மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் உரை
மதுரை, மார்ச் 20 ஜாதியால், நிறத்தால், வர்க்கத்தால் வரக்கூடிய வேறுபாடுகள் மறைந்து மனிதர்கள் ஒன்றாகவேண்டும் என்று விரும்பியவர் தந்தை பெரியார் என்றார் மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம்.
சமூகநீதி, கல்வி, வேலைவாய்ப்பு, பெண்ணுரிமை ஆகியவற்றிற்கு
என்ன செய்தார் பெரியார்?
மதுரை கே.புதூர் பேருந்து நிலையத்தில் 7.3.2025 அன்று மாலை 7 மணிக்கு சமூகநீதி, கல்வி, வேலைவாய்ப்பு, பெண்ணுரிமை ஆகியவற்றிற்கு என்ன செய்தார் பெரியார்? எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
பெரியார் பெருந்தொண்டர் புதூர் பாக்கியம் தலைமை ஏற்றார்.இரா.அழகுப்பாண்டி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியை தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.செல்வம். ஒருங்கிணைத்தார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.எடிசன்ராசா, மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம், மாவட்டச் செயலாளர் இரா.லீ.சுரேசு ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மாணவர் கழக அமைப்பாளர் சி. தேவராஜ பாண்டியன் பேசினர். மாவட்டத் துணைத் தலைவர் இரா.திருப்பதி, கூட்டத்தின் கடைத்தெரு பரப்புரையில் நன்கொடை திரட்டும் பணியோடு தொடக்கத்தில் நிகழ்காலம் செய்திகளைக் குறிப்பிட்டு பேசினார். அனைத்து பணிகளுக்கும் பெரும் துணையாக இருந்த திமுக மாமன்ற உறுப்பினர் தா.ஜெயராஜ், தன் உரையில், ‘திராவிட மாடல்‘ ஆட்சியின் சிறப்புகளையும், தந்தை பெரியாரால் தமிழர்கள் பெற்ற முன்னேற்றத்தையும் குறிப்பிட்டார்.
மதிமுக தொழிலாளரணி இணைப் பொதுச் செயலாளர் மகபூப்ஜான், திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் இராம.வைரமுத்து, மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தினுடைய செயலாளர் பாவலர் சுப.முருகானந்தம், மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு, வே.செல்வம் ஆகியோர் உரையாற்றினர்.
சே.மெ.மதிவதனி உரை
தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர் மட்ட செயல்திட்டக் குழு உறுப்பினர் பொன்.முத்துராமலிங்கம் அவர்கள் உரையாற்றினார்.நிறைவாக திராவிடர் கழ கத்தின் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
எவருக்கும் மறுப்பு சொல்வதற்காக இந்தக் கூட்டம் இல்லை. நீதிக்கட்சியை ஆழக்குழி தோண்டிப் புதைப்பேன் என்றவர்கள் புதைந்து போனவர்கள். தந்தை பெரியாரை ஒழிப்பேன் என்றவர்கள் காணாமல் போனார்கள். வெறும் கல்லாக்கட்டுபவர்களை பற்றிப் பேச நாங்கள் இங்கே வர வில்லை.
இருமொழிக் கொள்கைதான்…
தந்தை பெரியாருக்குப். பின்னால் இயக்கம் இருக்காது என்றார்கள்.அன்னை மணியம்மையார் இராவண லீலாவையே நடத்தினார்.அவருக்குப் பின்னால் திராவிடர் கழகம் இருக்காது என்றார்கள். பார்ப்பனர்கள் இவரிடமிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தள்ளி இருக்கவேண்டும் என்று சொல்லுகிற அளவிற்கு ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் செயல்பாடுகள் இருக்கிறது.அரசியல் களத்தில் அண்ணாவும் அய்யாவும் பிரிந்து விட்டார்கள். இராஜாஜியோடு அண்ணா கூட்டு வைத்துக்கொண்டார்.இனி இராஜாஜி எண்ணப்படிதான் ஆட்சி நடக்கும் என்று நினைத்தார்கள். ஆனால், இந்த ஆட்சி தந்தை பெரியாருக்கு காணிக்கை என்று அண்ணா அறிவித்தார்.சுயமரியாதைத் திருமணத்தை சட்டமாக்கினார்.இருமொழிக் கொள்கைதான் என்று சட்டம் இயற்றினார்.அவருக்குப் பின்னால் கலைஞர் கரு ணாநிதி,அவருக்குப் பின்னால் இன்றைய சமூக நீதி சரித்திர நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர்ச்சியாக தந்தை பெரியார் கொள்கைகளை சட்டமாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.இன்றைய முதலமைச்சரைப் பார்த்து, பார்ப்பனர்களே, ‘‘இவர் கலைஞரை விட மோர் டேஞ்சர்’’ என்று சொல்லும் அளவிற்கு அவரின் ஆட்சி இருக்கிறது.
