அருண் ஜனார்த்தனன்
கடந்த ஒரு வார காலமாகவே நாடாளுமன்றத்தில் தேசிய கல்விக்கொள்கை காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஹிந்தி மொழி தமிழ்நாட்டின் மீது திணிக்கப் படுவதாக தி.மு.க. ஒரு புறம் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்க, இன்னொரு புறம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றாரே என புலம்பித் தீர்த்துக்கொண்டுள்ளார். பெரியாரின் உட்கருத்து புரிந்துக்கொள்ளப்படவில்லை என்பது தெளிவாகிறது.
பெரியாரின் கருத்து
தமிழ் மொழி குறித்த தனது கருத்துகளை ‘விடுதலை’ நாளிதழில் தொடர்ந்து பதிவு செய்துள்ளார் பெரியார். 1970 ஆம் ஆண்டு டிசம்பர் -1 நாளிதழில் பெரியார் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:
“ஆங்கிலம் வளர்ச்சியடைந்த விஞ்ஞான மொழி என்பதும் தமிழ் வளர்ச்சியடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான் சொல் வதற்கான முக்கிய நோக்கம், தமிழ்மொழி ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும் பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ் மீது எனக்குத் தனி வெறுப்பு எதுவும் இல்லை.”
பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலிருந்து பிறந்ததே திராவிட அரசியல் கொள்கை. தமிழ்நாடு கண்ட பகுத்தறிவு வாதிகளுள், சமூகச் சீர்திருத்த வாதிகளுள் மிகச் சிறந்து விளங்கியவர் பெரியார். நிர்மலா சீதாராமனின் புரிதலற்ற வார்த்தைகள் பா.ஜ.கவின் நிலைப்பாட்டையே பிரதிபலித்துள்ளன. தமிழ் தேசிய உணர்வும் அவரால் இழிவுப்படுத்தப் பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் புதிய விஷயங்களையும், அறிவியல் சார்ந்த உண்மைகளையும் தமிழ் மொழி வாயிலாக மக்களுக்கு கொண்டுச் செல்ல வேண்டும் என்றார் பெரியார். பழம்பெருமையை மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல் புதிய விஷயங்களை தமிழில் கொண்டு வாருங்கள் என்றார். இந்த அடிப்படைக் கருத்து நிதி அமைச்சருக்கு புரியாமல் போனது விந்தை! பெரியார் சொன்னது தமிழ் மொழி மீதிருந்த அக்கறையால் தானே தவிர தமிழை அவமானப்படுத்தவோ, இழிவுப்படுத்தவோ அல்ல.
ஜாதிப் பாகுபாடு
இதிகாசங்கள் மற்றும் புராணங்களைச் சுட்டிக்காட்டி, தமிழ் மொழியில் ஜாதி, மதம் ஆகியவற்றைப் பாது காக்கும் வகையிலான அம்சங்கள் இருப்பதை பெரியார் பல சந்தர்ப்பங்களில் கோடிட்டு காட்டியுள்ளார். மனித வளர்ச்சிக்கும், விஞ்ஞான மனப்பாங்கு வளர்ச்சிக்கும் தமிழ் வழி வகுக்காததை அவர் வெளிப்படையாகவே கூறியுள்ளார். ஜாதி பாகுபாடுகளையும் மூட நம்பிக் கைகளையும் வளர்க்கும் காலாவதியான பக்தி இலக்கியங்களை அவர் சாடியுள்ளார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே அவரு டைய கடுமையான வார்த்தைகளின் உள்நோக்கமாக இருந்துள்ளது.
பழம் பெருமை பேசாதீர்
சமுதாய மாற்றத்திற்கும், சமத்துவம் மற்றும் சுயமரியாதையின் வளர்ச்சிக்கும் உதவும் கருவிகளாக 1949 வரை அவ ருடைய எண்ணமும், எழுத்தும் இருந்தன. ஜாதி பாகுபாட்டுக் கொடுமை உச்சத்தில் இருந்த காலக்கட்டம் அது. தமிழ்மொழியின் பழம்பெருமையை மட்டுமே எல்லோரும் பேசிக் கொண்டி ருக்கிறார்களே என்ற ஆதங்கமும் அவருக்கு அந்தக் காலக் கட்டத்தில் ஏற்பட்டதில் வியப்பில்லை.
