‘‘தமிழர் நிதி நிர்வாகம் தொன்மையும், தொடர்ச்சியும்’’ எனும் தலைப்பில் மிக அரியதோர் ஆவணக் கருவூலத்தைக் கொண்டு வந்துள்ளது ‘திராவிட மாட’லாம் தி.மு.க. அரசு.
இந்த ஆவணத்தை சில நாட்களுக்குமுன் நமது முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். (18.3.2025)
ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு 319 பக்கங்களைக் கொண்ட இந்த ஆவணம் ஒவ்வொருவர் வீட்டிலும் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
‘சங்க காலம் முதல் சமூகநீதிக் காலம் வரையிலான தமிழர்களின் வரலாற்றுச் சித்திரத்தைத் தீட்டும் நூல் இது. பண்டைய வணிகம், வரி விதிப்பு முறைகள், நிதிக் கொள்கைகள், காலனியக் கால நிதி நிர்வாக நடைமுறைகள், நவீன தமிழ் நாட்டின் நிதி நிலை அறிக்கைகள் ஆராயப்பட்டுள்ளன. அரிய தகவல்களும், தரவுகளும் நிறைந்திருக்கும் இந்நூல், பல்வேறு நூற்றாண்டுகளாகத் தமிழர் நிர்வாகம் உருவாகி வந்த வரலாற்றையும், தமிழ் நிலத்தின் பொருளாதார அடையாளம் வடிவமைக்கப்பட்ட விதத்தையும் குறித்த ஆழமான கண்ணோட்டத்தை வழங்குகிறது.
தமிழர்களின் நிதி நிர்வாகத்திலும் தமிழ்ப் பண்பாடு உண்டு. தனித்துவம் உண்டு என்பதை எடுத்துரைக்கும் ஆவணம் – ‘‘காத்தலும் வகுத்தலும் வல்லது அரசு’’ என்ற முகப்புரையோடு தொடங்கப்படும் இந்நூலில் அணி வகுத்து நிற்கும் அத்தனையும் அணிகலன்களாகும்.
தி.மு.க. ஆட்சி என்பதால், அதன் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறைகள், செயல்பாடுகள் மட்டும் என்கிற அளவில் குறுக்குப் பார்வை இல்லாமல் பல்வேறு ஆட்சிக் கால கட்டத்திலும், என்னென்ன திட்டங்கள், எத்தகைய அணுகுமுறைகளால் செயலாக்கம் செய்யப்பட்டுள்ளன என்று அரிதின் முயன்று சேகரிக்கப்பட்ட கொள்கலனாக இது காட்சியளிக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர்கள், நிதி அமைச்சர்கள், நிதித்துறைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் வரை அனைவரின் ஒளிப்படங்களும் அணி வகுத்து நிற்கின்றன.
வெறும் பொருளாதாரம் என்ற பல்லவியைப் பாடாமல், சமூக நலத் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, எதிர்கால விளைச்சலுக்கான விதைத் தூவல்கள் என்பதைப் புரிய வைக்கிறது – இப்பெட்டகம்.
‘‘ஆளும் அரசானது முக்கியமான சமூக நலத் திட்டங்கள் குறித்த அறிவிப்பை நிதி நிலை அறிக்கையிலேயே அறிவித்திடும் போதில் திட்டத்தின் முக்கியத்துவமும் விளங்கும்’’ என்று நமது மாண்புமிகு முதலமைச்சர் அளித்துள்ள முன்னுரை அதனைத் தான் விளக்குகிறது.
குறிப்பாக ‘மதிய, காலை உணவுத் திட்டங்கள் ; ஒரு நூற்றாண்டுப் புரட்சி’’ என்ற கட்டுரை கவனத்துக்குரியது.
நீதிக்கட்சியே இதற்கான அடிக்கல்லை நாட்டியது – வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் சென்னை மாநகராட்சியின் தலைவராக இருந்தபோது ஒரு மாணவருக்கு ஓர் அணா செலவில் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு அளித்த வரலாற்று வரிகள் எல்லாம் இக்கருவூல நூலில் மின்னுகின்றன (பக்கம் 207).
அடுத்தடுத்துப் பரிணாமம் பெற்று, இன்றைய சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் எதிர்கால சந்ததிகளுக்கான வளமான விளைச்சலாகும்.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் இந்தியாவுக்கே முன்மாதிரியென்று நோபல் அறிஞர் அமர்த்தியா சென் எடை போட்டுச் சொல்லியிருப்பதும் இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளது (பக்கம் 373).
‘‘தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம்’’ என்ற திட்டம் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் மூளையில் உதித்த உதாரண திட்டம் பற்றிய கட்டுரை குறிப்பிடத்தக்கது.
பிறப்பால் பேதம் பேசும் ஒரு சமுதாயத்தின் பிற்போக்கு இருட்டை விரட்டும் தந்தை பெரியாரின் சிந்தனையைச் சார்ந்த அரும் பெரும் திட்டமாகும்.
‘‘சமத்துவப்புரங்களில் மத அல்லது சமூகத் தலைவர்களின் சிலைகளை நிறுவக் கூடாது (தந்தை பெரியார் பெயரில் இத்திட்டம் இருப்பதால் தந்தை பெரியார் சிலை என்பது விதி விலக்கு!) 15 ஆண்டுகளுக்கு வீடுகளை விற்கவோ, அடகு வைக்கவோ கூடாது. ‘பொது இடுகாட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும். தனி வழிபாட்டுத்தலங்களை உருவாக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. விதிகள் மீறப்பட்டால் சொத்து கையகப்படுத்தப்படும். இத்தகைய ஒப்பந்தத்தை எழுத்துப் பூர்வமாக மாவட்ட ஆட்சியர் பெற்றுள்ளார்’’ என்ற பகுதிகள் அடிக்கோடிட்டுக் காட்டத் தக்கவையாகும்.
பாக்கள் அடங்கியது தான் காவியம் என்று எண்ணக் கூடாது. தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள இந்நூலும் தலை சிறந்த காவியமே!