
தயாராம் சஹானி தீவிரமான பகுத்தறிவுவாதி, பவுத்த சமயம்குறித்து ஆர்வம் மிகுந்தவர். ஆகையால் ஜான் மார்ஷல் இவரை தேர்ந்தெடுத்தார்.
இதற்கு முன்பு பல இந்திய அகழாய்வு நிபுணர்கள் என்று கூறிகொள்ளும் நபர்களிடம் கொடுத்த போது அவர்கள் சமஸ்கிருத பண்டிதர்களாகவும் பிற எழுத்துக்களை படிக்க முடியாமல் காட்டுவாசிகளின் மொழி என்று கூறியதால் அவர்களிடமிருந்த அகழாய்வு பொறுப்பை தயாராம் சஹானியிடம் கொடுத்தார். ஜான் மார்ஷல். 1917இல் ஹரப்பாவுக்கு சென்ற சாஹ்னி, அந்தப் பகுதியைப் பார்வையிட்டு, நிலத்தை கையகப்படுத்தி முடிக்க நான்கு ஆண்டுகளானது, 1921இல் தான் பணிகளை முடித்தார்.
அகழாய்வுகள்
இதற்குப் பிறகு, 1921ஆம் ஆண்டு ஜனவரியில் அகழாய்வுகள் அங்கே துவங்கின. இதற்கிடையில், ஹரப்பாவுக்கு தெற்கே இருந்த மொஹஞ்சதாரோ பகுதியும் கவனத்தைக் கவர்வதாக இருந்தது. அந்தப் பகுதியில் ஆய்வு நடத்த ஆர்.டி.பந்தர்கர், ஆர்.டி.பானர்ஜி, எம்.எஸ்.வாட்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.கடந்த 1923ஆம் ஆண்டில் ஆர்.டி. பானர்ஜி ஜான் மார்ஷலுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். மொஹஞ்சதாரோ மிகப் பழைமையான ஓர் இடம் எனக் குறிப்பிட்ட அவர், இங்கு கிடைத்த சில தொல்பொருட்கள் ஹரப்பாவில் கிடைத்த பொருட்களுடன் ஒத்துப் போவதாகக் குறிப்பிட்டார்.
பிறகு, எம்.எஸ்.வாட்ஸும் இரு இடங்களிலும் கிடைத்த சில முத்திரைகள், குறியீடுகள் ஆகியவை ஒத்துப்போவதாக ஜான் மார்ஷலுக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து, இரு இடங்களிலும் கிடைத்த தொல்பொருட்கள் குறித்த தகவல்களை, ஓரிடத்துக்குக் கொண்டுவரச் செய்து பானர்ஜி, சஹானி போன்றோரையும் இணைத்து விவாதித்தார்.
பழைமையானவை
அந்த விவாதத்தில் சில விடயங்கள் அவருக்குத் தெளிவாகப் புரிந்தன. அதாவது, ஹரப்பாவும் மொஹஞ்சதாரோவும் ஒரே தொல்லியல் தலத்தின் வெவ்வேறு இடங்கள். தவிர, இந்த இடங்கள் இந்தியாவில் இதுவரை கிடைத்த தொல்லியல் தலங்களிலேயே பழைமையானவை, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. அதையடுத்துத்தான் ஒளிப்படங்களோடு ‘தி இல்லஸ்டிரேட்டட் லண்டன் நியூஸ்’-க்கு (The Illustrated London News) எழுதினார். அந்த முடிவுகள்தான் 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி இதழில் வெளியாயின.
“சிந்து வெளிப் பண்பாடு கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்தவரையில் பண்பாடு, நாகரீகம் போன்ற சொற்களோடு தொடர்புடைய எந்த விடயத்தையும் வேத காலத்துடனும் அதன் அறிவுப் புலத்தோடும் இணைத்துப் பேசுவதே வழக்கமாக இருந்தது. ஹரப்பாவிலும் மொஹஞ்சதாரோவிலும் வெளிப்பட்ட பண்பாட்டுச் சிதைவுகள் அத்தகைய கருத்தாக்கங்களை கேள்விக்குறியாக்கும் வல்லமையோடு திடீரென வெளிப்பட்டன” என்கிறார், ‘ஒரு பண்பாட்டின் பயணம்’ நூலை எழுதிய ஆர்.பாலகிருஷ்ணன்.