1949-இல் தி.மு.க. உருவானபோது அது தமிழ் மொழியையும், திராவிடரின் அடையாளமாகத் தழுவிக் கொண்டது. தமிழ் மொழியின் வளர்ச்சி மீது பெரியாருக்கு இருந்த அக்கறை தி.மு.க. தலைவர் களுக்கும் இயல்பாகவே இருந்துள்ளது.
குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்திற்கும் பெரியார் தலைமை வகித்தார். 1950ஆம் ஆண்டின் ஆரம்பக் காலக்கட்டத்தில் இந்தப் போராட்டம் தீவிரமாக நடந்தது. தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழ்நாட்டில் நடந்த முதல் போராட்டமாக இது இன்றும் நினைவுகூரப்படுகிறது. சமத்துவமின்மை யையும், ஜாதி பாகுபாட்டையும் ஊக்குவிக்கும் கொடுமையாக குலக்கல்வித் திட்டம் இருந்தது. உழவர்களின் பிள்ளைகளும் உழவுத் தொழிலில் ஈடுபடவேண்டும். நாவிதர்களின் பிள்ளை களையும் நாவிதர்களாக்கிவிட வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தி வந்தார்கள். பெரியார் அந்தக் கொடுமையை முளையிலேயே கிள்ளி எறியச் செய்தார்.
மாற்றம் ஒன்றே மாறாதது
தனது திராவிடர் கழகத்தையும் தேர்தல் அரசியலை விட்டு விலக்கியே வைத்திருந்தார் பெரியார். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல் காலத்திற்கேற்றபடி தன் கருத்துகளை அவசியம் ஏற்பட்டால் மாற்றிக்கொள்ள அவர் தயங்கியதே இல்லை. உதாரணமாக – திருக்குறளை சில அம்சங்களுக்காக அவர் விமர்சித்த போதிலும், வேறொரு காலக்கட்டத்தில் அதையே சில சிறப்பான அம்சங்களுக்காக போற்றவும் செய்தார்.
ஹிந்தி எதிர்ப்பு
1938இல் முதல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டக் களத்தில் தமிழ் அறிஞர்களையெல்லாம் ஒருங்கிணைத்துக் கொண்டு போராடினார். சமஸ்கிருதத்தை எதிர்த்துப் போராடியவர் உயர் ஜாதியினரின் ஆதிக்கத்தை கடுமையாகச் சாடினார். தமிழ் மொழி வளர்ச்சி குறித்தும் சிந்திக்கலானார். பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் 1857-ல் சென்னை பல்கலைக் கழகம் உருவானபோது அதில் தமிழ்த்துறையே இல்லாமலிருந்தது. எழுபது ஆண்டுகளுக்குப்பின், 1927 ஆம் ஆண்டில் தமிழ்த்துறை அமைக்கப்பட்டபோது பார்ப்பனர் கூட்டம் அதை எதிர்த்தது. சமஸ்கிருதமே கோலோச்ச வேண்டும் என்று அந்தக் கூட்டம் போராடியது. சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் தமிழ்மொழி ஒரு துணைப்பாடமாகவே இருந்தது. தூயத் தமிழ் இயக்கமாக “தனித்தமிழ் இயக்கம்” மறைமலை அடிகளார் தலைமையில் உருவாயிற்று. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதால், கிறித்துவக் கல்லூரியில் பணியாற்றி வந்த அடிகளார் அந்தப் பணியை தூக்கியெறிந்துவிட்டு வெளியேறினார். பெரியார் அடிகளாரைச் சந்தித்து கொஞ்சம் பணம் தந்து கஷ்டக்காலத்தில் உதவினார். இருவரும் இணைந்துப் போராடி, பல்கலைக்கழகப் பணிகளுக்கும், மருத்துவப் படிப்பிற்கும் சமஸ்கிருதம் அவசியம் என்றிருந்த அவலநிலையைப் போக்கினர்.
