சரா
“கால்நடைகளின் தேவைகளை அறியும் செயற்கை நுண்ணறிவு: மனித அறிவியல் வரலாற்றில் மற்றொரு மைல் கல்.
சிறுவயதில் எனது வீட்டில் எருமை மாடுகள் அதிகம் இருந்தது. விடுமுறை நாட்களில் நான் ஊருக்குச் செல்லும் போது மாடுகளின் ஒவ்வொரு ஓசைக்கும் புல் போடு, தண்ணீ ஊத்து, குளிப்பாட்ட குளத்துக்குக் கொண்டுபோ, வைகோல் பிடுங்கிப் போடு – வயலில் இருந்து கொண்டுவந்த பசும்புல் மற்றும் உளுந்துச் செடிகளை போடு என்று கட்டளையிட்டுக் கொண்டே இருப்பார்கள்.
எனக்கே வியப்பாக இருக்கும் – நமக்கு எருமைகளின் ஒரே சத்தம் மட்டும் தான் கேட்கும். ஆனால், பாட்டி ஒவ்வொரு சத்தத்திற்கும் காரணம் என்ன என்பதை அறிந்து வைத்திருந்தார்.
தொழில்நுட்பம்
இன்று பாட்டியும் இல்லை, எருமையும் இல்லை, காரணம் எருமைகளின் தேவைகள் என்ன என்று கண்டுபிடிக்கும் அறிவைப் பாட்டியிடமிருந்து பெறவில்லை.
இந்த நிலையில் கால்நடைகளின் தேவைகளை அறிந்து கொள்ள செயற்கை நுண்ணறிவு மூலம் அடையாளம் கண்டுகொள்ளும் தொழில் நுட்பம் வந்துவிட்டது.,
கால்நடைகளின் ஓசை, அதன் முக உணர்ச்சிகள். காது அசைவுகள், வயிற்றின் அளவு, தாகம் ஏற்பட்டால் உடலில் ஏற்படும் மாற்றம் போன்றவற்றை துல்லியமாக அடையாளம் காணும் தொழில் நுட்பத்தை கே ஸ்டேட் ஆய்வு நிறுவனம் கண்டறிந்துவிட்டது.
கால்நடைகளின் காதுகளுக்கு கீழே சிப்புகளைப் பொருத்தி ஒவ்வொரு கால்நடைகளின் அசைவுகளையும் கண்காணிக்கும் தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
இதன் முலம் ஒரே நேரத்தில் சுமார் 1 லட்சம் ஆடுகள், மற்றும் 10,000 மாடுகளை ஒரே நபர் தனது வீட்டில் உட்கார்ந்துகொண்டு திரையின் மூலம் கண்காணிக்க முடியும்.
தண்ணீர் தேவை, உணவுத்தேவை என ஒவ்வொரு தேவைக்கும் தனித்தனி வண்ணத்தில் குறிப்பிட்ட அடையாளம் கொண்ட கால்நடைகளை ஆடு மாடுகளைக் கண்டறிந்து அதன் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற முடியும். இதன் மூலம் பால் பெருக்குவதற்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள் உடலில் சென்று செய்யும் வேலையையும், பால் குறையும் போது ஊட்டச்சத்தில் என்ன சேர்க்க வேண்டும் என்பதையும் கண்டறிந்து சொல்லி விடுகிறது.
ஆய்வுகள்
இது தொடர்பாக ஆய்வாளர் ஓல்சன் 2019-2020ஆம் ஆண்டு குளிர்காலத்தில் டாக்டர் டான் தாம்சனுடன் ஆராய்ச்சியைத் தொடங்கினார்.
ஓல்சனும், தாம்சனும் கால்நடைகளின் 700 விதமான காணொலிகளை கூர்மையாக ஆய்வு செய்தனர்.
இந்த வீடியோக்களில் உள்ள ஒவ்வொரு கால்நடைகளின் துல்லியமான அசைவையும் ஆய்வு செய்து அதன் தன்மைகளை ஒப்பிட்டு செயற்கை நுண்ணறிவு (AI), தரவிற்கு கொண்டு சென்றார்.
கால்நடைகளின் நரம்பியல் வலையமைப்பை முப்பரிமாண முறையில் தானியங்கி சிப்புகள் ஸ்கேன் செய்து அதற்கு களைப்பு நீங்க மற்றும் சுறுசுறுப்பாக தேவையானவற்றைச் செய்து தரும் வகையில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சில நிமிடங்களில் 94 சதவீத கால்நடைகளில் தேவைகளை துல்லியமாக அடையாளம் காண முடிந்தது.
நோய்கள்
இந்த செயற்கை நுண்ணறிவு மேலும் ஒரு சாதனையைச் செய்கிறது. குறிப்பாக கால்நடைக்குப் பரவும் தொற்று நோய்களை துவக்க காலத்திலேயே கண்டுபிடித்து அப்படி துவக்க நிலையில் உள்ள கால்நடைகளை தனிமைப்படுத்தி அதற்கு தேவையான சிகிச்சைமுறையை அதுவாகவே கால்நடைத் தீவனத்தோடு வழங்கும். சிறப்பான தொழில் நுட்பமும் இதில் இணைந்துள்ளது.
இதன் மூலம் மாட்டிறைச்சிக்காக கால்நடை வளர்ப்பவர்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப கால்நடைகளுக்கு புரதம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்களை இறைச்சிக்காக வெட்டப்படும் கால்நடைகளுக்கு உணவாக வழங்க முடியும். முன்பு இந்த வகை உணவு முறை மிகப்பெரிய சவாலாக இருந்தது.
செயற்கை நுண்ணறிவின் சிறந்த பயன்பாடு
செயற்கை நுண்ணறிவின் சிறந்த பயன்பாடுகளில் ஒன்று ஒளிப்பட பகுப்பாய்வு ஆகும். ஒரு பகுதி கால்நடைகளின் தரவுகளை வழங்க மற்றொரு பகுதி அதனைப் பராமரிக்க உதவும் வகையில் இருப்பதால் பிரேசில் மற்றும் டென்மார்க் பண்ணைகளில் இந்த பயன்பாடு தற்போது சோதனை ஓட்டமாக இருக்கிறது.
பாட்டிகளின் அனுபவங்களை தற்போது செயற்கை நுண்ணறிவு தந்துவிட்டது. எதிர்காலத்தில் கோழி மற்றும் வாத்துகளுக்கு இதே தொழில் நுட்பம் தொடர்பாக ஆய்வு நடந்துவருகிறது. அதுவும் விரைவில் அறிமுகமாகிவிட்டால் நோயற்ற கால்நடை மற்றும் இறைச்சிக்கான பறவையினங்கள் போன்றவைகளைப் பராமரிக்க மனித வேலைநேரத்தை வீணடிக்கத் தேவையில்லை.