சென்னை, மார்ச் 20- முருங்கை இலை பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைத்தால் மானியம் வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார்.
கேள்வி நேரத்தின் போது, சட்டமன்றத்தில் நிலக் கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி, தனது தொகுதிக்கு உட்பட்ட விருவீடு பகுதிகளில் அரசு முருங்கை இலை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க முன்வருமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் 20 ஆயிரத்து 741 எக்டேர் பரப்பளவில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டு 8 லட்சத்து 41 ஆயிரத்து 807 டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
மதுரை, திண்டுக்கல், கோவை, தூத்துக்குடி, தேனி, கரூர், கடலூர், கிருஷ்ணகிரி, திருச்சி, நெல்லை, விருதுநகர், சென்னை ஆகிய மாவட்டங்களில் 31 தனியார் நிறுவனங்கள் முருங்கை இலை பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைத்து ஏற்றுமதி செய்து வருகின்றன.
இந்த நிறுவனங்களுக்கு எல்லாம் மானியத்துடன் கடன் உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.
மானியக் கடன்
தமிழ்நாட்டில் இருந்து முருங்கை ஏற்றுமதியை அதிகரிக்க “முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மய்யம்” மதுரையில் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழ்நாட்டில் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் விளையும் முருங்கைக் காய்கள், முருங்கை இலைகள் வீணாகாமல் தடுக்க தனியார் தொழில்முனைவோர் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைக்க முன்வரும் பட்சத்தில் தொழில் தொடங்குவதற்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.