பழநி, மார்ச் 17- தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தால் தமிழ்நட்டு மக்களுக்கு ஆதரவாக ஒன்றிய அரசை எதிர்த்து, தமிழ்நாடு அரசுடன் கைகோர்த்து தேமுதிக போராடும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், பழநியில் தேமுதிக கட்சி நிர்வாகி இல்லவிழாவில் பங்கேற்க வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நிதிநிலை அறிக்கைக்கு வரவேற்பு
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை தேமுதிக வரவேற்கிறது. காரணம், 2006ஆம் ஆண்டு தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பல்வேறு அறிவிப்புகளை, இந்த ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டு விவசாயிகளை பல்வேறு நாடுகளுக்கும் அழைத்துச் சென்று வேளாண் தொழில்நுட்பங்களை அறிந்து அதற்கேற்ப தமிழ்நாட்டில் விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு முக்கியமானது. மெட்ரோ ரயில், பெண்களுக்கான திட்டங்களையும் அறிவித்துள்ளனர். வேலைவாய்ப்புக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.
அன்னை மொழி காப்போம், அனைத்து மொழி கற்போம் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை பாதிக்கும் வகையில் நடந்து கொண்டால், தமிழ்நாட்டு மக்களுக்கு ஆதரவாக ஒன்றிய அரசை எதிர்த்து தமிழக அரசுடன் சேர்ந்து தேமுதிக போராடும்.” இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் ஒரு வாரத்துக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்
சென்னை, மார்ச் 17- கோடை காலத்தில் மே மாதம் கத்தரி வெயில் 28 நாட்கள் வாட்டி வதைக்கும். இந்த ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் கோடை மழையும் இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்து உள்ளனர்.
வெப்பம் அதிகரிப்பு
அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் இருந்தே வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. அதிலும் இம்மாத தொடக்கத்தில் இருந்து வெப்பம் அதிகரித்தபடியே காணப்பட்டது. இப்போதே இப்படி என்றால், மே மாதத்தில் நம்முடைய நிலைமை என்ன ஆகும்? என பேசும் அளவுக்கு வெயில் கொளுத்தியது.
இதற்கு சற்று இடைவெளியை கொடுக்கும் வகையில், ஆங்காங்கே கோடை மழையும் கைக்கொடுத்தது. இந்த மழை காரணமாக தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வெப்பம் குறைந்து காணப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் வெப்பத்தின் தாக்கம் இன்று (17.3.2025) முதல் வருகிற மாதம் 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை ஒரு வாரத்துக்கு அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிலும் மேற்கு மற்றும் உள்மாவட்டங்களில் இந்த வெப்பத்தின் தாக்கத்தை அதிகமாக உணர முடியும். இதுமட்டுமல்லாமல், இந்த நாட்களில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர், ஈரோடு, கரூர், விருதுநகர், மதுரை, வேலூர் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகக்கூடும் என ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.