இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசு எப்போதும் பயன்படுத்தும் ‘ரூ’ என்பதை நிதி நிலை அறிக்கையின் தலைப்பாக பயன்படுத்தியது. இதில் தவறொன்றும் இல்லை, அரசமைப்புச் சட்ட விதிமீறலும் இல்லை.
ஆனால் இது ஊடகத்தில் பேசு பொருளாக மாறிய பிறகு ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல் தமிழ்நாடு பாஜகவினர் வரை புலம்பித் தள்ளுகின்றனர்.
நிர்மலா சீதாராமன் இந்தகுறியீட்டை வைத்தது, தேசத்துரோகம் பிரிவினைபுத்தி என்றுகூறும் அளவிற்கு கோபத்தின் உச்சிக்குச் சென்றுவிட்டார்.
தாய்மொழியில் ‘ரூ’ என்று குறிப்பிடுவது என்ன அவ்வளவுப் பெரிய குற்றமா?
இந்த ‘ரூ’ வந்த வரலாறு இன்றல்ல, நேற்றல்ல,
கி.பி. 1200-களின் துவக்கத்திலேயே உருவாகிவிட்டது.
கடல் மார்க்கமாக அரபு வணிகர்கள் இந்தோனேசியா மற்றும் மலேசியா சென்ற போது அங்கு பணப் பரிமாற்றத்திற்கு ருபியா (rupiah) என்ற சொல் பயன்படுத்துவதைக் கண்டனர். அவர்களுக்குச் சொல்வதற்கு எளிமையாக இந்தச் சொல் இருந்தமையால் தங்களது பணத்தைக் குறிக்கும் அசரபியா, தினார், தெர்கம் உள்ளிட்டச் சொற்களை விடுத்து கிழக்காசியத் தீவுப்பகுதிகளில் ருபியா என்றே பயன்படுத்தினர்
அன்று ஹிந்தி அல்ல ஈரானியர்களின் பார்சி மற்றும் துருக்கியர்களின் மொழி, இதில் பணத்தை ‘அசரபியா’, ‘தினார்’, என்று அழைத்தனர். இந்தியாவில் சாமானியர்கள் சிக்கா, கிமத், சோனா சிக்கா, சாந்தி சிக்கா, என்று அழைத்துவந்தனர்.
தமிழ்நாட்டில் ‘பணம்’ என்று அழைத்த கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. பண்டமாற்று முறை 1900 வரை இருந்தது, கிராமங்களில் இனிப்பு நெல்பொரி ஓலை பெட்டியில் கொண்டு வருவார்கள்.
அதற்கு ஒருபடி நெல் அல்லது உளுந்து கொடுத்தால் ஒரு படி இனிப்பு நெல்பொரி கொடுப்பார்கள். அதே போல் இறைச்சி கருவாட்டிற்கு நெய் அல்லது பாசிப்பயறு போன்றவை கொடுப்பார்கள். இது தமிழ்நாட்டில் சமீபகாலம் வரை இருந்துவந்த நிலை. இன்றும் தமிழ்நாட்டில் பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதிகளில் வனங்களில் கிடைக்கும் தேன் மற்றும் இதர வணிகப் பொருள்களுக்குப் பதிலாக மளிகைச்சரக்கு பொருட்களைதரும் வழக்கம் உள்ளது.
சுல்தான்கள் இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்டபோது பொதுவான சொல்லாக பயன்படுத்த ‘ரூ’பையே என்று அழைத்தனர்.
டில்லியை ஆண்ட ஆஃப்கன் சுல்தானான ஷேர் ஷா சூரி (1540 – 1545)யின் காலத்தில்தான் முதன் முதலில் வெள்ளியில் ருபியா என்ற பெயரில் நாணயம் வெளியிடப்பட்டது. தற்போதைய நவீன ரூபாயின் முன்னோடி இதுதான்” என்கிறது இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளம்.
அதன் பிறகு முகலாயர்கள் “நிதி ரீதியாக நாணயங்களை வெளியிடுவதில் ஒரே மாதிரியான தன்மையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தினர்.