பிறப்புமுதல் இறப்பு வரை
இன்றைக்கும் கூட மகளிர்தினம் என்றால் கோலப்போட்டி, எலுமிச்சம்பழம் எடுக்கும்போட்டி நடத்தும்போது ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன்னால் பெண்களை குஸ்தி கற்றுக்கொள்ளுங்கள், இவற்றில் பெண்களுக்குப் போட்டி வையுங்கள் என்று சொன்னவர் தந்தை பெரியார். தந்தை பெரியாரை விமர்சிப்பதற்கு சுய புத்தி வேண்டும்.
தந்தை பெரியார் சமூக நீதி வேண்டும் என்றார், பெண்ணுரிமை வேண்டும் என்றார். இது எல்லாம் கல்வி கிடைத்தால் கிடைக்கும் என்றார். படிப்பு வந்தால் சுயமரியாதை வரும்.சுயமரியாதை வந்தால் நான் ஏன் அடிமையாக இருக்கவேண்டும் என்னும் கேள்வி வரும்.அதனால் கல்வி வேண்டும் என்றார். இவ்வாறு மதிவதனி உரையாற்றினார்.
மேனாள் அமைச்சர்
பொன்.முத்துராமலிங்கம் உரை
கூட்டத்தில் மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் பேசியதாவது:
தந்தை பெரியார் அவர்கள் பற்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் சுருக்கமாக பெரியார் ஒரு சகாப்தம் என்று குறிப்பிட்டார். தந்தை பெரியார் ஒரு காலகட்டம், தந்தை பெரியார் ஒரு திருப்புமுனை. எனவே தந்தை பெரியார் அவர்களை ஒரு சகாப்தம் எனச் சொல்வதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். எங்களுக்கு இருக்கிற பெருமை எல்லாம் நாங்கள் தந்தை பெரியார் காலத்தில் வாழ்ந்தோம், தந்தை பெரியார் அவர்களுடைய சொற்பொழிவுகளைக் கேட்டோம். தந்தை பெரியார் அவர்களுடைய பகுத்தறிவுச் சிந்தனை எங்களைக் கவர்ந்தது. தந்தை பெரியார் வழியில் நடக்க வேண்டும் என்று எண்ணினோம், கருதினோம். அவர் வழியைப் பின்பற்றி நடந்து கொண்டே இருக்கிறோம் என்பதுதான்.
30 ஆவது வயதில் நான் வழக்குரைஞராக பணி யாற்றிக்கொண்டிருந்தபோது, வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றி யத்தின் தலைவராக, அந்தப் பகுதி மக்களின் விருப்பப்படி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது தந்தை பெரியார் அவர்கள் வந்தபின்புதான் எனது பணிகளைத் தொடங்க வேண்டும் என்பது எனது உள்ளக்கிடக்கை. அதனால் தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். கடிதம் என்றால் இன்லன்ட் லெட்டரில் கடிதம்.இன்லென்ட் லெட்டர் அப்போது அது ஒரு பச்சை கலரில் இருக்கும். நீங்கள் வந்து தான் எனது பணிகளை தொடங்க வேண்டும் என்று எழுதி கீழே இப்படிக்கு சுயமரியாதை தொண்டன் என்று எழுதி அனுப்பி இருந்தேன் இந்தக் கடிதம் போய்ச் சேருமா கடிதத்தை தந்தை பெரியார் படிப்பாரா என்ற அய்யப்பாடு எல்லாம் அப்போது இருந்தது எனக்கு.
ஆனால், அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு, தேதியும் கொடுத்துவிட்டு சரியாக நாங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் மேடைக்கும் தந்தை பெரியார் அவர்கள் வந்து விட்டார்.
