சென்னை, ஜூலை 9- தமிழ்நாடு முழுதும் நேற்று நடந்த, மக்கள் நீதிமன்றத்தில் (‘லோக் அதாலத்’தில்), 3,536 வழக்குகளில், 111 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், மாவட்ட, தாலுகா அளவில், 154 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.
நில ஆர்ஜிதம், பணிகள், தொழிலாளர், விபத்து இழப்பீடு தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, தீர்வு காணப்பட்டது. 3,536 வழக்குகளில், 111.14 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. உயர் நீதி மன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் முகமது ஷபீக், சத்திய நாராயண பிரசாத், லட்சுமி நாராயணன், ராஜசேகர் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் அய்ந்து அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை யில், நீதிபதிகள் விஜயகுமார், தனபால் தலைமையில் இரு அமர்வுகளும், வழக்குகளை விசாரித்தன.
சென்னையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில், உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவ ரான நீதிபதி டி.கிருஷ்ணகுமார், இழப்பீட்டு தொகை 1.44 கோடி ரூபாய்க்கான உத்தரவுகளை, பயனாளிகளுக்கு வழங்கினார். உயர் நீதிமன்றத்தில் நடந்த லோக் அதாலத் தில், 67 வழக்குகளில், 9.38 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டிருப்பதாக, உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரான, நீதிபதி கே.சுதா தெரிவித்து உள்ளார்.