அக்பரின் காலகட்டத்தில்தான் நாணயங்களில் ‘ரூபியா’ என்ற வார்த்தையைப் பதிக்கத்துவங்கினர். 18ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் காசுகளை அச்சிட ஆரம்பித்தது. கொல்கத்தா, பம்பாய், மெட்ராஸ் ஆகிய 3 இடங்களிலிருந்தும் வெவ்வேறு விதமான காசுகள் அச்சிடப்பட்டன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 1840 வாக்கிலேயே விலைகளைக் குறிப்பிட ‘ரூபா’ என்று அச்சிடும் முறை இருந்திருக்கிறது. பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலுக்கான உரை நூல் ஒன்று 1840இல் வெளியானது. அந்த நூலின் முகப்புப் பக்கத்திலேயே விலையைக் குறிக்க ‘ரூபா’ என்ற சொல் இடம் பெற்றிருக்கிறது.
அதே ஆண்டு, வெளியான ‘சேந்தன் திவாகரம்’ என்ற நூலின் அட்டையில் விலையை குறிக்க சுருக்கமாக ‘ரூ’ என்ற எழுத்து குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தின் அட்டையிலேயே ‘தோலால் கட்டப்பட்ட பிரதியின் விலை 2 ரூபாய்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
‘கட்டாத பிரதியின் விலை ஒன்றரை ரூபாய்’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகங்களில் எண்கள் தமிழ் எழுத்துகளால் எழுதப்பட்டிருக்கின்றன.
ஆனால், புத்தகங்களுக்கு முன்பாக ஓலைச் சுவடிகளிலேயே ‘ரூ’ என்ற எழுத்து பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
தரங்கம்பாடியில் அமைந்திருக்கும் கோட்டை 1845இல்தான் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியிடம் வழங்கப்பட்டது என்றாலும் நீண்ட காலமாகவே, ஆங்கில ஆதிக்கத்துக்கு உட்பட்டே கோட்டையில் இருந்த டேனிஷ் ஆளுநர்கள் செயல்பட்டுவந்தனர். 1815இல் நெப்போலியனின்… வீழ்ச்சிக்குப் பிறகு பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்ெபனி நிர்வாக நடைமுறைகள் டேனிஷ் கோட்டைக்குள்ளும் வந்துவிட்டன. ஆகவே, ஆவணங்கள் அனைத்தும் பிரிட்டீஷாரின் செலாவணியை வைத்தே எழுதப்பட்டன. தொகையைக் குறிப்பிடும்போது ‘சென்னைப் பட்டணம் கும்பினி ரூபாய்’, ‘மதராசி ரூபாய்’ என குறிப்பிடப்பட்டன.இந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த பல காகித ஆவணங்களும் ஓலைச் சுவடிகளும் பிற்காலத்தில் சேகரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டன. இங்கிருந்த ஓலைச் சுவடிகளை கல்வெட்டு ஆய்வாளரான சீ. ராமச்சந்திரன் தொகுத்தார்.
அதனை தமிழ்நாடு தொல்லியல் துறை தரங்கம்பாடி ஓலை ஆவணங்கள் என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டது. அதில் பெரும்பாலான ஓலைச் சுவடிகளில் ரூபாயைக் குறித்த ‘ரூ’ என்ற எழுத்து எழுதப்பட்டிருக்கிறது. இங்கே படத்தில் உள்ள ஓலைச் சுவடி, 1831ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருக்கிறது.
பஞ்சநதி என்பவரிடம் அய்யாவு என்பவர் 20 ரூபாய் கடன் வாங்கியதை இந்த ஓலையில் பதிவுசெய்துள்ளனர். இந்தக் காலகட்டத்தில் கிடைத்த ஓலைகள் அனைத்திலும் ‘ரூ’ என்ற எழுத்து ரூபாயைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அதன் பிறகு 20 ஆம் நூற்றாண்டில் ஒட்டுமொத்த இந்தியாவிலும் ‘ரூ’ அறிமுகமானது – அதை சமஸ்தானங்களும் ஏற்றுக்கொண்டன.
