புதுடில்லி, மார்ச் 21 ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஜமீன்தார் மனநிலையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக விமர்சித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகெத் கோகேல், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் ஜமீன்தார் மனநிலையை தொடர்ந்து எதிர்க்கும் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் அவர் கூறியதாவது:
ஜமீன்தார் மனநிலையைத் தொடர்ந்து எதிர்க்கும்
நிதி ஒதுக்கீட்டில் அய்க்கிய முற்போக்கு அரசுடன் ஒப்பிட்டு பாஜக அரசை காட்டமாக விமர்சித்தார். மாநிலங்கள் தங்கள் அதிகார எல்லைக்குள் இருப்பதைப் போல் நடந்து கொள்கின்றனர். யாராவது ஒன்றிய அரசை எதிர்த்தால், அவர் நாட்டின் எதிரி போல் சித்தரிக்கப்படுகிறார். சிறிய மாநிலங்களால் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட முடியாமல் இருக்கலாம். ஆனால், சக்தி மிக்க மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள், ஜமீன்தார் மனநிலையைத் தொடர்ந்து எதிர்க்கும். மேற்குவங்க மக்கள் ஒன்றிய அரசால் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று சில புள்ளிவிவரங்களை சமர்ப்பிக்க விரும்புகிறேன். 2011-2012 நிதியாண்டில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், மேற்குவங்கம், மத்திய நவீனமயமாக்கல் நிதி ரூ.44 கோடி பெற்றது.
10 ஆண்டுகளுக்கு பிறகு 2021– 2022ஆம் நிதியாண்டில் மேற்குவங்கம் பெற்ற நிதி பூஜ்ஜியம். 2013 -2014 ஆம் நிதியாண்டில் ரூ.59 கோடி மேற்குவங்கம் நிதியாக பெற்றது. அதுவே 2023-2024 ஆம் நிதியாண்டில் பூஜ்ஜியம். 2020 – 2024 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நாங்கள் மத்திய நவீனமயமாக்கல் நிதியாக 160 கோடி ரூபாய் பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை என்று கூறினார்.