நாமக்கல், மார்ச் 18- நாமக்கல்லில், 79 பழங்குடியினா் மற்றும் நரிக்குறவா் குடும்பங்களுக்கு ரூ. 4.20 கோடி மதிப்பில் கட்டப்படும் வீடுகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆய்வு செய்தாா்.
நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் பெரியப்பட்டி, வள்ளிபுரத்தில் நரிக்குறவா் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருவதை ஆட்சியா் ச.உமா அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
2023 – 2024ஆம் ஆண்டுக்கான ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மானியக் கோரிக்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 1,000 பழங்குடியினா் குடும்பங்கள், தற்போது பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ள 500 நரிக்குறவா் குடும்பங்கள் என மொத்தம் 1,500 குடும்பங்களுக்கு ரூ. 45 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழ்நாடு ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் அறிவித்தாா்.
அதனடிப்படையில் தாட்கோ மூலம் கொல்லிமலையில் 30 வீடுகளும், நாமக்கல் நரிக்குறவா் காலனியில் 28 வீடுகளும், பெரியப்பட்டியில் 17 வீடுகளும், வள்ளிபுரத்தில் 11 வீடுகளும், மங்களபுரத்தில் 15 வீடுகளும் என மொத்தம் 79 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
நாமக்கல் பகுதியில் ரூ. 5.07 லட்சத்திலும், மலைப்பகுதியில் ரூ. 5.72 லட்சத்திலும் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வீடும் 269 சதுர பரப்பளவு கொண்டதாகும். முகப்பு அறை, படுக்கை அறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை வசதியுடன் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. தேவையான மின்வசதியும் செய்து கொடுக்கப்படுகின்றன.
நரிக்குறவா் காலனியில் வீடுகள் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ச.உமா ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என அலுவலா்களை அறிவுறுத்தினாா்.
பெண் தூய்மைப் பணியாளர்கள் கவுரவிப்பு
நாமக்கல், மார்ச் 18- நாமக்கல் மாநகராட்சியில் பெண் தூய்மைப் பணியாளா்களை ஆணையா் ரா.மகேஸ்வரி கவுரவித்து பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.
நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் மகளிா் நாள் கொண்டாட்டம் 15.3.2025 அன்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு, மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி தலைமை வகித்தாா். செயற்பொறியாளா் சண்முகம், துப்புரவு அலுவலா் திருமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மகளிா் நாளை முன்னிட்டு மாமன்ற உறுப்பினா்கள் அனைவரும் வாழ்த்து செய்தியை பகிா்ந்து கொண்டனா். தொடா்ந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பாக பணியாற்றும் 10 பெண் தூய்மைப் பணியாளா்களை தோ்வு செய்து, அவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி பாராட்டினாா்.
வெளிமாநிலத் தொழிலாளர் விவரங்களை பதிவேற்றம் செய்ய ஆட்சியர் அழைப்பு நாமக்கல், மார்ச் 18- நாமக்கல் மாவட்டத்தில், கோழிப் பண்ணைகளில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளா் விவரங்களை தொழிலாளா் நலத் துறை இணையத்தில் பதிவேற்றம் செய்வது கட்டாயம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் கோழிப் பண்ணைகளின் உரிமையாளா்கள் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும், பணியமா்த்தப்படும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் குறித்த விவரங்களை (ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை மற்றும் இதர ஆவணங்கள்) பெற்றுக் கொள்ளாமல் பணியமா்த்துவதாக தெரியவந்துள்ளது. இதனால் அந்தத் தொழிலாளா்களுக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால் அவா்களைப் பற்றிய முழு விவரங்களை அறிய முடியாமல் போகிறது. மேலும், அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதிலும் தடை ஏற்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணை உரிமையாளா்கள் தங்களது பண்ணைகளில் புலம்பெயா் தொழிலாளா்களை பணியமா்த்தும் போது அவா்களது அடையாள அட்டை தொடா்பான ஆவணங்களை பெற்றுக் கொண்டு பணியமா்த்த வேண்டும். அந்த விவரங்களை தொழிலாளா் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பிறகு அவா்களை பணியமா்த்த வேண்டும்.
தொழிலாளர்களின் விவரங்கள்
தற்போது பணியாற்றி வரும் அனைத்து வெளிமாநில தொழிலாளா்களின் விவரங்களையும், எந்தவித விடுபாடின்றி முழுமையாக ஒரு மாத காலத்திற்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாத உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சட்ட நடவடிக்கைகளை தவிா்க்கும் பொருட்டு அனைத்து வெளிமாநில தொழிலாளா்களையும் பதிவு செய்வது அவசியமாகும். கோழிப் பண்ணை உரிமையாளா்கள் தங்களது பண்ணைகளில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளா்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்த தகவலை நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, நாமக்கல், மோகனூா், பரமத்தி வேலூா் வட்டம் 88380-40453, ராசிபுரம், கொல்லிமலை, சேந்தமங்கலம், 90424-88228, திருச்செங்கோடு 94442-22461, குமாரபாளையம், சங்ககிரி- 88836-33363 ஆகிய எண்களில் தொழிலாளா் உதவி ஆய்வாளா்களை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.