உங்கள் மூளையின் செயல் வேகம் என்ன? அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு!

viduthalai
2 Min Read

கை, கால்கள், கண்கள், காதுகள் என மனிதர்களின் உடல் உறுப்புகளின் வேகம் அசாத்தியமானதாக இருக்கிறது. ஆனால் மூளையின் வேகம் மிகவும் மெதுவானது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து ‘நியூரான்’ எனும் அறிவியல் ஆய்வு இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது. இதில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது, “மனிதர்களின் உடல் உறுப்புகளின் வேகம் பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு பாம்பு உங்கள் பக்கத்தில் இருக்கிறது எனில் அந்த நேரத்தில் உங்கள் உடலின் செயல்பாடுகள் மிக வேகமானதாக இருக்கும். விரல்கள் தீயை உணரும் அடுத்த நொடி அங்கிருந்து நீங்கள் கையை எடுத்துவிடுவீர்கள். இவையெல்லாம் நொடிப்பொழுதுக்கும் குறைவான நேரத்தில் நடக்கிறது.

இதற்கு காரணம் நமது புலன்கள் ஒவ்வொரு நொடியும் பில்லியன் கணக்கான பிட்(bits) தரவுகளை சேகரிக்கிறது. சேகரித்த தகவல்களை அடிப்படையாக கொண்டு, அதற்கேற்ப உணர்வு அமைப்புகள் செயல்படுகின்றன.

ஆனால் மூளை வெறும் 10 பிட் (bits) தரவுகளை மட்டுமே நினைவாக்கத்திற்கு பயன்படுத்துகிறது. உணர்வு அமைப்புடன் ஒப்பிடுகையில் இது மிக மிக குறைவான வேகம். இன்னும் சரியாக சொல்வதெனில், மூளை ஒரு நத்தையின் வேகத்தில்தான் செயல்படுகிறது என்று மார்க்ஸ் மேஸ்ட்டர் மற்றும் ஜியு ஜெங் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.

புத்தகம் வாசிக்கும்போதும், வீடியோ கேம்களை விளையாடும்போதும் நம் மூளை எப்படி செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்த அவர்கள், கிடைக்கப்பட்ட தகவல்கள் அனைத்தையும் திரட்டி, அதை பகுப்பாய்வு செய்து நமது மூளை மிக மெதுவாகதான் இயங்குகிறது என்பதை உறுதி செய்துள்ளனர். மூளையின் நியூரான்கள் அபரிமிதமான செயலாக்க ஆற்றலைக் கொண்டிருந்தாலும், ஒரு நொடிக்கு 10 பிட்கள் மட்டுமே நினைவான சிந்தனைக்கு ஒதுக்கப்படுகிறது என்று இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதை இன்னும் எளிமையாக புரிந்து கொள்ள வேண்டும் எனில், ஆதி மனிதர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். குகைகளில் வாழ்ந்த காலங்களில் மனிதர்கள் வேட்டையாடும் சமூகமாக இருந்தார்கள். அப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்தி வந்தார்கள். குறிப்பாக வேட்டையின்போது கொடிய மிருகங்களிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் செய்தார்கள், அதே நேரம் வேட்டையிலும் அவர்கள் கவனம் செலுத்தினார்கள். ஆனால் இப்போது உணர்வு அமைப்புகளை காட்டிலும் மூளையையே நாம் முதன்மையாக செயல்படுத்த தொடங்கியுள்ளோம்.

உதாரணத்திற்கு நீங்கள் செஸ் விளையாடுகிறீர்கள் எனில், உங்களால் ஒரு நேரத்தில் ஒரு காயின் நகர்வை குறித்து மட்டுமே யோசிக்க முடியும். குதிரையை பற்றி யோசித்தால் அதை பற்றி மட்டுமேதான் சிந்திக்க முடியும். அந்த நேரத்தில் யானையை பற்றி சிந்திக்க முடியாது. இப்படித்தான் மூளை படிப்படியாக சிந்திக்க தொடங்கியுள்ளது. ஆழ்ந்த கவனம் செலுத்தி ஒரு விஷயத்தை சிந்திக்கும்போது அதில் நம்மால் மாற்றம் செய்யக்கூடிய அளவுக்கு திட்டங்கள் கிடைக்கின்றன.
இப்படியாக மூளை செயலாற்றுகிறது. வெளியிலிருந்து பார்ப்பதற்கு மூளையின் வேகம் குறைவாக தெரிந்தாலும், மனித பரிணாம வளர்ச்சிக்கும், நவீன கண்டுபிடிப்புகளில் மனிதர்கள் இவ்வளவு தூரம் வந்திருப்பதற்கும் இந்த வேகம்தான் காரணமாக இருந்திருக்கிறது. இனி வரும் காலங்களிலும் மூளையின் வளர்ச்சி அதிகரிக்கும்” என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *