சென்னை, மார்ச் 20- வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு உருளைகளுக்கு ஒன்றிய அரசு மானியம் வழங்கி வருகிறது. ஆண்டுக்கு 12 எரிவாயு உருளைகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
எரிவாயு உருளை
இந்த நிலையில் ஆண்டுக்கு 15 எரிவாயு உருளை பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் எரிவாயு உருளைக்கு முன்பதிவு செய்யும் போது ‘அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் சமையல் எரிவாயு உருளைக்கான பதிவை ஏற்க முடியாது. ஏனெனில் ஏற்கனவே இந்த ஆண்டு ஒதுக்கீட்டான 213 கிலோவை நீங்கள் பயன்படுத்தி விட்டீர்கள்’ என்று ஆயில் நிறுவனம் சார்பில் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்படுகிறது.
இதனால் ஒரு ஆண்டுக்கு 15 எரிவாயு உருளைகளை பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் எரிவாயு உருளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஒருவருக்கு ஆண்டுக்கு 15 சமையல் எரிவாயு உருளைகள் வரை வழங்கப்படும். அதில் 12 எரிவாயு உருளைகளுக்கு மானியம் கிடைக்கும். எனவே அனுமதிக்கப்பட்ட எரிவாயு உருளை வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ஏனென்றால் அந்த எரிவாயு உருளையை நுகர்வோர்கள் வீடுகளுக்கு தான் பயன்படுத்துகிறார்களா அல்லது முறைகேடாக பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறியவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே 15 எரிவாயு உருளை பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் வாங்க வேண்டும் என்றால் அதற்கான காரணத்தை விளக்கி எரிவாயு உருளை வினியோகம் செய்யும் நிறுவனத்திடம் கடிதம் கொடுத்தால் கூடுதல் சிலிண்டர் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘ஆண்டுக்கு 12 எரிவாயு உருளைகளுக்கு மானியம் வழங்கலாம். அதற்கு மேல் பயன்படுத்தும் எரிவாயு உருளைக்கு மானியம் வழங்க வேண்டாம். ஆனால் 15 எரிவாயு உருளைகள் பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் பயன்படுத்த முடியாது என்று கூறுவதால் பலர் பாதிக்கப்படலாம்.
எனவே ஒவ்வொரு முறை எரிவாயு உருளை வழங்கும் போதும் அது அந்த ஆண்டின் எத்தனையாவது சிலிண்டர் என்ற விவரத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
புற்றுநோய் செல்கள் பரவாமல் தடுக்கும் புத்தாக்கமான மருத்துவ அறுவைச் சிகிச்சை
சென்னை, மார்ச் 20- அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு புத்தாக்கமான அதிநவீன அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி சிகிச்சையளித்து பிற உறுப்புகளுக்கு புற்றுநோய் பரவாமல் சென்னை பூந்தமல்லியில் உள்ள ‘பீ வெல்’ மருத்துவமனை மருத்துவா்கள் காப்பாற்றினா்.
இதுகுறித்து இம்மருத்துவமனையின் தலைவா் மருத்துவர் சி.ஜெ.வெற்றிவேல், மருத்துவ இயக்குநா் மருத்துவர் சபரீசன் ஆகியோா் கூறியதாவது:
வயிற்றுப் பகுதியில் மியூசினா் அடினோ காா்சினோமா என்ற அரிய வகை புற்றுநோய் பாதிப்புக்குள்ளான 47 வயது பெண் ஒருவா், அண்மையில் பீ வெல் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா். அவருக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் அவரது உடல் நிலை கீமோதெரபி சிகிச்சைக்கு உகந்த நிலையில் இல்லை என்பது தெரியவந்தது.
பொதுவாக வாய் வழியே உட்கொள்ளப்படும் மாத்திரைகள் அல்லது ரத்த நாளத்துக்குள் மருந்துகள் செலுத்தி கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அது இந்த பெண்ணுக்கு சாத்தியமில்லாத நிலையில், சிஆா்எஸ் எச்அய்பிஇசி எனப்படும் சிகிச்சை அவருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, முதல்கட்டமாக சிஆா்எஸ் சைட்டோ ரிடக்டிவ் சா்ஜரி எனப்படும் அறுவை சிகிச்சை மூலமாக புற்றுநோய் செல்கள் அகற்றப்பட்டன. அதைத் தொடா்ந்து எச்அய்பிஇசி எனப்படும் உயா்வெப்ப நிலையில் கீமோதெரபி அளிக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது. அதாவது உயா் வெப்பநிலையில் அடிவயிற்றில் மெதுவாக கீமோதெரபி மருந்தை உட்செலுத்தி சிகிச்சையளிக்கப்பட்டது. அதன்மூலம் பிற உறுப்புகளுக்கு புற்றுநோய் செல்கள் பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த சிகிச்சையின் மூலம் அப்பெண் நலம் பெற்றுள்ளாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.
4,092 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்
நாடு முழுவதும் 4,092 எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு, 28 மாநிலங்களில் உள்ள 4,123 எம்எல்ஏக்களின் பிரமாணப் பத்திரத்தை ஆய்வு செய்தது. அதில், 1,205 எம்எல்ஏக்கள் மீது கொலை, கடத்தல் வழக்கு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக ஆந்திராவில் (79 சதவீதம்) 138 எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
75 சதவீதம் வாக்குறுதிகள் நிலுவை: கிரண் ரிஜிஜு
ஒன்றிய அமைச்சர்கள் 2024இல் நாடாளு மன்றத்தில் அளித்த வாக்குறுதிகளில் 75 சதவீதம் நிறைவேற்றப்படவில்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங் கேள்விக்கு, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்தார். அப்போது 2024இல் அமைச்சர்கள் 160 வாக்குறுதிகள் அளித்ததாகவும், அதில் 39 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.