சென்னை, மார்ச் 16- நிதிநிலை கூட்டத்தொடரையொட்டி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் 14.3.2025 அன்று மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி ‘பட்ஜெட்’ கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘தமிழ்நாடு சட்ட மன்றத்தில் தேவை இல்லாமல் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் என்னை புகழ்ந்து பேசக்கூடாது.
சபை நேரத்தை ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக்கும், தொகுதி வளர்ச்சிக்காகவும் பயன்படுத்த வேண்டும். நம் அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் அதற்கு ஆதாரப்பூர்வமாக தக்க பதிலடி கொடுக்க வேண்டும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொகுதியில் முறையாக நிறைவேறுகிறதா? என்பதை ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
இதில் குறைகள் ஏதேனும் இருந்தால் அதனை நிவர்த்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பது போன்ற பல்வேறு அறிவுறுத்தல்களை தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கியுள்ளார்.