சென்னை, மார்ச் 18 ஒன்றிய பா.ஜ.க. அரசு நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை செய்யும் போது, தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் சூழல் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்து வருகிறார்.
இதையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் வருகிற 22 ஆம் தேதி தென் மாநிலங்களைச் சேர்ந்த கூட்டு நடவடிக்கை குழு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தை சென்னையில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
இதையொட்டி ஆந்திரா, தெலங்கானா, கருநாடகா, கேரளா, மேற்கு வங்காளம், ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கு தி.மு.க. நாடாளு மன்ற உறுப்பினர்கள் குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்து வந்து உள்ளனர்.
இதில் 20-க்கும் மேற்பட்ட கட்சி களின் முன்னணி தலைவர்கள் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதையொட்டி கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை சென்னை கிண்டியில் உள்ள அய்.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் 22 ஆம் தேதி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக அங்கு அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
விமான நிலையத்துக்கு அருகே இந்த ஓட்டல் உள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இது வசதியாக இருக்கும்.
ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் வருபவர்களை வரவேற்று ஓட்டலுக்கு அழைத்துச் செல்ல தி.மு.க.வில் தனியாகக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் 22 ஆம் தேதி நடை பெறும் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வருகின்றனர்.