தமிழ் மொழி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு என்று பல்வேறு வகைகளில் சிதறுண்டு போனதற்குக் கூடக் காரணம் ஆரிய மொழியாகிய சமஸ்கிருதம்தான்.
இதனைப் பார்ப்பனரான பரிதிமாற் கலைஞரே (வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி) ‘தமிழ்மொழியின் வரலாறு’ என்னும் நூலிலே ஒப்புக் கொண்டுள்ளார்.
‘‘தமிழ்மொழியில் ‘மணிப் பிரவாளம்’ என்னும் ஒரு நடையை ஆரியம் புகுத்தியது. ‘மணியும் பவளமும் கலந்து கோர்த்ததோர் மாலை காட்சிக்கின்பம் பயத்தல் போலத் தமிழும் சமஸ்கிருதமும் கலந்த பாஷை கேள்விக்கின்பம் பயக்குமென்ற போலியெண்ணமே ஆபாச பாஷையொன்று வகுக்குமாறு தூண்டிற்று. ‘சிறீபுராணம்’ என்னும் சைன நூல் முழுதும் மணிப் பிரவாளமென்னும் இவ்வாபாச நடையின் இயன்றதாமாறு காண்க.
இவ்வாறு சைனர் ஒருபுறஞ் செய்து கொண்டு. செல்லா நிற்க. மற்றொரு புறத்தில் ஆரியப் புலவர் சிலர் தமிழ்மொழியைப் பியசித்துக் கொண்டு நீதி மார்க்கத்தையும், சமய சாஸ்திரங்களையும் தமிழர்க்குப் போதிப்போமெனப் புகுந்து, தமது கருத்துக்களையெல்லாம் மேற்கூறிய மணிப் பிரவாள பாஷையில் வெளிப்படுத்துரைப்பாராயினர்.
‘நாலாயிரப் பிரபந்தம்’ என்ற தமிழ் நூலிற்கு வியாக்கியானங்களும் இத்தகைய மணிப் பிரவாள நடையில் வகுக்கப்பட்டிருத்தல் காண்க. இவ்வண்ணம் பல திறத்தானும் வட சொற்கள் வந்து தமிழின் கண் அளவின்றியேறின..
தமிழ் மொழியின் நிலையை இவ்வாறாதலும், வடமொழி இலக்கணத்தைக் கலந்து தமிழிலக்கணமும் வகுக்கப் புகுந்து விட்டனர் சிலர். ‘தொல்காப்பிய’த்திற்கு உரை வகுத்த அய்வருள் முதல் நால்வரும் ஏறக்குறையத் தமிழ்ப் போக்கேயேபற்றி உரை வகுத்துச் சென்றனராக, சேனாவரைய ஒருவர் மட்டில் வடமொழிப் போக்கைச் சிறிதளவு கலந்து சொல்லதிகாரத்திற்கு உரை வகுத்தனர். தனித்தமிழ் நூலாகிய ‘திருக்குற’ளினிற்குப் பரிமேலழகரும் வடநூலார் மதம் பற்றிய உரை வகுத்தேறினர். ‘நன்னூல்’ செய்த பவணந்தியாரும், ‘சின்னூல்’ செய்த குணவீரபண்டிதரும் வடநூல் இலக்கணப் போக்கைத் தழுவராயினர்” என்று பரிதிமாற் கலைஞர் “தமிழ் மொழியின் வரலாறு” எனும் நூலில் (பக்கம் 30, 31) குறிப்பிட்டுள்ளார்.
தமிழைக் கெடுத்த பார்ப்பனர்கள் குறித்தும், சமஸ்கிருதம் குறித்தும் புகழ்பெற்ற பார்ப்பனப் பேராசிரியரே கூறியுள்ளாரே – இதற்குப் பதில் என்ன பார்ப்பனர்களே?