சென்னை, மார்ச் 19- கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் நிர்ணயிக்கப்பட்ட ஒரு லட்சம் வீடுகள் மே மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும் என்று அமைச்சர் அய்.பெரியசாமி தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்தில் அதிமுக உறுப்பினா் செல்லூா் கே.ராஜூ பேசினார்.
1 லட்சம் வீடுகள்
அப்போது இது தொடா்பாக நடைபெற்ற விவாதம்: செல்லூா் கே.ராஜூ: நிதிநிலை அறிக்கையின் 20-ஆவது பக்கத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், ரூ.3,500 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்துக்கு பாதிக்கும் குறைவாகவே நிதி விடுவிக்கப்பட்டது.
அமைச்சா் அய்.பெரியசாமி: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதில் 50 ஆயிரம் வீடுகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. 40 ஆயிரம் வீடுகளுக்கு மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வீடு கேட்கும் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
மே மாதத்துக்குள்
கட்டி முடிக்கப்படும்
ஆனால், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பசுமை வீடுகள் திட்டத்தில் அவா்களது கட்சியினருக்கு மட்டுமே வீடுகள் ஒதுக்கப்பட்டன. மேலும், அவா்களது ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு லட்சம் வீடுகள் முழுமையாக கட்டப்படவில்லை.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் நிர்ணயிக்கப்பட்ட ஒரு லட்சம் வீடுகளும் மே மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும். மக்களால் வரவேற்கப்படும் திட்டமாக கனவு இல்லம் திட்டம் உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவா்
எடப்பாடி கே.பழனிசாமி: ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 3 லட்சம் பசுமை வீடுகள் கட்டப்பட்டன. அவரது மறைவுக்குப் பிறகு, ஆண்டுதோறும் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டன. இப்போது நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது. அதைத்தான் எங்கள் உறுப்பினா் சுட்டிக் காட்டினார்.
குறைவான தொகை செலவிடப்பட்டதால், முழுமையாக வீடுகள் கட்டி முடிக்கப்படவில்லை என்பதையே தெரிவித்தார்.
அமைச்சா் அய்.பெரியசாமி: ஒரு திட்டத்துக்கு தொகை முழுவதையும் எடுத்து வைத்துக் கொண்டு செயல்படுத்துவதில்லை. மேனாள் முதலமைச்சராக `இருந்த உங்களுக்கு (எடப்பாடி கே.பழனிசாமி) நன்றாகத் தெரியும்.
வருவாய் வர வர திட்டங் களுக்காக நிதி ஒதுக்கி செயல்படுத்து கிறோம். எந்தெந்த கிராமங்களில் எவ்வளவு வீடுகள் கட்டப்படும் என்பது குறித்த அறிக்கையை வெளியிடத் தயாராக உள்ளேன். திட்டத்துக்கான நிதி தொடா்ந்து வழங்கப்படும்.
செல்லூா் கே.ராஜூ: நிதிநிலை அறிக்கையில், 6,100 கிமீ நீளமுள்ள கிராமச் சாலைகள் ரூ.2,200 கோடியில் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 6,100 கிமீ சாலையை அமைக்க இவ்வளவு நிதி எப்படி போதுமானதாக இருக்கும்?
அமைச்சா் அய்.பெரியசாமி: முதல்வா் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ், ரூ.4 ஆயிரம் கோடியில் 10 கிமீ நீள கிராமச் சாலைகள் பிரதான சாலைகளுடன் இணைக்கப்பட்டன. இத்துடன், பிரதமரின் கிராமச் சாலைத் திட்டப்படி ரூ.1,900 கோடியும், நபார்டு வங்கியிடம் கடன் பெற்றும் சாலைகளை அமைத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.