நாவலர் இரா. நெடுஞ்செழியன்
தென்னாட்டைப் பற்றியும், திராவிடக் குழு மொழிகளைப் பற்றியும், மொழிப் பிரச்சினையை விவாதித்தவர்கள் எந்த அளவுக்குக் கவலைப்பட்டார்கள் என்பதைச் சற்றுக் காண்போம்.
காந்தியாரின் கருத்து
பொதுமொழிக்கு வரிவடிவம் தேடி, தேவ நாகரி, உருது என்ற இரண்டுவித எழுத்துக்களையும் பயன் படுத்தலாம் என்று கூறும் பொழுது, வட மேற்கு இந்தியாவில் உருதுச் சொற்கள் வழங்குவதால் அங்கு உருது எழுத்துகளும், வங்காளத்திலும் தென்னிந்தியாவிலும் சமஸ்கிருதச் சொற்கள் மிகுதியாக வழங்குவதால் தேவநாகரி எழுத்துக்களும் பயன்படுத்த ப்படலாம் என்று காந்தியார் கருதினார்.
பொதுமொழிக்குரிய எழுத்துக்களைப் பற்றி பேசவந்த ஜவஹர்லால் நேரு இன்னும் சற்றுப் பாதுகாப்போடு கூறி யுள்ளார்.
“வட இந்திய எழுத்துக்கள் தென்னிந்திய திராவிட மொழிகளிடை எவ்வளவு தூரம் ஒத்துப்போகும் என்பது பற்றியும், அல்லது அவற்றிக்குள்ளாகவே ஒரு வரி வடிவத்தை உண்டாக்கிக் கொள்ள முடியுமா என்பது பற்றியும் எனக்கு அவ்வளவாகத் தெரியாது.” என்று விளக்கியுள்ளார்.
பொது மொழி
பொதுமொழி தேவை யென்று முடிவு செய்யப் பட்டபின், பொது மொழி என்று ஒன்றை உண்டாக்கிய பின், எந்த எழுத்துகளைப் பயன்படுத்துவது, தேவநாகரி எழுத்துகளையா, உருது எழுத்துகளையா என்ற அய்யம் தோன்றியது. புதிதாகத் தோன்றிய இந்த அய்யப்பாடு முதலிலிருந்து ஆரம்பித்து வந்த அவ்வளவு தூரத்தையும் கடந்து ஆரம்ப நிலைக்கே அடித்து விரட்டும் அய்யப்பாடாக அமைந்தது. ‘வடநாட்டு எழுத்து்கள் தென்னாட்டு திராவிட மக்களிடை ஏற்றுக்கொள்ளப்படுமா?’ பண்டித நேருவுக்கு 1939இல் உண்டான சந்தேகம் இது. அந்தச் சந்தேகத்தைத் தீர்ப்பதை விட, சந்தேகம் எழும்பிய விதத்தையும், விளைவையும் நன்கு பார்க்க வேண்டும். வட நாட்டு எழுத்து்களே தென்னாட்டினர்க்குக் கசக்கும் தன்மையன என்ற சந்தேகமிருக்கும்பொழுது, அந்த எழுத்துகளையுடைய மொழியை, மொழியை உட்படுத்தி விளங்கும் பண்பாட்டை எவ்வாறு கண்ணை மூடிக்கொண்டு ஒப்புக் கொள்வார்கள்!
வடநாட்டு எழுத்துகள் – தென்னாட்டுத் திராவிட எழுத்துகள். இவ்விருவகை எழுத்துகள், ஒன்றிற்கொன்று வேறுபாடுடையன என்பதை ஒப்புக்கொள்வது மட்டுமல்லாமல், இவை இரண்டும் ஒன்றோடொன்று முரண்பட்டு விளங்குவனவாகும் என்பதையும் நேரு ஒப்புக்கொள்கிறார். ஆகவே தான் வடநாட்டு எழுத்துக்களைத் தென்னாட்டார் ஒப்புக்கொள்வார்களோ என்னவோ என்ற சந்தேகம் இவருக்குப் பிறந்திருக்கிறது. பொதுமொழியாக ஒப்புக் கொண்டாலும், எழுத்துக்களை ஒப்புக்கொள்வார்களோ என்று எண்ணி வகைக்கொரு வரி வடிவங் கூற முற்பட்டார். பொதுமொழியாவதற்குரியதாகத் தேர்ந் தெடுக்கப்பட்ட இந்துஸ்தானிக்கு, மூன்றுவித வரிவடிவங்களை ஏற்றுக்கொள்ளும்படி அவர் அறிவுறுத்துகிறார்.
