ரயில்வேயில் காலியாக உள்ள 18,799 உதவி லோகோ பைலட் பணியிடங்களில், தெற்கு ரயில்வேயில் 726 காலியிடங்கள் உள்ளன. இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்கட்ட கணினி வழித்தேர்வு முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட கணினி முறைத் தேர்வுகள் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தமிழ்நாட்டு விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு மய்யங்கள் பெரும்பாலும் ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கண்டனங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து ரயில்வே தேர்வு வாரியம் அளித்துள்ள விளக்கத்தில், விண்ணப்பதாரர்களுக்கு முடிந்த அளவு சொந்த மாநிலத்திலேயே தேர்வு மய்யங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சொந்த மாநிலத்தில் தேர்வு மய்யம் ஒதுக்க முடியாத சூழலில் அண்டை மாநிலங்களில் மய்யம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி யுள்ளது. மேலும், கடந்த முறை நடந்த இரண்டாம் கட்ட கணினி வழி தேர்வு களுக்கும் இதே ஒதுக்கீடு முறைதான் கடைப்பிடிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லுமுல்லு
ஆனால், தமிழ்நாட்டில் எவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளனர்? அவர்களில் எத்தனை பேருக்குத் தமிழ்நாட்டில் தேர்வு மய்யங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன? எத்தனை பேருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மய்யங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன? தமிழ்நாட்டில் கூடுதல் தேர்வு மய்யங்கள் ஏற்படுத்துவதில் என்ன பிரச்சினை? என்பன போன்ற எந்த விவரங்களும் இல்லாமல், பொத்தாம்பொதுவாக ஒரு பதிலை விளக்கம் என்ற பெயரில் வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிப்பதில், ரயில்வே நிர்வாகம், வங்கி, அஞ்சலகங்கள் உள்ளிட்ட அனைத்து ஒன்றிய அரசு நிறுவனங்களும் எப்படி மும்முரமாகச் செயல்படுகின்றன என்பதைக் கடந்த சில ஆண்டுகளாக ஆதாரப் பூர்வமாக அம்பலப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறோம். தமிழ்நாட்டு மாணவர்களின் விண்ணப்பங்களை மொத்தமாக நிராகரித்தது, ஆன்லைன் விண்ணப்பங்களில் குளறுபடி செய்தது, தமிழ்த் தேர்வுகளில் வட நாட்டவர்களை முதலிடம் பெறச் செய்தது என்று தொடர்ந்து பல தில்லுமுல்லுகள் நடந்துள்ளன.
தமிழ்நாட்டில் கூடுதல் தேர்வு மய்யம்
எனவே, ரயில்வே நிர்வாகத்தின் இந்த விளக்கம் நம்பகமானதுமல்ல. போதுமான துமல்ல.
19-ஆம் தேதி நடைபெறும் தேர்வுகளுக்கான தேர்வு மய்யங்கள் ஒதுக்கீட்டில் வெளிப்படைத் தன்மை அவசியம். தமிழ்நாட்டிலேயே மறுஒதுக்கீட்டையும் செய்து புதிய பட்டியலை உரிய கால அவகாசம் வழங்கி வெளியிட வேண்டும். இத்தகைய நிலை தொடராமல் இருக்க, தமிழ்நாட்டிலேயே கூடுதல் தேர்வு மய்யங்களை ஒதுக்கி, தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க வழிவகுக்க வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும்.