உலகின் மிகப்பெரிய கண்டமான ஆசியாவுடன் சிறிய கண்டமாக இருக்கக் கூடிய ஆஸ்திரேலியா மோதும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். ஆஸ்திரேலியா கண்டம் வடக்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது. படிப்படியாக நகர்ந்து வரும் ஆஸ்திரேலியா கண்டம் ஆசியாவுடன் நிச்சயம் மோதும் எனவும் இதனால், பெரிய அளவில் நிலப்பரப்பில் மாற்றம் இருக்கும் என்பதும் ஆய்வாளர்கள் கருத்தாக உள்ளது.
பூமி தோன்றியது முதல் பல்வேறு கால மாற்றங்களை சந்தித்து வருகிறது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலப்பரப்பாக இருந்த இடம் இன்று கடலாக மாறியுள்ளதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஒரு காலத்தில் சாதாரண நிலப்பரப்பாக இருந்த இடங்கள் கூட கண்டங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதால் பெரிய மலைகளும் சுனாமி என பிரளயமே ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.
ஆண்டுக்கு 7 செ.மீ. நகர்கிறது
எளிதாக சொல்வது என்றால் ஒரு காலத்தில் வேறு வேறு தோற்றத்தில் இருந்த நிலப்பரப்புகள் நிலநடுக்கம், சுனாமி, நில அடுக்கு நகர்வுகள், எரிமலை வெடிப்புகள் காரணமாக உருமாற்றம் அடைந்து தற்போது இருக்கும் தோற்றத்தை பெற்றுள்ளது என்பதுதான் ஆய்வாளர்கள் கூற்று. தற்போது பூமியில் இருக்கும் 7 கண்டங்கள் கூட இப்படி வேறு வேறு நிலப்பரப்புகளாக இருந்து ஒன்றுடன் ஒன்று மோதி உருவானதுதான்.
எனவே, நிலத்தட்டுக்கள் நகர்ந்து வருவது என்பது தொடர்ச்சியாக இயற்கையின் பரிமாணத்தில் நடக்கக் கூடிய நிகழ்வாக உள்ளது. அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலியா கண்டம் மெதுவாக வடக்கு நோக்கி நகரத் தொடங்கியியிருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதில் கவலை அளிக்கும் விஷயம் என்னவென்றால், ஆண்டுக்கு 2.8 இன்ச் (7 செ.மீ.) அளவுக்கு இந்த கண்டம் நகர்ந்து வருகிறது.
ஆசியா கண்டம் மீது மோதுகிறது
மனிதனின் நகம் எவ்வளவு வேகமாக வளருமோ அதே அளவுக்கு இது வளர்ந்து கொண்டு இருக்கிறது. இது அளவில் மிக மிக சிறியது என்றாலும் கூட பல மில்லியன் ஆண்டுகளுக்கு கணக்கிட்டால் புவியின் மேற்பரப்பில் பெரும் மாற்றமே ஏற்படக்கூடும். பிராந்தியத்தின் நிலப்பரப்பு, கிளைமேட், உயிரியல் பன்முகத்தன்மை என அனைத்துமே மாறிவிடும்.
அதிலும் ஆஸ்திரேலிய கண்டம் நகர்ந்து ஆசிய கண்டத்துடன் மோத இருப்பதாக கர்டின் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் செங் ஜியாங் லி கூறியுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட ஆய்வு தற்போது மீண்டும் வெளியாகியிருக்கிறது. தனது ஆய்வில் ஜியாங் லி கூறுகையில், “கண்டங்கள் இரண்டாக பிளவுபடுவதும் பிறகு மீண்டும் ஒன்று சேர்வதும் ஒரு சுழற்சி முறை எனவும் நாம் விரும்புகிறோமோ இல்லையோ.. ஆஸ்திரேலிய கண்டம் ஆசியாவுடன் மோத போகிறது” என்று கூறியுள்ளார்.
பெரும் மாற்றங்கள் ஏற்படும்
இப்படி ஆஸ்திரேலியா கண்டம் ஆசியா கண்டத்துடன் மோதினால் ஆசியாவின் நிலப்பரப்பில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். ஆசியா கண்டத்தில் இருக்கும் இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் என பல பகுதிகளின் நிலப்பரப்புகளும் எப்படி மாறும் என்பது கற்பனைக்கும் எட்டாத விஷயமாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது.
80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக அண்டார்டிகா கண்டத்தில் இருந்து பிரிந்து வந்ததுதான் ஆஸ்திரேலியா கண்டம் ஆகும். கடந்த 50 மில்லியன் ஆண்டுகளாக இந்த ஆஸ்திரேலியா கண்டம் மெதுவாகவும் சீராகவும் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. ஆஸ்திரேலியா கண்டம் ஆசியா கண்டத்துடன் மோதி இரண்டு கண்டங்களும் ஒன்றாக மாறினால் பல்லுயிர் பெருக்கம் வாழ்வியல் இடங்கள் என அனைத்தும் மாறிவிடும் என்பதே விஞ்ஞானிகள் பார்வையாக உள்ளது.