“வங்காளி, குஜராத்தி, மராட்டி உள்ளிட்ட தேவநாகரி ஒன்று: இரண்டாவதாக உருது: மூன்றாவதாக அவசியமானால் தென்னாட்டுக்கு ஒருவகை வரிவடிவம்;” என்று பண்டித நேரு விளக்கியுள்ளார். ஒரு மொழிக்கு மூன்று வகை எழுத்துக்கள். ஒன்று தேவநாகரி; இரண்டாவது உருது; மூன்றாவதாக அவசியமிருந்தால் திராவிட எழுத்து வடிவம். இந்தக் கருத்தை ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகளுக்கு முன் 1939இல் அவர் வெளியிட்டார். குறிப்பிடப்பட்ட மூன்று வரிவடிவங்களில் ஒன்று (உருது) கழிந்துவிட்டது. பாகிஸ்தான் பிரிந்துவிட்ட காரணத்தால், மிகுந்திருக்கும் இரண்டுக்கும் பாகப் பிரிவினை என்று ஏற்படப் போகிறதோ தெரியவில்லை!
தவறான கருத்து
பொதுமொழிப்பற்றி விவாதித்த வடநாட்டுத் தலைவர்களில் பெரும்பாலோர், சமஸ்கிருதமே இந்திய மொழிகள் எல்லாவற்றிற்கும் தாய்மொழியாகும் என்ற தவறான கருத்தைப் பரப்பி வரலாயினர். அந்த அடிப்படையின் மீது தங்கள் வாதங்களை வைத்து பிரச்சினைகளை எழுப்பினர்.
உருது மொழிப் பேராசிரியரும், காந்தியாரால் நன்கு மதிக்கப்பட்டவருமான அப்துல் ஹக் மட்டும், சமஸ்கிருதங் கலந்த இந்தியைத், தென்னாட்டில் புகுத்த எண்ணும் முயற்சியைக் கண்டித்தார். அவர் கூறுகிறார்:-
“தென்னிந்திய மொழிகளில் சமஸ்கிருதம் முதலிடம் பெறுகின்றது என்று நாம் நினைப்பது உண்மையல்ல, மேலும் இந்தி நுழைவு அவர்களின் தனிப்பட்ட கலாச்சாரத்தை அழிப்பதாகும் என அவர்கள் எதிர்த்திருக்கிறர்கள்.”
என்று. இது, முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் முடிந்த பிறகு, அவர் எழுதிய கட்டுரையில் காணப்படுவதாகும். தென்னாட்டில் அன்று எழும்பிய எதிர்ப்பு வெறும் மொழிப் போராட்டம் மட்டுமல்ல; அது கலாச்சாரப் போர் என்பதை ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பே அவரால் அறிந்துகொள்ள முடிந்தது. அவரால் அறிந்து கொள்ளப்பட்ட அரிய கருத்தை இங்கே இருப்போரில் சிலர் கண்ணிருந்தும் காண மறுக்கிறார்கள்; காது இருந்தும் கேட்க வெறுக்கிறார்கள்.
சுமித்திரானந்தன் பந்த் என்பவர், “சமஸ்கிருத மொழிக்கு அப்பாற்பட்டவை திராவிடமொழிகள்?” என்று கூறினார்.
திணிக்கக்கூடாது
தீவிர தேசிய காங்கிரஸ் வாதியாக விளங்கிய தசீர் என்பவர், “புதிதாக அமைக்கப்படும் இந்துஸ்தானியை திராவிட மொழியினர் மீது திணிப்பது கூடாது; அது பயனற்றது. கெடுதலை உண்டாக்குவது” என விளக்கிக் கூறினார். மொழிச் சண்டைகளால் உண்டாகிய சங்கடத்தைக் கூறும்போது, “இந்தி-உருது, இந்தி-தமிழ் சண்டைகள் பயமுறுத்தும் அளவுக்கு வளர்ந்து விட்டன” என்று கவலைப்பட்டார். மொழிச் சண்டையால் விளையும் பலனை அவர் முன்கூட்டியே எதிர்பார்த்து விட்டார்.