யார் இந்த ஜான் மார்ஷல்
இங்கிலாந்தின் செஸ்டர் நகரில் பிறந்த ஜான் ஹுபர்ட் மார்ஷல், டல்விட்ச் கல்லூரியிலும் கேம்பிரிட்ஜின் கிங்ஸ் கல்லூரியிலும் தனது படிப்பை முடித்தார்.
இதற்குப் பிறகு பிரிட்டிஷ் ஸ்கூல் ஆஃப் ஏதென்சின் நிதியாதரவில் பல அகழாய்வுகளில் பங்கேற்றார் ஜான் மார்ஷல். இந்தத் தருணத்தில் இந்தியத் தொல்லியல் கழகம் நிதி ரீதியாக மிக மோசமான நிலையில் இருந்தது. இயக்குநர் – ஜெனரல் பதவியும் நீக்கப்பட்டிருந்தது.
அப்போதுதான் இந்தியாவின் புதிய வைசிராயாக கர்ஸான் நியமிக்கப்பட்டார். அவர், இந்தியத் தொல்லியல் கழகத்துக்கு புத்துயிர் ஊட்ட முடிவுசெய்தார். மீண்டும் இயக்குநர் ஜெனரல் பதவியை உருவாக்கிய அவர், ஜான் மார்ஷலை 1902இல் அந்தப் பதவியில் நியமித்தார். அப்போது ஜான் மார்ஷலின் வயது வெறும் 26தான். இந்தியத் தொல்லியல் கழகத்தில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார் ஜான் மார்ஷல். இந்தியர்களுக்கும் அகழாய்வுப் பணியில் பயிற்சி அளித்தார்.
அருங்காட்சியகம்
தட்சசீலத்தில் மிகப் பெரிய அகழாய்வை நடத்திய அவர், அங்கு ஒரு மிகப்பெரிய அருங்காட்சியகத்தையும் அமைத்தார். இந்தியாவில் தொல்லியல் துறையின் முக்கியத்துவத்தை அரசுக்கு உணர்த்தி, கூடுதல் நிதியைப் பெற்றதில் அவரது பங்கு முக்கியமானதாக இருந்தது.
சிந்து சமவெளிப் பண்பாட்டை கண்டுபிடித்து, அதனை உலகுக்கு ஜான் மார்ஷல் அறிவித்தபோது, அவர் அந்த இடத்தைப் பார்த்ததுகூடக் கிடையாது. இதற்கு அடுத்த ஆண்டில்தான் முதன்முறையாக அங்கு சென்றார் ஜான் மார்ஷல். அங்கே ஒரு அகழாய்வையும் மேற்கொண்டார். அப்போதுதான் மொஹஞ்சதாரோவில் இருந்த ‘கிரேட் பாத்’ (Great Bath) எனப்படும் குளிப்பதற்கான குளம் கண்டறியப்பட்டது.
ஹரப்பா – மொஹஞ்சதாரோவில் நடந்த அகழாய்வின் முடிவுகளை 1931இல் ‘மொஹஞ்சதாரோ அண்ட் தி இண்டஸ் சிவிலைசேஷன்’ (Mohenjo-Daro and the Indus Civilization) என்ற பெயரில் வெளியிட்டார் ஜான் மார்ஷல்.
அந்த நூலில், சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய பண்பாட்டுக்கு முற்பட்டது என்பதால், அங்கு பேசப்பட்ட மொழியும் ஆரிய மொழிகளுக்கு முந்தைய மொழியாகத்தான் இருக்க வேண்டும். அங்கு பேசப்பட்ட பல மொழிகளில் ஒன்றாவது திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என அந்த நூலில் குறிப்பிட்டார் ஜான் மார்ஷல்.
