ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்ணில் இரு செயற்கைக்கோள்களை ஒருங்கிணைக்கும் பரிசோதனையை இப்போது இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. கடந்த வாரம் தொடர்ச்சியாக இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அந்த பணிகள் வெற்றிகமராக முடிந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
பன்னாட்டு அளவில் இஸ்ரோ பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. இதனால் உலகின் பல வளர்ந்த நாடுகள் கூட தங்கள் விண்கலன்களை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோவை அணுகுகிறது.
அடுத்தகட்டமாக இஸ்ரோ இப்போது ஸ்பேடெக்ஸ் (SPADEX-Space Docking Experiment) திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விண்வெளியில் இரு செயற்கைகோள்களை இணைக்கும் முயற்சியை இஸ்ரோ கையில் எடுத்தது.
ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய இரு விண்கலன்கள் வடிவமைக்கப்பட்டு இருந்த நிலையில், அவை கடந்த டிசம்பர் மாதம் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக சிறீஅரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டன. கடந்த வாரமே இரு செயற்கைக்கோள்களை இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், சில காரணங்களால் அது தாமதம் ஆனது.
இதற்கிடையே விண்வெளியில் இரு செயற்கைக்கோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றி பெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 220 கிலோ எடை கொண்ட 2 செயற்கைக்கோள்களை இணைக்கும் பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்குப் பிறகு இந்த சாதனையைச் செய்த நான்காவது நாடு இந்தியாவாகும்