நாவலர் இரா. நெடுஞ்செழியன்
1931இல் கூடிய காங்கிரஸ் இந்துஸ்தானி இந்தியாவின் பொது மொழியாக வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. ஒரு சபையின் தீர்மானத்தால் நிறைவேற்றப்பட்ட மொழி இந்துஸ்தானியைத் தவிர வேறு எதுவாகவும் இருந்திருக்க முடியாது, இந்துஸ்தானியைப் பற்றிச் சொல்லப்பட்டதும், மொழிப்பிரச்சினையில் ஈடுபட்டிருந்த இரு சாராருமே அதை வியப்புடன் கவனித்தார்கள். எவரும் எதிர்பார்க்கவில்லை. இந்துஸ்தானி என்றால் என்ன? அதைப் பற்றி ஒவ்வொருவருங் கொடுத்த பதில் வேடிக்கையாக இருந்தது.
காந்தியார்
இந்துஸ்தானி பிரச்சாரத்திற்கு முதல் காரணமாக இருந்த காந்தியார் அந்த மொழிக்குரிய நிலைமைகளைக் கூறுகிறார்:-
“(1) நமது பொதுமொழி இந்துஸ்தானி என்று அழைக்கப்பட வேண்டும். இந்தி என்று அழைக்கப்படக் கூடாது.
(2) இந்துஸ்தானியை எந்த மதத்தையும் சார்ந்தவொரு மொழியாகக் கருதக் கூடாது.
(3) ‘அந்நிய மொழியா’, ‘சொந்த மொழியா’ என்று பாராது வழக்கிலுள்ள சொற்களை எடுத்துக்கொள்ள வேண்டும்,
(4) இந்தி எழுத்தாளர்கள் வழங்கும் உருதுசொற்களையும், உருது எழுத்தாளர்கள் வழங்கும் இந்தி சொற்களையும் அப்படியே எடுத்துக்கொள்ளவேண்டும்.
(5) கலைச் சொல்லாக்கத்தில் குறிப்பாக அரசியல் சொற்றொடர்களில் சமஸ்கிருத சொற்களை மட்டும் மிகுதியாக எடுத்துக் கொள்ளாமல், உருது, இந்தி, சமஸ்கிருதம் மூன்றிலிருந்தும் சொற்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
(6) தேவநாகரி, அரபி என்ற இரண்டு வரி வடிவங்களையும் இந்துஸ்தானியை எழுதுவதற்கும் பயன் படுத்தலாம். இந்துஸ்தானியைப் பரப்புபவர்கள் இரண்டு வரி வடிவங்களுக்கும் (லிபிகளுக்கும்) வசதிகள் செய்ய வேண்டும்”.
இவ்வாறு காந்தியார் காட்டியுள்ள விதிகளைக் கவனித் தால் பொது மொழித்தகராறு எவ்வளவு தூரம் முற்றிவிட்டது என்பதை விளக்கும்.
உருது மொழிக்கெதிராக
காங்கிரசிலும், காங்கிரசைச் சார்ந்த பிரச்சார – செயல் அமைப்புகளிலும், உருதுவுக்கு எதிராக இந்திப் பிரச்சாரமே வலுத்திருந்தது. உருது மொழியாளருக்கு இந்தப் பிரச்சாரம் பிடிக்கவில்லை. காங்கிரசுக்கு வெளியிலிருந்தோர் இந்தி – உருது சண்டையை முக்கிய பிரச்சினையாகக் கொண்டு வாதாடினார்கள். எனவேதான் இந்தியைப் பொது மொழியாகக் கூறக்கூடாது என்றும், இந்துஸ்தானியே இந்தியாவின் பொதுமொழி என்றும். காந்தியார் அறிவித்தார்.
காந்தியார் கொடுக்கும் 2ஆவது விதியால் இந்தி – உருது சண்டை மதவேற்றுமைகளைக் கிளப்பி விட்டதுடன், அரசியல் பொது வாழ்வைப் பயமுறுத்தும் அளவுக்கு வளர்ந்து விட்டது என்பது நன்கு விளங்கும்.