திராவிட மொழிக் குடும்பம்
“ஜான் மார்ஷல் சிந்து சமவெளி நாகரிகத்தைக் கண்டுபிடித்து, அறிவித்ததோடு அந்நாகரிகத்தின் மொழியை திராவிட மொழிக்குடும்பத்தோடு தொடர்புப்படுத்தியது முக்கியமானது. 1924 செப்டம்பர் 20 அன்று மார்ஷலின் அறிவிப்பு வெளியான சில மாதங்களிலேயே வங்காள மொழியியல் அறிஞர் சுனித் குமார் சாட்டர்ஜி மார்டன் ரெவ்யூவில் ஒரு கட்டுரை எழுதினார்.
அந்தக் கட்டுரையிலும் சிந்துச் சமவெளி நாகரிகம் திராவிட பண்பாட்டோடு தொடர்புடையது எனக் குறிப்பிட்டார். அதுவே சிந்துவெளிப் பண்பாட்டின் மொழி தொடர்பான திராவிடக் கருதுகோளின் ஆணித்தரமான தொடக்கம். அதற்குப் பிறகு அஸ்கோ பர்போலா, அய்ராவதம் மகாதேவன் உள்ளிட்ட ஆய்வாளர்களும் இதே கருதுகோளை வலியுறுத்தினர்.
நகர்மய வாழ்வியல்
இதுவரை சிந்து சமவெளியில் கிடைத்த எழுத்துகள் வாசித்தறியப்படவில்லை. இந்நிலையில், சிந்துவெளிப் பண்பாடு பற்றிய புரிதலுக்கு நகர்மய வாழ்வியல், கடல் கடந்த வணிகமரபு போன்ற மரபின் நீட்சியை மிக ஆழமான புரிதலுடன் கொண்டாடும் தொல்தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைக் கருத்தில் கொள்ளவேண்டிய தேவை உள்ளது.
இது தொடர்பாக சிந்துசமவெளி திராவிட நாகரிக ஆய்வாளரும் மேனாள் அய்.ஏ.எஸ்..அதிகாரியுமான ஆர்.பாலகிருஷ்ணன் கூறும் போது ஜான் மார்ஷலை இந்தியாவில் வேறு யாரும் கொண்டாடவில்லை என்பதிலேயே தமிழ்நாடு கொண்டாடுவதற்கான காரணமும் உள்ளீடாக இருக்கிறது என்று கூறினார்.
சிந்துவெளி திராவிட நாகரிகத்தின் நூற்றாண்டு விழாவை இந்தியாவே கொண்டாடி இருக்கவேண்டும்
காழ்ப்புணர்ச்சி
ஆம்! உலகின் முதல் நாகரிகம், வன்முறை அற்ற. அமைதியாக, சமத்துவமான நதிக்கரை நாகரிகத்தை தந்த பெருமையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஒன்றிய அரசு இதைக் கொண்டாடி உலகிற்கு அறிவித்திருக்கவேண்டும் அதற்கான மிகவும் அருமையான வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், மதவாதமும் காழ்ப்புணர்ச்சியும், கொண்ட தலைமை ஒன்றியத்தில் இருந்த காரணத்தால் இந்த வாய்ப்பை இழந்துவிட்டது. சிந்து வெளிநாகரிகத்திற்குப் பிறகு தோன்றிய எகிப்திய நாகரிகத்தை எந்த ஒரு எகிப்திய அரசு அமைந்தாலும் போற்றி புகழ்ந்து உலகிற்கு பறசாற்றி வருகிறது
ஒன்றியத்தில் ஆரியத்திற்கு சாமரம் வீசும் அரசு இதனை மறைக்கவே செய்யும். இந்த நிலையில் தான் தமிழ்நாடு அரசு நூற்றாண்டு விழாவை கொண்டாடியது.
அதுமட்டுமல்லாமல் நூற்றாண்டுவிழா கொண்டாடக் காரணமாக இருந்த நாயகரான சர் ஜான் ஹூபர்ட் மார்ஷலுக்கு சிலையும் எடுத்துக் கொண்டாடி வருகிறது.