அவர் கூறியது 1940-க்கு முன். அதற்குப் பிறகு இந்தி-உருது என்ற சண்டை போய், இந்தியா-பாகிஸ்தான் என்ற பிரிவினைப் பேச்சு அரசியல் வட்டாரத்தை ஆட்டிவைத்தது. இறுதியாக இந்திய துணைக்கண்டம் இரண்டாகத் துண்டிக்கப்பட வேண்டிய அவசியத்திற்கு வந்து சேர்ந்தது. தசீர் குறிப்பிட்ட தமிழ்-இந்தி போராட்டம் இன்னும் முடியவில்லை. ஆனால் அவரடைந்த பயம் எந்த விதத்திலும் குறையவில்லை.
நேருவின் தடுமாற்றம்
அப்துல் ஹக், சர்டேஜ் பகதூர் சாப்ரூ, தசீர் போன்றவர்களிடமிருந்து, தென்னாட்டின் உண்மை நிலைக்குப் பரிந்து கண்டனங்கள் எழுந்ததைத் தவிர, ஜவஹர்லாலுக்கு ஏற்பட்ட தடுமாற்றத்தைத் தவிர, மற்ற எவரும் தென்னாட்டைப்பற்றிச் சிறிதும் கவலைப்படவில்லை. வடநாட்டில் ஏற்பட்ட மொழிச் சண்டையை முதன்மையாக வைத்துக்கொண்டு, வட இந்திய மொழிகளின் வரலாற்றை ஆதாரமாக எடுத்துக்கொண்டு போட்டியிட்ட இரு வட இந்திய மொழிகளைச் சமாதானப்படுத்த, வட இந்தியரால், வட இந்தியாவுக்காக, வட இந்தி யாவில் விவாதிக்கப்பட்டதே இந்திய மொழிப் பிரச்சினையாகும்.
தென்னாட்டில் முக்கிய மொழிகளாக விளங்கும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகள் திராவிடக் குழுவைச் சேர்ந்த மொழிகளாக மொழி நூலறிஞர்கள் கணக்கிட்டிருக்கின்றனர். இவ் வைந்து மொழிகளிலே தமிழ் முதிர்ந்த மொழியென்றும், திராவிடக் குழுமொழியின் மூல மொழியிலிருந்து நேரிடையே வளர்ந்து வரும் மொழியென்றும், இதன் தோற்றம் கடல் கொண்ட லெமூரியா கண்டத்திலாகுமென்றும், இது தென்னாட்டிற்கே சொந்தமான பிறப்பிட மொழியென்றும் ஆராய்ச்சி அறிஞர்கள் அறுதியிட்டுக் கூறியிருக்கிறார்கள்.
சமஸ்கிருத ஆதிக்கம்
கி.மு. அய்ந்து அல்லது ஆறாவது நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தென்னாட்டில் சமஸ்கிருதச் சொல் வழக்கு சிறிது சிறிதாக நுழைய ஆரம்பித்தது. வடநாட்டில் தோன்றிய வைதீக-பவுத்த-ஜைன மதங்கள் போட்டி போட்டுக் கொண்டு தென்னாட்டில் நுழைய ஆரம்பிக்கவே சமஸ்கிருதமும் உடன் நுழைய ஆரம்பித்தது. வைதீக மதத்தைப் பரப்பிய ஆரியப் பார்ப்பனர்கள் சூழ்ச்சி முறையால் தென்னாட்டில் இடந்தேடிக்கொண்டு மக்களின் ஆதரவைப் பெற்றவுடன், சமஸ்கிருதத்தை எவ்வெவ் வழிகளிலெல்லாம் ஆட்சி பெறச் செய்யமுடியுமோ அவ்வவ் வழிகளிலெல்லாம் புகுத்தி சமஸ்கிருதச் சொற்களைத் தமிழோடு நன்கு கலக்கும்படிச் செய்தனர்.
