பெரம்பலூர், மார்ச் 17- தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினையைத் தீர்க்க ஒன்றிய அரசுக்கு மனமில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று (16.3.2025) கூறியதாவது:
கரும்பு விலை
கரும்பு டன்னுக்கு ரூ.4,000 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை தொடர்பான அறிவிப்பு, தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டில் இல்லை. எனினும், மானியக் கோரிக்கையின்போது நிறைவேற வாய்ப்புள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரும், துறை அமைச்சரும் விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து, அவற்றை நிறைவேற்ற வேண்டுகோள் விடுக்கிறேன். அதேபோல, விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் பரிசீலிக்க வேண்டும்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் விசிக உள்ளிட்ட கட்சிகள் அமைச்சரவையில் பங்கு கேட்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். எங்கள் கட்சி நிலைப்பாட்டை நாங்கள்தான் முடிவு செய்ய முடியும். புற அழுத்தங்களுக்கு இணங்க முடியாது. எங்கள் கட்சியின் வலிமை, கூட்டணியில் எங்களது இருப்பு, அன்றைக்கு நிலவும் அரசியல் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் எங்கள் கோரிக்கையை முன்வைப்போம்.
மீனவர்கள் பிரச்சினை
இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவது தொடர்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஒன்றிய அரசால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும். ஆனால், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒன்றிய அரசுக்கு மனமில்லை. தமிழ்நாடு மக்கள் மற்றும் தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினைகளில் ஒன்றிய அரசு ஓரவஞ்சனையுடன் அணுகுவதே இதற்கு காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
லோகோ பைலட் தேர்வு
தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு
1500 கி.மீ. அப்பால் தேர்வு மய்யமா?
ரயில்வே அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்
மதுரை, மார்ச் 17- தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு 1500 கி.மீ. அப்பால் தேர்வு மய்யம் அமைக்கப்பட்ட நிலையில் அதனை மாற்றக் கூறி ரயில்வே அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதி உள்ளார்.
இது குறித்து அவர் எழுதி உள்ள கடிதத்தில் கூறியதாவது, ரயில்வே தேர்வு வாரியத்தின் லோகோ பைலட் தேர்வுக்கு 6000க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு 1500 கிலோ மீட்டருக்கு அப்பால் தேர்வு மய்யம் அறிவிக்கப் பட்டுள்ளது. இதனை மாற்ற வேண்டுமென்று ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் லோகோ பைலட் காலி இடங்களுக்கான CBT 2 தேர்வுக்கு 6000 க்கும் மேலானவர்கள் CBT 1 தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டில் இருந்து தகுதி பெற்றுள்ளார்கள்.
தேர்வு மய்யத்தை மாற்றுக
நீட் தேர்வு எதிர்வரும் மார்ச் 19, 2025 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு மய்யங்கள் நிறைய தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிற்கு வெளியே அறிவிக்கப்பட்டுள்ளது. பலர் ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து தெலங்கானா வரை செல்ல வேண்டியுள்ளது.
இதனால் தேர்வர்கள் நிதிச் சுமைக்கும், கடுமையான அலைச்சலுக்கும் ஆளாகும் நிலை உள்ளது. மதுரை நாடாளுமன்ற தொகுதியைச் சார்ந்த பல தேர்வர்களின் பெற்றோர் என்னை அணுகி தேர்வு மய்யங்களை தமிழ்நாட்டிற்குள் மாற்றித் தருவதற்கு தலையிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். ஆகவே தேர்வு மய்யங்களை மாற்றுவதற்கு உடனடியாக தலையிடுமாறு கேட்டு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடிதம் எழுதி உள்ளேன். இவ்வாறு குறிப்பிட்டார்.
பாடத் திட்டத்தில்
உளவியலை சேர்க்கக் கோரிக்கை
குடவாசல், மார்ச் 17- குடவாசலில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் நடைபெற்ற பேரணியின்போது பாடத் திட்டத்தில், உளவியல் பாடத்தை சோ்க்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடவாசல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்திய மாணவா் சங்க கிளை மாநாடு 13.3.2025 அன்று நடைபெற்றது. கிளைத் தலைவா் ரா. சிவனேஷ் தலைமை வகித்தாா். செயலாளா்
க.கலைச்செல்வன் மாநாட்டு கொடியை ஏற்றினாா்.
இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரா. ரஞ்சித் மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசினாா். மாவட்டச் செயலாளா் பா.லெ. சுகதேவ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா். நிகழ்வில், புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. கிளைத் தலைவராக சத்தியசீலன், செயலாளராக ரா. சிவனேஷ் தோ்வு செய்யப்பட்டனா்.
மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்; உளவியல் பாடத்தை அடிப்படை கல்வி முதல் பாடத்திட்டத்தில் சோ்க்க வேண்டும்; யுஜிசியின் வழிகாட்டு நெறிமுறை வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும்.
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஒன்றிய அரசு ஹிந்தி திணிப்பை நிறுத்த வேண்டும்; கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, கல்லூரி அருகிலிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக வந்தனா்.