உணவக பெயர் எதிர்ப்பு போராட்டம்
பார்ப்பனர்களுக்கு மட்டுமே என்ற வகையில் இருந்த உணவு விடுதிகளை எதிர்த்தும் பெரியார் தலைமையில் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்தன. 1960 வரை அப்படியொரு அவல நிலை இருந்தது. சென்னை திருவல்லிக்கேணியில் ‘முரளீஸ் பிராமணாள் கஃபே’ என்ற உணவகம் பார்ப்பனர் உணவகமாகவே இருந்தது. பெரியாரின் தொண்டர்கள் அந்த உணவகத்தை எதிர்த்து பல மாதங்கள் போராடினர். பெரியார் அந்தப் போராட்டத்தை தீவிரமாக ஆதரித்தார். அதன்பிறகு பார்ப்பனர் உணவகம் என்ற பெயர்ப்பலகை அகற்றப்பட்டது.
19–ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் சைவத் துறவியாக புகழ்பெற்று விளங்கிய வள்ளலார் மீதும் பெரியார் பெருமதிப்பு வைத்திருந்தார். தமிழ்மொழிக்கான ஓர் அடையாளத்திற்காகப் போராடிய வள்ளலார் சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து வந்தார். பெரியாரின் மனக்குரலாக வெளிவந்துக்கொண்டிருந்த ‘குடிஅரசு’ வார இதழில், 1927 ஆம் ஆண்டின் பல இதழ்களில் வள்ளலாரின் பாடல்கள் பலவற்றை பெரியார் வெளியிட்டார்.
தமிழ் வளர்ச்சி
தமிழ்ச் சொற்பொழிவுகளின் வளர்ச்சியை பெரியார் வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. “பிரசங்கம்” என்ற வார்த்தையைத் தூக்கி எறிந்து “சொற்பொழிவு” என்ற சொல்லையே எல்லோரும் பயன்படுத்த வைத்தார் பெரியார். “நமஸ்காரம்” என்ற சொல்லுக்கு மாற்றாக “வணக்கம்” என்றே அனைவரையும் சொல்ல வைத்தவரும் அவர் தான். தற்போது பிரதமர் மோடியே உரையாற்றும் போதெல்லாம் “வணக்கம்” என்று துவங்குவதைப் பார்க்கிறோம். இந்தப் பெருமையும் பெரியாரையே சாரும்.
திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த போதெல்லாம் தமிழ் மொழியின் மாண்பு செழிப் படைந்தது. சமஸ்கிருதம் பின்னடைவை சந்திக்க நேர்ந்தது. “மாயூரம்” “மயில் நகரம்” என்று சமஸ் கிருத மொழியிலிருந்து உருவாகியிருந்தது. 1982 இல் தீந்தமிழில் அது “மயிலாடுதுறை”யாக திராவிடக் கட்சி ஆட்சியாளர்களால் தான் மாறியது. பல திராவிடத் தலைவர்கள் கூட தங்கள் சமஸ்கிருதப் பெயர்களைத் தூயத் தமிழ்ப் பெயர்களாக மாற்றிக் கொண்ட அற்புதமும் காலப்போக்கில் நிகழ்ந்தது. நாவலர் நெடுஞ்செழியனின் இயற்பெயர் நாராயணசாமியாகத் தான் இருந்தது. ராமய்யா அன்பழகனாக மாறினார். சாரங்கபாணியாக இருந்தவர் தன் பெயரை தனது ஆசிரியர் விருப்பப்படி கி.வீரமணியாக மாற்றிக்கொண்டார்.
