* ஆஸ்திரேலியாவில் அன்றாடம் நமது கொள்கைப் பிரச்சாரப் பணியை தொடர்ந்துகொண்டே இருக்கிறோம்!
* பெரியார் உலக மயமாகும் பணியில் ஒரு காலக்கட்டம் இது!
* கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்ற 47 ஆம் ஆண்டில், எமக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி! நன்றி!!
மதவெறியை மாய்த்து- மனிதநேயம் காத்திட தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் கருத்துகள்தான் அருமருந்து!
ஆஸ்திரேலியாவிலிருந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
உலகம் பெரியார் மயம், பெரியார் உலக மயமாகும் திசையில் எமது ஆஸ்திரேலியா பயணமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நமது ‘திராவிட மாடல்‘ அரசின் கொள்கை உறுதியும், உறுதுணையும் முக்கியமானது; அதனைப் பாதுகாப்பது நமது கடமை. மதவெறியை மாய்த்து மனிதநேயம் காக்க தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கரின் கருத்துகள்தான் அருமருந்தாகும். கழகத் தலைமைப் பொறுப்பேற்ற 47 ஆம் ஆண்டில் எமக்கு ஒத்துழைப்பும், ஊக்கமும் அளித்த கழகத்தினருக்கும், அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ஆஸ்திரேலியாவின் கேன்பெர்ராவிலிருந்து விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பாசத்திற்குரிய கொள்கை உறவுகளே,
திராவிடப் பற்றாளர்களே,
பகுத்தறிவாளர்களே,
உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்களும், கனிவான நலம் விசாரிப்புகளும்!
கேன்பெர்ரா (ஆஸ்திரேலியா)விலிருந்து எழுதுகிறேன்!
இன்று (19.3.2025) ஆஸ்திரேலியா நாட்டுத் தலைநகரமான கேன்பெர்ரா (Canberra) விலிருந்து எழுதுகிறேன். கடந்த இரண்டு வாரங்களாக ஆஸ்திரேலியா நாட்டுப் பெருநகரங்களான சிட்னி, பிரிஸ்பேன், கோல்டுகோஸ்ட் ஆகிய ஊர்களில் பெரியார் – அம்பேத்கர் சிந்தனையாளர் வட்டத்தின் சார்பில் சிறப்பான பல நிகழ்ச்சிகள், வரவேற்புகள், கழகக் குடும்பங்களின் உபசரிப்பு, விருந்தோம்பல், அன்பு – பாசம் பொங்கும் அன்புப் பொழிதலைப் பெற்று, அடுத்து மெல்போர்ன் முதலிய பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவிருக்கிறோம்!
பெரியார் – அம்பேத்கர் சிந்தனையாளர் வட்டம் ஆஸ்திரேலியா பொறுப்பாளர்கள் – அதன் தலைவர் தோழர் மகிழ்நன் அண்ணாமலை அவர்களின் சிறந்த தலைமையில், நல்ல ஒழுங்கிணைந்த பணி செய்து, நாளும் அதன் பலத்தை, தொடர் செயல்பாடுகள்மூலம் வளர்த்துக் கொண்டே வருகின்றனர்.
கழகப் பிரச்சார செயலாளர் உள்பட எங்கள் பிரச்சார குழுவினர் சென்ற நகரங்கள், ஊர்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள், சந்திப்புகள், வரவேற்புகளில் குடும்பம் குடும்பமாகவே பங்கேற்று, எங்களது பிரச்சாரப் பணிக்கு நல்ல ஊக்கமளித்து வருகின்றனர். கொள்கை உணர்வோடு பேசுகிறார்கள் இங்குள்ள தமிழர்கள் – திராவிட இயக்க உணர்வாளர்கள்!
உலகம் பெரியார் மயமாகிறது!
பயணக் களைப்போ, சோர்வோ எமக்கு ஏற்படாத அளவிற்கு, அவர்களது அன்பு, பாசம், கொள்கை ஆர்வம் எமக்குப் புதிதாகக் கிடைத்துள்ள ‘‘கீழடி புதைபொருள்’’போல கிடைத்துள்ளது.
‘‘பெரியார் உலகமயமாகிறார் –
உலகம் பெரியார் மயமாகிறது’’
என்பதற்கு அருமையான சான்றாவணமாக இயக்கத்திற்கு அவை அமைந்துள்ளன.
இங்குள்ள திராவிட உணர்வாளர்கள் தமது கொள்கைப் பெரு வெளிச்சத்தினை கட்டுக்கோப்பாகப் பரப்பி வருவதில் வற்றாத ஆர்வத்துடன் செயல்படுகிறார்கள்.
சிட்னி, பிரிஸ்பேன், மெல்பெரின் ஆகிய ஊர்களைத் தலைமையிடமாக்கி, வானொலிகளில் இதுவரை 3 பெரு வானொலி நிறுவனங்கள் நேர்காணல் பேட்டிகள் எடுத்தன – ஒலிபரப்பி வருகிறார்கள். கேள்விகள் கேட்போர், ஒலிபரப்புவோர், கேட்போர் உள்ளிட்ட பலரும் நல்ல தெளிவு பெற நல்வாய்ப்பாக அவை அமைந்துள்ளன.
அடுத்தாண்டு உலகப் பன்னாட்டு சுயமரியாதை மாநாடு ஆஸ்திரேலியாவில்!