மொழிச்சண்டை
இந்துஸ்தானிக்குரிய சொற்களைப்பற்றி 3, 4 விதிகளில் கூறப்பட்டிருப்பவைதான் வேடிக்கையாக இருக்கின்றன. சொற்களைத் தேர்ந்தெடுக்கும் வகை, இருசாராரையும் சமாதானப்படுத்தும்படியாக இருக்கவேண்டும் என்பதற்காக அந்த விதிகளைச் சேர்த்திருக்கிறார். நடைமுறையில் இந்தி, உருது பண்டிதர்களை அழைத்து, இந்தி இலக்கியத்திலிருக்கும் உருதுச் சொற்களையும், உருது இலக்கியத்திலிருக்கும் இந்திச் சொற்களையும் கணக்கெடுக்கும்படி கூறியிருந்தால், மிகக்குறைந்த அளவுக்குத்தான் சொற்கள் கிடைத்திருக்கும். ஒரு சொல்லை எடுத்துக்கொண்டால் அது தனது மொழிக்குத்தான் சொந்தமுடையது என வாதித்திடத் தோன்றும். இந்த விருப்பு, வெறுப்புகளைத் தாண்டி மிகுந்திருக்கும் சொற்கள் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையினவாகவே இருக்கும். உண்மையில் மொழிச் சண்டை ஏற்படுவதற்குமுன் கணக்கெடுத்திருந்தால் இரண்டுக்கும் பொதுவாகப் பல சொற்கள் இருந்திருக்கும். மொழிச் சண்டை வளர்ந்த பின் இந்திமொழியில் சமஸ்கிருதச் சொற்களும், உருது மொழியில் பாரசீக – அரபிச் சொற்களும் அதிகமாக சேர்க்கப்பட்டதால், பொதுச் சொற்கள் வலுக்கட்டாயமாக இருதரப்பினராலும் குறைக்கப்பட்டன. இந்தச் சொல்லாராய்ச்சியை ஆரம்பித்து, ஒரு தனிப்பட்ட சொல்லை வைத்துக் கொண்டு அது எம்மொழியைச் சார்ந்தது என்று விவாதிக்கத் தொடங்கினால், இருதரப்பினரும் பொதுவான மொழி வேற்றுமைக்காகப் போராடுவதை விடுத்து ஒவ்வொரு சொல்லுக்கும் ‘இந்தி சொல்லா?’ ‘உருதுச் சொல்லா?’ என்று சண்டையிட ஆரம்பித்திருப்பார்கள். இந்துஸ்தானிக்குரிய சொற்களைத் தேர்ந்தெடுக்கும் வேலை இம்முறையில் தொடங்கியிருந்தால், காந்தியார் கனவு கண்ட சமரசத்திற்குப் பதிலாக, சச்சரவே இன்னும் விரைவாகவும் மிகவாகவும் கிளம்பியிருக்கும்.
இந்துஸ்தானியின் நிலையைப்பற்றி ஜவஹர்லால் நேரு கொடுக்கும் விளக்கம் மேலும் தெளிவுபடுத்துவதாக இருக்கிறது. அது வருமாறு:
புது விளக்கம்
“இந்துஸ்தானி என்றால் என்ன? உத்தேசமாக இந்தி – உருது இரண்டையும் உள்ளடக்கி, இரண்டு லிபிகளிலும் எழுதப்படுவதாய், இரண்டு பிரிவுகளுக்கும் மத்தியஸ்தமாக அமைக்க விரும்பும் நல்லெண்ணத்திற்கு இந்துஸ்தானி என்று பெயர்.”
இந்த விளக்கத்தை மொழிநூல் வல்லுநர்கள் யாராவது கேள்விப்பட்டால் உள்ளபடியே திகைத்துப் போய்விடுவார்கள். அந்த அளவுக்கு மொழி நூல், இலக்கணத்திலேயே காணப்படாத புது விளக்கமாக அமைந்திருக்கிறது.
இந்துஸ்தானியை விவரிக்கவந்த அனைவரும், இந்தி-உருது சச்சரவைக் கண்டித்து, இந்து-முஸ்லிம் பிணக்கினால் நாட்டுக்கு உண்டாகும் கெடுதலை விளக்கி இருவகுப்பினரும் ஒற்றுமையாக வாழ வேண்டுவதின் அவசியத்தை வற்புறுத்தி அவ்விரு பிரிவினரையும் சமாதானப்படுத்த இந்துஸ்தானி இருவருக்கும் பொதுவான மொழி என விளம்பரப்படுத்தினார்கள். இக்கருத்து கொண்டுதான் 1931இல் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் பொதுமொழிக்கு இந்துஸ்தானி எனப் பெயர் சூட்டினார்கள்.