திருத்தப்பட்ட எழுத்துரு
பொது வாழ்விலும், ஆட்சிக் களத்திலும் தமிழ் மொழிக்கு உரிய இடம் அளித்து அதன் மாண்பை உலகறியச் செய்தவர் பெரியார். தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்து தட்டச்சுக் கலைக்கும் பத்திரிகை வெளியீட்டிற்கும் பேருதவி செய்தவர் அவர். அச்சு ஊடகத்துறைக்கு திருத்தப்பட்ட எழுத்து வடிவங்கள் பெரிதும் பயன்பட்டன. எழுத்துக்களின் எண்ணிக்கை குறைந்தது. தேவையற்ற வடிவங்கள் அகன்றன. அவசரக் காலத்திற்கேற்றபடி எளிமைப்படுத்தப்பட்டுவிட்டது தமிழ் மொழி. பெரியாரைப் பின்பற்றி பல மொழிகளும் இத்தகைய எழுத்துச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. 1978-79 காலக்கட்டத்தில் அதிமுக தலைமையில் எம்.ஜி.ராமச்சந்திரனின் ஆட்சி தமிழ்நாட்டில் நடந்தபோது பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் அங்கீகரிக்கப்பட்டு பத்திரிகை உலகம் அதனை வரவேற்று ஏற்றுக் கொண்டது.
விழிப்புணர்வு
திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நிர்மலா சீதாராமனின் நாடாளுமன்றப் பேச்சுக் குறித்து ‘விடுதலை’யில் பதிலடி கொடுத்துள்ளார். “விடுதலை” நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இயங்கி வரும் அவர் அதைப்பற்றி அந்த நாளிதழில் விளக்கமாக எழுதியுள்ளார்.
“மொழி பற்றிய பெருமையால் மட்டுமே ஒடுக்கப் பட்டவர்களின் வாழ்வில் விடியல் ஏற்பட்டு விடாது என்பது பெரியாரின் கருத்து” என்கிறார் கவிஞர்.கலி.பூங்குன்றன்.
“ஆக்கப்பூர்வமான வளர்ச்சியை தமிழ் மொழி அடையவில்லையே என்ற ஆதங்கம் தான் பெரியாருக்கு இருந்தது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே அவர் அவ்வாறு பேசினார்” என்கிறார் கவிஞர்கலி.பூங்குன்றன்.
அவர் மேலும் இவ்வாறு கூறியுள்ளார்:
“எதேச்சாதிகாரத்தை மொழியால் மட்டுமே அழித்து விட முடியாது என்பார் பெரியார். பார்ப்பனர்களின் ஆதிக் கத்தையே அவர் முக்கியமாக எதிர்த்தார். மதம், கல்வி, அரசாங்கம் ஆகிய களங்களில் பார்ப்பனர் ஆதிக்கம் இருப்பதைத்தான் அவர் தீவிரமாக எதிர்த்தார். அவருடைய சமூகச் சீர்திருத்தப் போர் பிரமிக்கத்தக்கது. தமிழ் மொழிப்போர் அதில் ஒரு பகுதியாக இருந்துள்ளது.”
“பெரியார் ஆங்கிலக் கல்வியைப் பெரிதும் ஆதரித்தவர் ஆங்கிலத்தில் உரையாடிப் பழக வேண்டும் என்பார். சமூகம் என்ற ஏணியின் உச்சத்தை அடைய ஆங்கில அறிவு அவசியம் என்று வலியுறுத்தி வந்தார். வளர்ச்சியடையவும், வாழ்வில் வளம் பெறவும் தமிழ் மொழி மட்டுமே உதவிடாது என்று வாதிட்டவர் அவர். தமிழையும் அந்த வகையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்பது அவரின் கருத்தாக இரு்நதது. அவருடைய முற்போக்குக் கருத்துகள் வளர்ச்சியை நோக்கியது. இன்று எல்லோரும் ஒப்புக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது’’ என்கிறார் கவிஞர் கலி.பூங்குன்றன்.
நன்றி: “இந்தியன் எக்ஸ்பிரஸ்” (டில்லி பதிப்பு)
மொழியாக்கம்: எம்.ஆர். மனோகர்
“மாயூரம்” “மயில் நகரம்” என்று சமஸ் கிருத மொழியிலிருந்து உருவாகியிருந்தது. என்று தவறாகக் குறிக்கப்பெற்றுள்ளது. மயிலாடுதுறைதான் மாயவரம் ஆயிற்று. இணையப்பதிப்பிலாவது திருத்துங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தமிழா விழி, தமிழே விழி.