102 வயதில் தோழர் சங்கரய்யா உடலால் மட்டுமே மறைந்தார் – கொள்கையால் வாழ்கிறார்
விருதுகளால் அவருக்குப் பெருமை இல்லை அவரால் விருதுகளுக்குப் பெருமை!
திறந்த புத்தகம் – கொள்கைப் பாடம் – தோழர் சங்கரய்யாவுக்கு வீர வணக்கம்
சென்னை, நவ.15 சுயமரியாதை இயக் கத்தில் தொடங்கிய தோழர் சங்கரய்யா அவர்களின் வாழ்க்கை, பொதுவுடைமைக் கட்சியோடு இணைந்து 102 வயது வரை கொள்கைத் தடம் மாறாத போராட்ட வீரர், பொது வாழ்வுக்கு அவர் ஒரு திறந்த புத்தகம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
இன்று (15.11.2023) காலை மூத்த கம்யூ னிஸ்ட் கட்சித் தலைவர் சங்கரய்யா உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவ மனையில் மறைவுற்றார். அவரது மறைவு குறித்து சன் நியூஸ் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தொலைப்பேசிமூலம் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
அய்யா வணக்கம்!
நெறியாளர்: விடுதலைப் போராட்டத் திற்குப் பிறகு பெரியார் முன்னெடுத்த பல சமூகப் போராட்டங்களில் தொடர்ச்சியாக சங்கரய்யா களம் கண்டார். அவர் ஒரு முக்கியமான தலைவர் – அவரோடு பல போராட்டங்களில் நீங்கள் இணைந்து பணியாற்றி இருக்கிறீர்கள். உங்களுடைய இரங்கல் செய்தியைத் தெரிவியுங்கள்.
தமிழர் தலைவர்: தோழர் சங்கரய்யா அவர்கள் தீவிரமான கம்யூனிஸ்ட் தோழராக மாணவர் பருவத்திலிருந்தே உருவானவர் என்பது வரலாறு. இன்னும் ஒரு குறிப்பிடத்தகுந்த மிக முக்கியமான ஒரு வரலாறு என்னவென்றால், அவ ருடைய பொதுவாழ்க்கை என்பதே தந்தை பெரியாருடைய சுயமரியாதை இயக்கக் கொள்கையில் இருந்துதான் தொடக்கம். பிறகு, கம்யூனிசத்தினுடைய ஈடுபாடு என்பதே சுயமரியாதை இயக் கமும் – கம்யூனிஸசமும் கொண்ட அந்த ஈடுபாட்டிலிருந்துதான் அவர் தீவிரமான கம்யூனிஸ்டாக வரக்கூடிய வாய்ப்பு இருந்தது என்பது அவருடைய வாழ்க்கையினுடைய மிக முக்கியமான ஒரு பங்களிப்பாகும்.
அதுமட்டுமல்லாமல், கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாதவர் அவர். அவருக்கு எத்தனை விருது என்பதைவிட, அவர் எத்தனை விழுப்புண்களைத் தாங்கி யிருக்கிறார் என்பதுதான் மிக முக்கியம்.
தோழர் சங்கரய்யா உடலால் மட்டுமே மறைந்துள்ளார்
பொதுவாழ்க்கையில் ஒப்பார் இல்லாத அளவிற்கு, எளிமை, அவரது கொள்கை உறுதி, அதேநேரத்தில் எவரிடத்திலும் பான்மையோடும், மனிதப் பண்போடும் பேசக்கூடியவர் தன்னுடைய குடும்பம், தன் சுற்றம் என்று இல்லாத அளவிற்கு, முழுக்க முழுக்க இயக்கம், இயக்கம், இயக்கம் – கொள்கை! இதைத்தான் அவர் முன்னெடுத்து இருந்தார்.
எனவே, சங்கரய்யா அவர்களுடைய மறைவு என்று சொல்வதைவிட, சங்கரய்யா அவர்களுடைய வாழ்வு நிறைவடைந்திருந் தாலும்கூட, அவர் மறையவில்லை – அவர் 102 ஆண்டுகள் வாழ்ந்திருக்கின்றார். அவரு டைய வாழ்க்கை என்பது மற்றவர்களுக்குச் சிறந்த பாடமாகும். பல்கலைக் கழகங்களில் வைக்கவேண்டிய சிறந்த பாடப் புத்தகமும் கூட!