பிரச்சாரம்
உருது மொழியை அப்புறப்படுத்த மறைமுகமாகச் செய்யப்படும் சூழ்ச்சிதான் இந்துஸ்தானி பிரச்சாரம் என்று உருது மொழியாளர்கள் எதிர்த்தார்கள். உருது மொழியினருக்குப் பயந்து செய்யப்படும் காரியமென, இந்தி மொழியாளர்கள் இந்துஸ்தானி தீர்மானத்தை ஏற்க மறுத்தனர். தீர்மானத்தைக் காங்கிரஸ் நிறைவேற்றியதும், அதன் கட்சியினராவது உறுதியாக இந்துஸ்தானி தீர்மானத்தைக் கடைப்பிடித்தார்களா ? அதுவும் இல்லை. இந்தி-உருது இவைகளுக்கு இடைப்பட்டதாக இந்துஸ்தானி கூறப்பட்டதே தவிர, இந்திப் பிரச்சாரம் எள்ளளவும் தடைப்படுத்தப் படவில்லை. காங்கிரஸ் தலைவர்களும் காங்கிரஸ் ஆதரவில் வளர்க்கப்பட்ட இந்திப் பிரச்சார சபைகளும், காந்தியார் தலைமை பூண்ட இந்தி சாஹித்ய சம்மேளனமும் தத்தம் இந்திப் பிரச்சாரத்தை வலுப்படுத்தினார்களே யொழிய குறைத்துக் கொள்ளவில்லை. கேள்விகேட்ட நிலையில் பதிலளிக்கும்போது மட்டும் இந்துஸ்தானி என்ற சொல் பயன்படுத்தப் பட்டதே தவிர, மற்றபொழுதுகளில் வெளிப்படையாகவே இந்திப் பிரச்சாரம் காங்கிரஸ் தலைவர்களால் செய்யப்பட்டது. 1937இல் காங்கிரஸ் மாகாணங்களில் மந்திரிசபை அமைத்தும் இந்திக் கல்வி கொண்டுவரப்பட்டது. குறிப்பாகச் சென்னை மாகாணத்தில் கட்டாயமாகக் கொண்டுவரப்பட்டது. 1931இல் நிறைவேற்றப்பட்ட காங்கிரஸ் தீர்மானத்தைக் காரணமாகக் காட்டியபோதிலும், உண்மையில் இந்திதான் கட்டாயப் பாடமாக்கப்பட்டது. இந்துஸ்தானி என்ற பெயருக்குச் செல்வாக்கு ஏற்படவில்லை.
காற்றில் பறந்த தீர்மானம்
காங்கிரசின் இந்துஸ்தானி தீர்மானத்தை காங்கிரஸ் காரர்கள் காற்றில் பறக்க விட்டுவிட்டு, இந்திப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். என்பதை மற்றொரு எடுத்துக்காட்டால் விளக்கிக்காட்ட முடியும். காங்கிரஸின் தீர்மானத்தைக் காங்கிரஸ் நிறைவேற்றத் தவறியதுடன், அதைப் புறக்கணிக்குமளவுக்கு இந்திப் பிரச்சாரத்தில் காங்கிரஸ்காரர்கள் கலந்து கொள்வதைத் தடுக்க டாக்டர் அஷ்ராப் 1938இல் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் தீர்மானம் கொண்டுவந்தார். இந்திப் பிரச்சாரத் தில் காங்கிரஸ்காரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்பது தீர்மானத்தின் நோக்கம். தீர்மானம் பெருவாரியான ஓட்டுக்களால் தோற்கடிக்கப்பட்டுவிட்டது.
இந்தி-உருது என்று சண்டையிடக் கூடாது; இந்துஸ்தானிதான் பொது மொழியாக வேண்டும் எனக் கிளப்பிய அதே காங்கிரஸ், இந்துஸ்தானியைக் கைவிட்டு இந்தியை மேற்கொண்டது.
