19-03-2025 நாளிட்ட தினத்தந்தியில் ஒரு ஒளிப்படமும் செய்தியும் வெளியாகியுள்ளது. அந்த செய்தியில் சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஆர்.சிறீராம் தனது பரிவாரங்களுடன் அதாவது மாவட்ட நீதிபதி, மாவட்டக் கூடுதல் நீதிபதி, முன் சீப் மற்றும் குற்றவியல் நடுவர் ஆகியோர் புடை சூழ காஞ்சி சங்கராச்சாரியாரை நேரில் பார்த்து ஆசீர்வாதம் வாங்கினார் என்று வந்துள்ளது. விடுமுறையில் தான் சென்றுள்ளாராம். விடுமுறை என்பது அவருக்கு அரசு கொடுத்துள்ள ஒரு சிறப்பு அனுமதி. அந்த அனுமதியை அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்திக் கொண்டால் யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. உடன் வந்தவர்களுக்கும் அப்படித்தானா?
ஒவ்வொரு முறையும் அதிகாரப் பீடம் தான் சொல்வதைக் கேட்கிறது என்பதை வெளியில் காட்டிக் கொள்வதற்காக, சங்கர மடம் இப்படிப்பட்டவர்களை வரவழைத்து விளம்பர சடகோபம் தருவது வாடிக்கை தான். தற்போது மிஸ்சாகிப் போகியிருக்கும் ஆஸ்ரேயத்தை (வார்த்தை உபயம் மறைந்த டி.என்.சேஷன்) மீண்டும் கொண்டு வருவதற்கு இப்போது தலைமை நீதிபதி பயன்படுத்தப்பட்டுள்ளார்.
இதே போல் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு பெண் நீதிபதி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்ப்பனர் சங்கம் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டார். அதேபோல் கேரள உயர் நீதிமன்ற நீதிபதியும் கலந்து கொண்டார். அண்மையில் கர்நாடக மாநில இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகளும் பார்ப்பன சங்க மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.
இப்படி அவரவர் மதத்தைத் தூக்கிப் பிடிப்பதற்கும், ஜாதியைத் தூக்கிப் பிடிப்பதற்கும் தங்கள் பதவியை தவறாகப் பயன்படுத்துவது எந்த வகையில் அரசமைப்புச் சட்டத்திற்கு உள்பட்டது எனத் தெரியவில்லை.
இந்த நாட்டில் மதச்சார்பின்மை படும் பாடு இது தானா?