சில நேரங்களில், அவருக்குப் பெருமையா? விருதுக்குப் பெருமையா? என்று சொன்னால், விருதுக்குப் பெருமையே தவிர, அவருக்குப் பெருமை கிடையாது. அதை உணராதவர்கள் பல பேர் இந்த நாட்டில் இருக்கலாம்.
“தகைசால் தமிழர் விருது” பெற்றவர்
ஆனால், அதைப்பற்றி அவர் கவலைப் படாமல், அவர் கொள்கைக்காக சிறை வாழ்க்கையை ஏற்றது மட்டுமல்ல;
கொள்கை வாழ்க்கையை, போராட்ட வாழ்க்கையாக அமைத்துக் கொண்டு, இளைஞர்கள், பொது வாழ்க்கைக்கு வந்தால், அவர்கள் எப்படி கொள்கையாளர்களாக இருக்கவேண்டும்? பதவி என்பது இருக் கிறதே, அது தொண்டாற்றுவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கலாமே தவிர, எல்லாம் அதுவே என்பதை ஏற்காமல், வாழ்ந்து காட்டியவர்; பாடமாக எடுத்துக்காட்டியவர். சுயமரியாதை வீரர் – பொதுவுடைமைக்காரர் என்பதையெல்லாம் விட, தலைசிறந்த மனிதநேயர்!
கொள்கை மாறாமல், இறுதிவரையில் அந்தக் கொள்கைக்காக வாழ்ந்தவர். கடைசியாக, “‘தகைசால்’ தமிழர் விருது” முதல் முறையாக அவருக்குக் கொடுக்கப்பட்டு, இரண்டாவதாக, தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு, மூன்றாவதாக எனக்கு அளித்த நேரத்தில், நான் ஆகஸ்ட் 14 ஆம் தேதி, தோழர் சங்கரய்யா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றேன்.
அப்பொழுதுகூட அவர் என்னை முழு மனதுடன் வாழ்த்தினார்.
சுயமரியாதை இயக்கமே அவரின் தொடக்கம்
நாங்கள் பல இடங்களில் ஒன்றாக, ஒரே மேடையில் பேசியிருக்கின்றோம். ஒரே களத்தில் களமாடியிருக்கின்றோம்.
அவரை சந்தித்த வேளையில், கொள்கை ரீதியாகப் பேசினோம். உள்ளே சென்று, ஒரு புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்தார் தோழர் சங்கரய்யா.
கொள்கை ரீதியான ஒரு புதினம் அந்தப் புத்தகம். அந்தக் காலத்திலிருந்த பழைய புத்தகம். அதை எனக்கு அளித்தார். அந்தப் புத்தகத்தை விருது போன்றே மதித்து அதனை நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.
ஆங்கிலத்தில் ‘லெஜண்ட்’ என்று சொல்வார்கள். தமிழில் அவர்களுடைய கொள்கைத் தேன்கூடு; கொள்கை எடுத்துக் காட்டு. எவ்வளவு பெரிய தியாகத்திற்கும் அவர்தான் ஓர் அடையாளம்.
நாடு போற்றுகிறது – உலகம் ஏற்கிறது
எனவே, அதை யார் மதிக்கிறார்கள்? யார் மதிக்கத் தவறியவர்கள்? என்பது முக்கியமல்ல; நாடு போற்றுகிறது; உலகம் ஏற்கிறது – வரலாறு நிலைக்க வைத் திருக்கிறது.
எனவே, சங்கரய்யா மறையவில்லை – நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார். கொள்கையாளர்களுடைய ரத்த நாளங் களில் அவர் உறைந்திருக்கிறார்.
வாழ்க சங்கரய்யா! அவருக்கு வீர வணக்கம்!
