சென்னை, மார்ச் 18- ‘நேரடி சாட்சிகள் இல்லாவிட்டாலும் குற்றத்தை நிரூபிக்க கண்காணிப்பு கேமரா காட்சிகள் போது மானதாகும்’ என தீர்ப்பு கூறி உள்ள சென்னை நீதிமன்றம், பழக்கடையில் தகராறில் ஈடுபட்ட 4 பேருக்கு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பழக்கடையில் தகராறு
சென்னை தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலையில் அல்லி என்பவர் பழக்கடை நடத்தி வந்தார்.
கடந்த 1.5.2023 அன்று இவரது கடைக்கு வந்த பள்ளிக்கரணை காமாட்சி நகரைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 35). மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் (38), மணிவண்ணன் என்ற செந்தில் (40) வினோத் (31) ஆகியோர் பழங்கள் வாங்கி சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் அங்கி ருந்து செல்ல முயன்றனர்.
கடையில் வேலை பார்த்த மன்மோகன் சிங் என்பவர் பணம் கேட்ட போது, அவரை ஆபாசமாக திட்டி மிரட்டிய அவர்கள் கடையை சேதப்படுத்தி சோடா பாட்டில்களை தூக்கி எறிந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர், அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பாண்டி பஜார் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
தண்டனை வழங்க வேண்டும்
இந்த வழக்கு விசாரணை சென்னை 19ஆவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி ராஜ்குமார் முன்னிலையில் நடந்தது.
காவல் துறையினர் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் அரசு வழக்குரைஞர் தனசேகரன், ‘இந்த சம்பவத்தை நேரில் பார்த்த கடை ஊழியர் மன்மோகன்சிங் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வில்லை என்ற போதிலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா காட்சிகள் தெளிவாக உள்ளது. எனவே, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்’ என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்ப தாவது:-
இந்த வழக்கில் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியான மன்மோகன் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கவில்லை. இருந்தாலும் குற்றவாளிகள் குற்ற செயலில் ஈடுபடுவது கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி உள்ளது.
கண்காணிப்பு கேமரா காட்சிகள்
பட்டப்பகலில் பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற குற்ற சம்பவங்களில் இருந்து பொது மக்களை பாதுகாக்க வேண்டி யது நீதிமன்றத்தின் கடமை.
இதுபோன்ற குற்ற சம்பவங்களை கண்டு கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது. நாகரிக சமூகத்தில் இதை அங்கீகரிக்க முடியாது.
நேரடி சாட்சியம் இல்லாவிட் டாலும், குற்றத்தை நிரூபிக்க கண்காணிப்பு கேமரா காட்சிகள் போதுமானதாகும். எனவே, குற்ற செயலில் ஈடுபட்ட வெங்கடேசன் உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதிக் கப்படுகிறது.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.