இந்தி-உருது சண்டை வளர்ந்துகொண்டே செல்லுகை யில், உருது மொழியை ஆதரித்து 1938இல் லக்னோவில் கூட்டிய முஸ்லிம்-லீக் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. 1938 டிசம்பர் 18ஆம் நாள் உருதுமொழித் தினமாகக் கொண்டாடப்பட்டது. வட இந்தியாவில் இந்தி-உருது போராட்டம் அரசியல் விவகாரங்களோடு இணைந்து வேறு பல பிரச்சினைகளைக் கிளப்பிவிட்டது.
திணிப்பு
தென்னாட்டில் இந்தியைக் கட்டாயமாகத் திணிக்கும் போது போராட்டம் எழுந்தது. இங்கே துவங்கிய போராட்டம் இந்தி-உருது போராட்டமல்ல, இந்தி-தமிழ்ப் போராட்டம். காங்கிரஸ் மந்திரிசபை கலையும்வரை போராட்டம் நீடித்தது.
இந்து-முஸ்லிம் பிளவு முற்றி, இந்தியா பிரிக்கப்பட்ட பின், காங்கிரஸின் பொதுமொழிக் கொள்கை இந்தி என்பது உறுதியாகி விட்டது. இந்துஸ்தானி பொது மொழியாக வேண்டுமென்பது என்னவாயிற்று? இந்தியை இந்துஸ்தானி என்று ஒப்புக்காக அழைத்து அந்தக் கொள்கையை நிலைநாட்ட முயலுகிறார்கள் சிலர். இப்பொழுது இந்துஸ்தானி என்று அரசியலாரும், அதனை அண்டிவாழும் ஏனையோரும் ஆதரிப்பாளரும் வழங்குவது இந்தியைத்தான். எந்த நோக்கத்தோடு இந்துஸ்தானி பெற்றெடுக்கப்பட்டதோ, அந்த நோக்கமும் கைவிடப்பட்டு, அதனைப் பெற்றெடுத்தவராலேயே கைவிடப்பட்டு பிறந்த இடத்தில் பிறந்த பொழுதே அது இறந்து விட்டது.
இரத்தக் களரி
இந்தி-உருது மொழிகள் பற்றிய தவறான கருத்து ஒன்று சிலரால் சொல்லப்பட்டு வருகிறது. அதாவது எழுத்து வடிவங்களைத் தவிர இரண்டும் உண்மையில் ஒரே மொழிதான் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் கூறுகிறபடி இரண்டும் ஒரே மொழியாயிருந்தால் இந்த மொழிச் சண்டை இரத்தக் களரி ஏற்படும்வரை வளர்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இரண்டும் ஒன்றாயிருந்தால் பொது மொழி தேடும்போது சச்சரவு ஏன் வளர்ந்தது? இவ்விரண்டையும் சமாதானப்படுத்த மூன்றாவது மொழியொன்று தேடப்படுவானேன்? ஒரு நூற்றாண்டுக்கு வேண்டுமானால் இந்திக்கும் உருதுவுக்கும் சமாதான உறவு இருந்திருக்கும். இந்தி-உருது இவை இரண்டிடையே உண்டாயுள்ள வேற்றுமையை விளக்கவந்த உருது மொழிப் பேராசிரியர் அப்துல் ஹக் என்பவர். “உதாரணமாக உருதுப் பத்திரிகையில் கூறப்படும் செய்தியை இந்தி தெரிந்தவரால் புரிந்துகொள்ள முடியாது. அதேபோல் இந்திச் செய்தித்தாளில் காணப்படும் செய்திகளை உருது தெரிந்தவரிடம் சொன்னால் அவரால் சரியாக உணர்ந்துகொள்ள முடியாது.” என்று கூறுகிறார். “ஒருவரை யொருவர் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இருமொழியினரும் இருந்து வருகின்றனர்” என்று அப்துல் ஹக் கவலைப்படுகிறார். இரண்டு மொழிகளிலுமுள்ள இலக்கிய வளர்ச்சியிலல்ல, அன்றாடம் வரும் செய்தித் தாள் நடையிலேயே அவ்வளவு வேற்றுமை இருக்கிறது. மிக எளிய நடையில் எழுத்துவாசனையே அறியாத சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் வருவது செய்தித்தாள். அந்த நிலையிலேகூட இந்தி மொழியில் வெளிவரும் செய்தியை உருதுமொழி மட்டும் தெரிந்தவரிடம் சொன்னால் புரிந்துகொள்வதில்லை. அதேபோல் உருதுச் செய்திகள் இந்தி தெரிந்தவருக்குப் புரியா.