நெறியாளர்: சில வரலாறை உங்களிடம் கேட்கவேண்டும் என்று நினைக்கிறேன். சுய மரியாதை சட்டத்தை அண்ணா அவர்கள் கொண்டு வந்தபொழுது, சங்கரய்யா உடனிருந்து ஊக்கம் கொடுத்தார் என்று நாங்கள் படித்த வரலாறு. அந்த வரலாறை நீங்கள் அருகிலிருந்து பார்த்திருக்கிறீர்கள்; அந்தக் காலகட்டம் எப்படிப்பட்டவை?
தமிழர் தலைவர்: அவர் பல திருமணங்களை நடத்தி வைத்துள்ளார். அது ஒரு சட்டமாவதைப் பார்த்து அவருக்கு ஒரு பூரிப்பு. அந்த வகையில் அண்ணா அவர்கள் எவ்வளவு ஒரு கனிந்த உள்ளத்தோடு முதலமைச்சராக இருந்தபொழுது அந்த சட்டம் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்.
இவருடைய பங்களிப்பு என்பது இதில் மட்டுமல்ல, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டமாக இருந்தாலும், அதை இன்றைய முதலமைச்சர் அவர்கள் அதனைச் செய்தாலும், தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சி நடக்கிறது என்ற சிந்தனையோடு, இந்தக் கொள்கை உணர்வோடு அவர் மகிழ்ச்சியாக இருந்தார்.
பொதுவுடைமை இயக்கமும் சுயமரியாதை இயக்கமும்
102 ஆண்டுகள் வரை அவர் வாழ்ந்தார் என்று சொன்னால், இந்தக் கொள்கைகள் வளர்ந்திருக்கின்றன. பொதுவுடைமை கொள்கை என்பது வெறும் கட்சி எண் ணிக்கையைப் பொறுத்ததல்ல; அது ஓர் இயக்கம். அதேபோன்று சுயமரியாதை இயக்கம் என்பது ஓர் இயக்கம். உறுப்பினர் களுடைய எண்ணிக்கையை வைத்து அது மதிப்பிடப்படவில்லை. சமூகத்தினுடைய மாற்றத்திற்கு அது அடித்தளமானது. அதிலே அவருடைய பங்களிப்பு என்பது மிக முக்கியமானதாகும்.
இன்னொரு நிகழ்வை சொல்கிறேன்,
ஒரு நாள் நாங்கள் பிரச்சாரத்திற்காக ரயில் பயணத்தை மேற்கொண்டோம். சென்னை ரயில் நிலையத்திற்கு வந்து ரயில் நின்றவுடன், தோழர் சங்கரய்யா அவர்கள், லக்கேஜ் கம்ப்பார்ட்மெண்ட்டில் – மூன்றாவது வகுப்பிலிருந்து கீழே இறங்கி வருகிறார். அவ்வளவு எளிமை நிறைந்த ஒரு தோழர் அவர்.
அவர் ஒரு கொள்கைப் பாட புத்தகம்
அவருடைய வயதுக்கு எப்படி அவர் மேலே ஏறி படுத்தார் என்பதே பெரிய கேள்விக்குறியானது.
அவரை சந்தித்தபொழுது, எங்கே போய் விட்டு வருகிறீர்கள் என்று கேட்டபொழுது, கும்பகோணத்திலிருந்து வருகிறேன் என்று சொன்னார்.
அவர் நடமாடக் கூடிய வாய்ப்பு இருக்கின்ற வரையில், எளிமை, கொள்கை, இனிமை இவற்றிற்கெல்லாம் சொந்தக்காரர். எல்லாவற்றையும்விட, போராட்டக் களம் என்று வந்தால், அவருடைய குரல் மேடைகளில் கர்ஜனையாக இருக்கும்.
அந்த வயதிற்குரியவரின் குரல் போன்று இருக்காது; ஓர் இளைஞனுடைய சிம்மக் குரல் போன்று கர்ஜிக்கும். அப்படிப்பட்ட கொள்கை உணர்வு!
அதே வேகம், அதே துடிப்பு இறுதிவரையில் அவரிடம் மறையவில்லை.
வயது அவருக்கு ஆண்டுக் கணக்கே தவிர – அவருடைய கொள்கைக் கணக்குக்கு அல்ல. அவர் நிரந்தரமான எடுத்துக்காட்டான ஒரு கொள்கைப் பாட புத்தகம் ஆவார்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.