‘ரூ’ என்று பணத்தைக் குறிக்கும் சொல் தமிழ்நாட்டில் அறிமுகமாகி 200 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இன்றும் பேருந்து பயணச்சீட்டுகள், தமிழ்நாடு அரசு ஆவணங்கள் அனைத்திலும் ‘ரூ’ தான் பயன்பாட்டில் உள்ளது. அப்படிப் பயன்பாட்டில் உள்ள எழுத்தை தமிழ்நாடு அரசு நிதி நிலை அறிக்கையின் தலைப்பில் பயன்படுத்தி உள்ளது அவ்வளவே.
இதற்கு முன்பு வெளிவந்த அனைத்து தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையிலும் ரூ. என்றே குறிப்பிட்டு வந்துள்ளது. நிதி அமைச்சர் கூட தன்னுடை தமிழ் பதிவுகளில் ரூ என்றே குறிப்பிட்டுள்ளார்.
2019-2020 ஆம் ஆண்டுக்கான கோவை மாநகராட்சி நிதி நிலை அறிக்கையின் முகப்பிலும் ‘ரூ’ தான் உள்ளது.
நிர்மலா சீதாராமன் இன்றுவரை ‘ரூ’ என்றுதான் தமிழில் குறிப்பிடுகிறார்.
அண்ணாமலையும் தன்னுடைய பதிவுகளில்
‘ரூ’ என்று தான் குறிப்பிடுகிறார்.
வேண்டுமென்றால் இனிமேல் அவர்கள் ‘ரூ’ என்பதை தந்திரமாக பயன்படுத்தாமல் ஹிந்தி எழுத்தை பயன்படுத்துவார்கள்
எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆட்சி மாற்றம் வந்த பிறகு தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டது. மத்திய என்பது வடமொழிச் சொல் மேலும் டில்லியில் உள்ள அரசு மத்தியில் உள்ள அரசு கிடையாது, இந்திய ஒன்றியங்களின் முக்கிய துறைகளை நிர்வாகிக்கும் பொதுவான ஓர் அரசு – அதை ஆங்கிலத்தில் ‘யூனியன் கவர்மெண்ட்’ என்றுதான் அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. அதனை தமிழில் ‘ஒன்றிய அரசு’ என்று அழைப்பதுதான் முறை.
இதையே தமிழ்நாடு ஒன்றிய அரசு என்று அழைத்த உடன் இங்கிருந்த எச். ராஜாமுதல் டில்லியில் உள்ள தமிழ் அமைச்சர்கள் வரை என்ன ஒன்றியம் என்று புலம்பித்தள்ளினார்கள். அப்போதும் ஒன்றியம் என்று அரசு குறிப்பிடுவது தேசவிரோதம் என்றனர்.
மத்திய என்பது வடமொழிச் சொல் ஆகும். ஒன்றிய அரசுக்கும் மத்திய என்ற சொல்லுக்கும் தொடர்பே இல்லை, இங்குள்ள தமிழ் நாளிதழ்கள் டில்லி அரசைக் குறிக்க மத்திய அரசு என்று எழுதிமக்களிடையே கொண்டு சென்றுவிட்டனர் அவ்வளவே,
பா.ஜ.க.வினருக்கு தமிழ்மீது உள்ள காழ்ப்புணர்வும் எரிச்சலும் தான் ‘ரூ’ என்று எழுதினாலும் தேசப்பிரிவினை என்கின்றனர். ஒன்றிய என்று எழுதினாலும் பிரிவினைவாதி என்கின்றனர்.
தாய்மொழியில் எழுதுவது எப்படி பிரிவினையாகும் என்று நிர்மலா சீதாராமனிடமும் தமிழ்நாடு பாஜக வினரிடமும் கேட்க வேண்டும்!
– சரவணா ராசேந்திரன்