சொற்களில் வேறுபாடு
இந்தி-உருது, இந்து-முஸ்லிம் வேற்றுமை எவ்வளவு தூரம் பரவியிருந்தது என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு. ஒரே பகுதியில் வாழும் இந்துக்களும், முஸ்லிம்களும் ஒரே தாய் மொழியைப் பெற்றிருந்த போதிலும், அவர்கள் வழங்கும் சொற்களில் வேறுபாடு இருக்கக் காண்கிறோம். அய்க்கிய மாகாணத்தில் இந்துக்களின் மத்தியில் ஒரு முஸ்லிம் வாழ்ந்தாலும் அவனுடைய வீட்டில் உருது, அரபிச் சொற்கள் மிக வழங்குவதைக் காணலாம். அதேபோல் காஷ்மீர் பகுதியில் முஸ்லிம்களின் இடையில் ஓர் இந்து இருந்தாலும் அவனது வீட்டில் வழங்கும் மொழியில் சமஸ்கிருதச் சொற்கள் நிரம்ப இருப்பதைக் காணலாம்.
கல்கத்தா நகருக்குச் சென்று “இந்தப் பகுதியில் தாய்மொழி எது?” எனக் கேட்டால் “பெங்காளி” என்று பெருமிதத்துடன் கூறுவார்கள். “இந்து-முஸ்லிம் இருவரும் ஒரே தாய்மொழியைப் பயன்படுத்துகின்றனரா?” என்று வினவினால் “சந்தேகமென்ன?” என்று உறுதி கூறுவார்கள். அந்த நாட்டுமொழி தெரியாத ஒருவர், நீர் வறட்சிகொண்டு ஓர் இந்துவிடம் சென்று, தனக்குத் தெரிந்த ஓரிரு சொற்களில் “பானி, பானி” என்று எவ்வளவு தடவைக் கேட்டாலும் தண்ணீர் கிடைக்காது. அதை விடுத்து மற்றும் இரண்டு மூன்று இந்துக்களிடம் ‘பானி, பானி’ என்று எவ்வளவு தான் பல்லவி பாடினாலும், கதவைத் தாழிடும் ஓசை கேட்குமேயொழிய தண்ணீர்க் குவளை வராது. ஏனென்றால் கல்கத்தாவில் வாழும் இந்துக்களிடம் தண்ணீர் என்பதற்கு ‘ஜல்’ என்று கேட்டால்தான் தண்ணீர் கிடைக்கும். தண்ணீரைக் குறிப்பிடுவதற்கு ‘பானி’ என்ற சொல் வட இந்திய மொழிகள் பலவற்றிலும், பெங்காளி மொழியில் இருந்தபோதிலும் இந்துவின் வீட்டில் ‘ஜல்’ என்ற சமஸ்கிருதச் சொல்தான் பயன்படுத்தப்படுகிறது.
