சென்னை, மார்ச் 19- பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பெற்றோர் ஆசிரியர் கூட்டம் மார்ச் 26இல் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி அளவில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அந்தவகையில் அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் மார்ச் 26ஆம் தேதி நடத்தப்பட வேண்டும். இந்த கூட்டங்களில் பாலியல் தீங்குகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் குழந்தைகளிடம் பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் மற்றும் பாலியல் தொந்தரவுகள் குறித்தும், அதிலிருந்து அவர்களை பாதுகாப்பது குறித்தும் விவாதிக்க வேண்டும். மேலும், பிரச்சாரங்கள் வாயிலாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுதவிர, பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை உருவாக்க தேவையான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். பாலியல் துன்புறுத்தல் குறித்து நம்பிக்கையானவர்களிடம் தெரிவிப்பது மற்றும் அதுகுறித்து புகார் அளிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஏற்படுத்தவேண்டும். தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கொண்ட மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு, மாணவர் மனசு பெட்டி, மாணவர்களின் உடல்நலன் குறித்தும் இந்த கூட்டங்களில் பேசப்பட வேண்டும். இந்த கூட்டத்தை சிறந்த முறையில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு மார்ச் 26 – பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
Leave a Comment