சுயமரியாதை மாநாடுகளை ஜெர்மனி – கொலோன், அமெரிக்கா – மேரிலாண்டு, கனடா – டொரெண்டோ போன்ற நகரங்களில் பெரியார் பன்னாட்டமைப்பு நடத்திய உலகப் பன்னாட்டு சுயமரியாதை மாநாடு ஒன்றை இங்கு உள்ள திராவிட உணர்வுத் தோழர்கள் நடத்த விரும்புகின்றனர். அடுத்த ஆண்டு நடத்திட பெரியார் பன்னாட்டமைப்பினரை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
‘‘இங்கே நமது கொள்கை எதிரிகளும், திராவி டப் பண்பாட்டை அழிக்க விரும்புவோரும், கோவில்களையே தங்களது கிளைகளாக்கி, பக்தி மயக்க மருந்துமூலம் பழைய வர்ணாசிரமத்தினைப் புகுத்தி, காவிக் கொள்கையை, மதவெறியைப் பாய்ச்சி வேரூன்றிட நினைக்கிறார்கள். மதவெறியை மாய்த்து, மனிதநேயம் காத்திட அதற்கு ஒரே மாற்று மருந்து, தடுப்பூசி – பெரியார் அம்பேத்கர் கருத்தாக்கம்தான் – அவற்றைப் பரப்புவதுதான்’’ என்று ஆர்வத்துடன் வற்புறுத்தி வருகிறார்கள்.
திசையெட்டும் திராவிடத்தின் ஒளி பரவி வருகிறது!
மும்மொழி எதற்கு?
இதுவரை கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர்கள்; இப்போது தேவைப்பட்டால் களப் போராளிகளாகவும் மாறுவோம் என்று முழங்குகிறார்கள் – அதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு சிட்னியிலும், பிரிஸ்பேன் நிகழ்விலும் ‘‘எங்கள் செம்மொழி இருக்கையில், மும்மொழி எதற்கு?’’ ‘‘இருமொழிக் கொள்கை இருக்கையில், பண்பாட்டுத் திணிப்புமூலம் மும்மொழித் திணிப்பு ஏன்?’’ என்று பதாகைகளைப் பிடித்து அருமையாக அறவழி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அய்யா – அம்மாவின்
தொண்டறப் பணிகள்!
நம் அறிவாசான் தந்தை பெரியார் உடலால் மறைந்து 52 ஆண்டுகள் ஓடிவிட்டன.
அவருக்குப் பின் அய்யாவை 95 ஆண்டுகால வயது வரை காத்த நம் அன்னை மணியம்மையார் அவர்கள் 5 ஆண்டுகள் தலைமை தாங்கி, களப்போராளியாகவும் கடமையாற்றி மறைந்து 47 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன!
அதன்பின், இந்த எளியவனிடம் அந்தப் பொறுப்பை சுமத்தி, 47 ஆண்டுகள் முடிந்து நிறை வடைந்துள்ளது.
நமது இயக்கத்திற்குக் காவல் அரண்களான கழகத் தோழர்களின் கட்டுப்பாடு காரணமாக, எதிர்நீச்சல் அடித்து, அவதூறுகளைத் தாண்டி நமது
இயக்கம், அய்யா அவர்கள் தொடக்க காலத்தில் அறிவித்ததுபோலவே, உலகளாவிய கொள்கை அமைப்பாக பரவி வருகிறது!
மானுடநேயம், சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, உரிமைக்குக் குரல் கொடுத்தல் போன்ற பணிகள் தொடருகின்றன.
நமது ‘திராவிட மாடல்’ அரசின் கொள்கை உறுதி!
இவற்றிற்கெல்லாம் துணை நிற்க ‘திராவிட மாடல்‘ ஆட்சி தமிழ்நாட்டில் துணிவுடன் கொள்கை எதிரிகளை களத்தில் சந்திக்கத் தயாராக உள்ளது. நமது ஒப்பற்ற முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆற்றல்மிக்க திராவிட ஆட்சி கொள்கை முத்திரையுடன் சிறப்புடன் அமைந்த சீர்மிகு ஆட்சியாக நடைபெறுகிறது.
இன எதிரிகளும், கொள்கை எதிரிகளும் கதிகலங்கி, ‘‘கூலிப்படைகளை‘‘ப் பிடித்து விபீடணர்களின்மூலம் அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள்.
அவை எங்களது திராவிடப் பயிர்களுக்கான உரங்களாக மாறி வருகின்றன.
‘‘92 வயதிலும் இப்படி பிரச்சாரமா?’’ என்று கூறு கின்றவர்களுக்கு, நன்றியோடு நான் 48 ஆவது ஆண்டில் கழகத் தலைவராக அடியெடுத்து வைக்கும் நிலையில்,
உலகக் கழகக் குடும்பத்தினருக்கும்,
‘திராவிட மாடல்’ ஆட்சிக்கும் நன்றி!
நம் கொள்கை எதிரிகள் புறமுதுகிட்டு ஓடிட, ஈடு இணையற்ற நமது ‘திராவிட மாடல்‘ ஆட்சிக்குத் தரும் தொல்லைகளைத் தகர்க்க, களத்தில் கட்டுக்கோப்பாகப் பணியாற்றி, ‘‘திராவிடத்தை அசைத்துப் பார்க்க எந்தக் கொம்பனாலும் முடியாது’’ என்ற பறையொலிக் கொட்ட, திராவிடப் பண்பாட்டையும், அதனைக் காக்க நாளும் உழைக்கும் நமது முதலமைச்சரையும், ஆட்சியையும் பாதுகாத்திட, தந்தை பெரியார் என்ற மகத்தான தத்துவத்தின் காலத்தை வென்ற கருத்தாக்கங்களைப் பரப்பி, எமது வாழ்வு முடியும்வரை களப்பணி, கழகப் பணியை அயர்வின்றி செய்ய உறுதியளித்து, என்றும் ஆதரவு தரும் எமது உலகக் கழகக் குடும்பத்தினருக்கும், ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கும்
நன்றி! நன்றி!! நன்றி!!!
முகாம்: கேன்பெர்ரா (ஆஸ்திரேலியா)
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
19.3.2025