மனிதர்கள் ஒன்றாகவேண்டும் என்று விரும்பியவர்
தந்தை பெரியார் அவர்கள் ஒரு சகாப்தம். தந்தை பெரியாருக்கு முன்னால் சமூக சீர்திருத்தவாதிகள் இருந்தார்கள்.ஆனால், அவர்கள் வெற்றி கொள்ளமுடியாததை பெரியார் வெற்றி கொண்டார்.எங்கேங்கே வேறுபாடுகள் இருந்தாலும் அந்த வேறுபாடுகள் எல்லாம் களையப்படவேண்டும் என்று எண்ணியவர் தந்தை பெரியார் அவர்கள். ஜாதியால் வரக்கூடிய வேறுபாடுகள் ,நிறத்தால் வரக்கூடிய வேறுபாடுகள்,வர்க்கத்தால்,இனத்தால் இப்படிப் பல்வேறு வகையில் வரக்கூடிய வேறுபாடுகள் எல்லாம் மறைந்து மனிதர்கள் ஒன்றாக வேண்டும் என்று விரும்பியவர் தந்தை பெரியார்.அதற்காக உழைத்தவர் தந்தை பெரியார்.
உலகம் பெரியார் மயமாக வேண்டும். தந்தை பெரியார் தத்துவம் அப்படிப்பட்ட ஓர் உயர்ந்த தத்துவம். இந்தக் கருத்துகள் பரவுவதற்கு ஒரு நிறுவனத்தை நிறுவி, நிறுவனம் ஆக்கி, இன்றைக்கும் அது தொடர்கிறது என்றால் அது தந்தை பெரியாரின் தொலைநோக்கு.. அவர் பெரும் சொத்துடையவர். அது பொது நோக்கத்திற்காகப் பயன்பட வேண்டும் என்று விரும்பினார். அதனால் அதை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.யார் இந்தக் கொள்கையை எடுத்துச் செல்வார்கள், யார் இந்தக் கொள்கையில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர் ,ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் யார் என்பதைத் தேர்ந்தெடுத்து அவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார் அதனால் தான் அந்த நிறுவனம் இன்றைக்கும் உயிரோட்டத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு துணைப் பொதுச்செயலாளர் மதிவதினிவரை ஓர் உயிரோட்டமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றால் அது யார் செயல்படுவார் என்று தேர்ந்தெடுத்து அதைத் திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் வழங்கிய காரணத்தினால்தான்.
இன்றைக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு,தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக்கு ஆசிரியர் கி.வீரமணி அவர்களும்,திராவிடர் கழகத்துத் தோழர்களும் மிகப்பெரிய அரணாக இருக்கிறார்கள்.பாதுகாவலாக இருக்கிறார்கள்.பெரியார் உலக மயம்,உலகம் பெரியார் மயம் என்று ஆசிரியர் வீரமணி அவர்கள் உழைத்துக்கொண்டிருக்கிறார்.வாழ்த்துகிறேன்’’ என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.
இவ்வாறு மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் ச.சரவணபுவனேஸ்வரி கூட்டம் சிறப்பாக நடைபெற நன்கொடை வழங்கி துணை நின்றதோடு, நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.மேலும்.மந்திரமா தந்திரமா அறிவியல் விழிப்புணர்வாளர், புரபசர் சுப.பெரியார்பித்தன்,திராவிட முன்னேற்றக்கழக பகுதி செயலாளர் புண்ணிய மூர்த்தி,வட்டச்செயலாளர்கள் வி.சி.மாதவன், ஆர்.ஆர்.மகேந்திரன்,
மாமன்ற உறுப்பினர் அந்தோணியம்மாள் ராயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கூட்டம் சிறப்புடன் நடைபெற பகுதி வர்த்தகர்களிடம் துண்டறிக்கை பரப்புரை செய்து நன்கொடை பெற்ற இராலீ.சுரேஷ் இரா.திருப்பதி. ச.அழகு பாண்டி பொ. பவுன்ராஜ், க. சிவா, வேல்துரை பேக்கரி கண்ணன், தனுஷ்கோடி,காசி மாரிமுத்து ஆகியோருக்கு மதிவதனி ஆடை அணிவித்து பாராட்டினார். சி.மகேந்திரன், அ.வேங்கைமாறன் நா. முருகேசன், ச.பால்ராஜ், வீர.பழனிவேல்ராஜன், ஆசிரியர் அழகுமீனாள், அ.இராஜா, பா.சடகோபன், ஓய்வுபெற்ற சிறைத்துறைஅதிகாரி கலையரசன்,நா.மணிகண்டன் சு.மணிராஜ், அ.அல்லிராணி, பாக்ய லட்சுமி,கமல்சந்திரன்குடும்பத்தினர், மகேஸ்வரன்,முரளி, அமர்நாத், மசு.மோதிலால் தனசேகரன்,ஜேஎஸ்மோதிலால், பெத்தானியாபுரம் பாண்டி, சேகர், மதுரை மாநகரத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டனர்.