அறிவியல் மொழியாக வளர்ச்சி பெற வேண்டும் என்ற பொருளில் தந்தை பெரியார் தமிழைப்பற்றிக் கூறினால், வானத்திற்கும், பூமிக்குமாகத் தாவிக் குதிக்கும் பேர்வழிகள், தமிழ்மீது பற்றுள்ளவர்கள்போல பாசாங்குப் பேசும் பார்ப்பனர்கள் பூஜை வேளையில் தமிழ்ப் பேசினால் தீட்டாகிவிடும் என்று காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறியது குறித்து கூடையில் கவிழ்க்கப்பட்ட கோழிக் குஞ்சுபோல் பம்முவது ஏன்?
சங்கராச்சாரியாரின் அத்தியந்த ஆலோசகர் – தூதுவர் அக்னிேஹாத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் கூறுவதைக் காது கொடுத்துக் கேளீர்! கேளீர்!!
‘‘தமிழை, தமிழ்ப் பண்பாட்டு அடிப்ப டையிலான இலக்கியத்தை ‘பாவை மாநாடு‘ என்ற பெயரில் உற்சவமாக தொடங்கி வைத்தார் மகாபெரியவர். அப்படிப்பட்டவர் ஏன் என்னோடு உரையாடும்போது சமஸ்கிருதத்தில் உரையாடுகிறார் என்ற சந்தேகம் உங்க ளுக்குள் உயிர்த்தியிருக்கும்.
இதே சந்தேகத்தைத்தான் அன்று திரு விடைமருதூர் சத்திரத்தில் உள்ளவர்களும் கேட்டார்கள். நான் சொன்ன ‘ஸ்நான‘ பதில் அவர்களுக்குப் புரியவில்லை.
அவர்கள் புரிந்துகொள்ளும்படியாக மடத்தில் நடந்த ஓர் உண்மை சம்ப வத்தையே அவர்களிடம் அறிவித்தேன். அது…
கும்பகோண மடம்… சூரியன் வானத்தின் மேற்குப் பக்கமாய் மேய்ந்து கொண்டிருந்தான். மஞ்சள் நிற கதிர்கள் பூமியின்மீது பொலபொலவென உதிர்க்கின்றன. ஒருவிதமான ஊதல் காற்று கும்பகோணத்தையே குளிப்பாட்டிக் கொண்டிருந்தது.
அந்த நாளுக்கான மாலைநேர பூஜை களுக்காக மடம் தயாராகிக் கொண்டிருந்தது. மகாபெரியவர் ஸ்நானம் முடித்திருந்தார். மதியம் சிறிது நேரம் தூங்கினால்கூட ‘மடி‘ அதாவது ஆச்சாரம் போய்விடும். மறுபடியும் குளித்தாகவேண்டும். அந்த வகையில், குளித்து முடித்துவிட்டிருந்தார். மகாபெரியவர்.
அந்த நேரமாய் பார்த்து ஒரு சில பக்தர்கள் அவரைப் பார்த்தே தீருவது, அருளாசி பெற்றே தீருவது என்ற முடிவில் காத்திருந்தார்கள். அவர்களில், நாட்டுக்கோட்டை செட்டிநாட்டிலிருந்து வந்திருந்த அருணாசலம் என்ற பக்தர், மகாபெரியவரைப் பார்த்து அவரிடம் அருள்மொழி வாங்கிவிட்டுத்தான் போவது என்ற உறுதியோடு இருந்தார்.
அந்தநேரம், நானும் மடத்தில் இருந்த தால், அருணாசலத்திடம் சொன்னேன், ‘இதோ பாரப்பா, இன்றைக்கு நீ மகாபெரி யவரை பார்க்க முடியாது. நாளை வாயேன்…’ என்றேன்.
‘இல்லை, சாமி இப்பவே அவரை பார்க்கணும்’ என்றார் பக்தர்.
எங்கள் பேச்சுச் சத்தத்தைக் கேட்ட சிலர்… விஷயத்தை மகாபெரியவரிடம் சொல்ல, அவர் என்னை உள்ளே அழைத்தார்.
போனேன். கேட்டார். சொன்னேன். ‘‘இதோ பாரும் தாத்தாச்சாரி, அவரை பாக்கறதுக்கு நேக்கு ஒண்ணுமில்லை… பார்த்தால் ஏதாவது கேப்பார், பதிலுக்கு நான் தமிழ் பேசவேண்டிவரும். நோக்குத்தான் தெரியுமே, தமிழ் பேசினால் எனக்கு தீட்டு, மறுபடியும் ஸ்நானம் பண்ணனும். பூஜைக்கு நேரமாயிடுத்துல்யோ…. அதனால் நான் மவுனம் அனுஷ்டிக்கிறேன்னு சொல்லி அனுப்ச்சிடுங்கோ…’’
என என்னோடு சமஸ்கிருத சம்பா ஷணை நிகழ்த்தினா மகாபெரியவர்.
நானும் வெளியே வந்தேன். ‘நான் சொன்னதுதானப்பா… சுவாமிகள் மவு னத்தில் இருக்கார். நாளைக்கு வாயேன்…’ என்றேன்.
‘அப்படியா? தெய்வத்தை இன்னிக்கே பார்க்கலாம்னு எதிர்ப்பார்ப்போட வந்தேன். சரி, நாளைவரை ஏதும் சத்தி ரத்தில் தங்கிவிட்டு வர்றேன்’ – என தாய்மொழியாம் ‘தமிழில்’ மகாபெரியவரை தெய்வமாக மதித்து ஆதங்கப்பட்டுக் கொண்டே சென்றார் அருணாசலம்.
ஆதாரம்: ‘இந்து மதம் எங்கே போகிறது?’
அக்னிேஹாத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், பக்கம் 95–97
பார்த்தீர்களா, பார்த்தீர்களா?
இந்தப் பார்ப்பனர்களுக்குத்தான்– சங்கராச்சாரியார் உள்பட தமிழைப் பற்றிய அவர்களின் எண்ணம் எதுவாக இருக்கிறது என்பது புரிய வில்லையா?
ஸ்நானம் செய்து பூஜைக்குச் செல்லும் காலத்தில், தமிழில் சங்க ராச்சாரியார் பேசினால், தோஷம் – தீட்டு வந்து குதிக்குமாம்!
இந்தக் கூட்டம்தான் தமிழ் அறிவியல் மொழியாக வளர்க்கப்பட வேண்டும் என்கிற நோக்கில் தந்தை பெரியார் கூறிய கருத்துக் குறித்துத் திசை திருப்புகிறார்கள்!