இந்த முயற்சி ஆரிய மதப் புரோகிதர்களாலும், புராண இதிகாசக்காரர்களாலும் அரசர்களின் ஆதர வைப் பெற்று எளிதில் செய்யப்பட முடிந்தது. சமஸ்கிருதம் தமிழோடு அளவுக்குமீறி சேர்ந்ததால் பிறந்த மொழிகள்தாம் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளாகும். இப்பொழுதும் அம்மொழிகளிலிருந்து சமஸ்கிருதச் சொற்களை அறவே களைந்து எடுத்துவிட்டால் மிகுதி இருக்கும் சொற்கள் தூய தமிழ்ச் சொற்களாகவே இருக்கக் காணலாம். மலையாளத்தை எடுத்துக்கொண்டு அதிலுள்ள தூய வடமொழிச் சொற்களை ஒருபக்கம் எடுத்து வைத்துவிட்டு, அதில் வழங்கும் தூய தமிழ்ச் சொற்களை மற்றொருபுறம் எடுத்து வைத்து விடுவோமேயானால் மிகுதியிருக்கும் சொல் ஒன்றுகூட காணமுடியாது.
திராவிட மொழிகள்
வடமொழி, படையெடுப்போடு வடவாரியர் கலாச்சாரம், நாகரிகம், பண்பு, பழக்க வழக்கம், கொள்கை, கோட்பாடுகள் அனைத்தும் படையெடுக்கத் தொடங்கின. தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளும் தம் தன்மைகளை ஓரளவுக்குக் கொண்டிருந்தாலும் பெரும் பகுதிகள் அந்தப் படையெடுப்புகளுக்கு இரையாயின. என்றாலும், திராவிட மொழிக்குரிய இலக்கணப் பண்புகள் தமிழ்தான். அவற்றிற்கு இரையாகாமல் சிறிதளவு காயங்களேற்பட்டாலும் இன்னமும் சளைக்காமல் எதிர்த்துப் போராடி வருகிறது. வடமொழி நாகரிகம் – தமிழ் நாகரிகம் என்று பிரித்துக் கூறக் கூடிய நிலையில்தான் கருத்துக்கள் உலாவி வருகின்றன.
முரண்பாடு
வடமொழியும் – தமிழ் மொழியும் தனித்து நிற்பது போலவே, வடமொழியும் பிறமொழியும் சேர்ந்த நாகரிகம் படைத்த வடநாட்டவரும் – தமிழ் நாகரிகம் அதாவது திராவிட நாகரிகம் படைத்த தென்னாட்டவரும் ஒத்துப்போக இயலாதவர்களாய் எவ்வகையிலும் தனித்துப் பிரிந்து வாழ வேண்டியவர்களாகவே இருந்து வருகின்றனர். பொதுவாக நோக்கும்போது திராவிடக் குழுமொழிகள் வழங்கும் திராவிடம் குறிப்பாகத் தமிழகம் இந்தியாவின் ஏனைய பகுதியோடு இணைந்து வாழ முடியாததாகவே இருந்துவருகிறது. வடநாடு – தென்னாடு வேறுபாடு, சற்று ஆழ்ந்து கூற வேண்டுமானால், முரண்பாடு, இயற்கையாகவே அமைந்துவிட்டது. இந்த வேறுபாட்டைச் சிந்திக்க மறுத்துச் செய்யும் முயற்சி எதுவும் உருப்பெறாது – பயன்படாது; மாறாகப் பகைமையையே வளர்க்கும் -போர்க் களங்களைத்தான் காணச் செய்யும்.
இந்த அடிப்படை உண்மையை எண்ண மறுத்தோ, மறந்தோ வட நாட்டவரால் மொழித் திட்டம் வகுக்கப்படுகிறது. அதன் முடிவை வட இந்திய மொழிகளினும் சிறப்புடைய – பண்பட்ட – பழந்திராவிட மொழிகளிடம், தனிப்பட்ட வரலாறும், கலாச்சாரமும், பழக்க வழக்கமும், நாகரிகமும் கொண்ட மக்களிடை, குறிப்பாகத் தமிழர்களிடை, தமிழ் மக்களின் விருப்பத்தைக் கேட்காமல், தமிழறிஞர்களின் ஆதரவைப் பெறாமல், தமிழ் அரசியல்வாதிகள் அனைவரின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் அடக்குமுறையின் உதவியால், ஆணவ எண்ணத்தின்பேரில் திணிக்க விரும்புவது அடாது; கூடாது; முடியாத செயல்.
பொதுமொழி தேவை என்பதற்கு அவர்கள் கூறியவற்றில் இருந்த குழப்பத்தையும், பொது மொழி தேடும்போது ஏற்பட்ட தடுமாற்றத்தையும் விளக்கினோம். இனி அவர்கள் கூறிய காரணங்கள் சரியானவை தானா என்பதை உய்த்துணர்வோம்.