சமஸ்கிருதச் சொல்
மறுநாள் நாவறட்சி ஏற்பட்டதும் முதல்நாள் தெரிந்துகொண்ட பாடத்தை வைத்துக்கொண்டு, அந்த இந்துவின் பக்கத்து வீட்டிலிருப்பவனிடம் போய் ‘ஜல்’ எனக் கேட்டதும் அந்த வீட்டிலிருப்பவன் இந்துவாயிருந்தால், அதுவும் இரக்கமுள்ளவனாக இருந்தால், மேலும் தண்ணீர் கேட்பவன் இந்து என்ற நம்பிக்கை உண்டானால், தண்ணீர் கிடைக்கும். பக்கத்து வீட்டுக்காரன் முஸ்லிமாயிருந்தால் முறைத்துப் பார்த்துவிட்டுப் போய்விடுவான், சமாதான காலமாக இருந்தால், முஸ்லிம்களின் வீட்டில்தான் தண்ணீர் என்பதற்கு ‘பானி’ என்ற சொல் வழங்கப்படுகிறது. அது உருதுச் சொல். ஒரே இடத்தில், ஒரே தாய் மொழியைக் கொண்டு பக்கத்து வீடுகளில் இருக்கும் இந்து, முஸ்லிம் இருவரில் தண்ணீரைக் குறிக்க ‘ஜல்’ என்ற சமஸ்கிருதச் சொல்லை இந்துவும், ‘பானி’ என்ற உருதுச் சொல்லை முஸ்லிமும் வழங்குகின்றனர். அந்த வழக்கத்தைக் கட்டுப்பாடுடன் பாதுகாக்கின்றனர். ‘பானி’ என்று சொன்னால் அவன். ஒரு முஸ்லிம் என்றும், ‘ஜல்’ என்று சொன்னால் அவன் ஒரு இந்து என்றும் கூறுமளவுக்கு இவர்களுடைய பேச்சுமொழி அமைந்திருக்கிறது. மத வெறுப்பு அதிகரித்திருந்த சமயத்தில் இந்து வீட்டில் போய் ‘பானி’ என்றும், முஸ்லிம் வீட்டில் போய் ‘ஜல்’ என்றும், ஒன்றிற்கொன்று மாற்றிக் கேட்டால் பிற மதத்தினனென்று தண்ணீர் கிடைக்காமல் போவதுடன், வகுப்புக் கலவரமும் அடிதடியும் பிறந்தாலும் பிறக்கும். தண்ணீர் கேட்கப்போய் இரத்தம் கிடைக்கும் நிலை உண்டாகலாம். இதேபோல் குஜராத்தி, மராட்டி மொழிகளிலும் இந்துக்களும், முஸ்லிம் களும் பயன்படுத்தும் சொற்களில் வேற்றுமை இருக்கிறது.
பொதுமொழி
இதுகாறும் கூறியவற்றால் இந்தி உருது இவைகளின் வரலாறும், மொழிச் சண்டை ஆரம்பித்த விதமும், பின் பொதுமொழி விவாதம் வந்ததும், இந்தி-உருது சண்டை இந்து-முஸ்லிம் பிளவாக வளர்ந்ததும் நன்கு விளங்கும். மொழிச் சண்டை ஆரம்பித்தது வடநாட்டில்; பொதுமொழிப் பிரச்சினையை விவாதித்தவர்கள் வடநாட்டாரே. எனவே பொது மொழியொன்று தேவை என்பதற்கு அவர்கள் தந்த காரணங்கள், எந்தமொழி பொது மொழியாவதற்குரியது என்று அவர்கள் காட்டிய ஆதாரங்கள், பின் இந்தி, உருது இரு மொழிகளையும் தள்ளி இந்துஸ்தானி என்ற புதுமொழியைப் பொது மொழியாக்கப் போடப்பட்ட தீர்மானங்கள், இவைகளைப் படிக்கும்பொழுது, வட இந்திய மொழி அமைப்பையும், பலமொழி பேசுவோரிடையே நிலவிய விருப்பு வெறுப்புக்களையும், முக்கியமாக இந்து முஸ்லிம் பிணக்கையும் அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் அவர்கள் தங்கள் காரணங்களை அமைத்தார்கள் என்பது விளங்கும். பொது மொழியென திட்டமிட்டபொழுதும், திட்டங்களுக்கு விளக்கங்கள் கூறியபொழுதும், திட்டங்களை அமலுக்குக் கொண்டுவர லட்சக்கணக்கான பொருளையும், தேசியத் தொண்டர்களின் உழைப்பையும் செலவிட்டுப் பிரச்சாரம் செய்த பொழுதும், பின் திடீரென்று சமாதான மொழியாக ஒன்றைத் தீர்மானத்தின் மூலம் அமைத்தபொழுதும், பின் எவ்வழியும் சண்டையைத் தீர்க்காது என்று சஞ்சலமடைந்த நேரத்திலும் தென்னாடு அவர்கள் கருத்தில் பட்டதாகத் தெரியவில்லை. பொது மொழித் திட்டத்தைத் தாங்களாகவே முடிவு செய்துவிட்டு, அதைச் செயலளவில் காட்டும் பொழுதுதான் சென்னை மாகாணம் அவர்களின் பெரிய கண்களுக்குத் தெரிந்தது.