சென்னை, மார்ச் 17- தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவைக் கூட்டத்தில் இன்று சட்டமன்றப் பேரவை மேனாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2025-2026ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் கூட்டத் தொடர் கடந்த 14.3.2025 அன்று தொடங்கி 2025-2026ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 15.3.2025 அன்று வேளாண்மை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று (17.3.2025) சட்டமன்றப் பேரவை கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் நடைபெற்றது. உறுப்பினர்களின் தொகுதி பிரச்சினைகள் குறித்த கேள்விகளுக்கு அத்துறை அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
மருத்துவ நிபுணர் கே.எம்.செரியன் மறைவுக்கு இரங்கல்
கேள்வி நேரத்திற்குப் பிறகு சட்டமன்றப் பேரவையின் மேனாள் உறுப்பினர்களான பி.ஆர்.சுந்தரம், மா.கோவிந்தராஜலு, வே.குணசீலன் ஆகியோர் மறைவு குறித்து இரங்கல் குறிப்பை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாசித்தார். இதையடுத்து அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று இரண்டு மணித்துளிகள் அமைதி காத்து, மறைவுற்ற உறுப்பி னர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
அதேபோன்று பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கே.எம்.செரியன் அவர்கள் மறைவு குறித்தும் இரங்கல் தெரிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சட்டமன்றப் பேரவையில் இன்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்களை பேரவைத் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பி னர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.பி.முனுசாமி, நத்தம் இரா.விசுவநாதன், பி.தங்கமணி, கே.ஏ.செங் கோட்டையன், ந.தளவாய்சுந்தரம், இரா.காமராஜ், முனைவர் பொள்ளாச்சி சி.வி.ஜெயராமன், செல்லூர் கே.ராஜு, கடம்பூர் ராஜு, அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வி.வி.ராஜன் செல்லப்பா, ப.தனபால், சு.ரவி, கே.சி.கருப்பணன், கே.பி.அன்பழகன் ஆகியோர் கொடுத்த தீர்மானம் விவாதத்திற்கு பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி அனுமதி அளித்து எடுத்துக் கொள்ளப்பட்டு, அதன் மீது சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
இத்தீர்மானத்தின் மீது முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது,
அ.தி.மு.க. உள்கட்சிப் பூசலை திசைதிருப்பவே இத்தீர்மானம் கொண்டு வந்துள்ளனர் என்றார். பேரவைத் தலைவருக்கு, காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்ட், ம.ம.க., த.வ.க. கட்சிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். பின்னர் குரல் வாக்கெடுப்பு எடுக்கப்பட்டதிலும், பகுதி வாரியாக எடுக்கப்பட்ட வாக்கெடுப்பிலும் 154 சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவைத் தலை வருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாக 63 உறுப்பினர்களும் வாக்களித்ததால் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது.
நிதிநிலை அறிக்கை மீது விவாதம்
இதனைத் தொடர்ந்து 2025-2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீது பொது விவாதம் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றுப் பேசினர்.