தூத்துக்குடி, மார்ச் 16- தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் 37ஆவது நிகழ்ச்சியாக 8.3.2025 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் ‘உலக மகளிர் நாள்’ கருத்தரங்கம் பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கில் நடைபெற்றது.
திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மு.முனியசாமி தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் இரா.ஆழ்வார் வரவேற்புரையாற்றினார். தொடக்கவுரையாகத் திமுக இலக்கிய அணி மோ.அன்பழகன், “மனு (அ)நீதியால் நம் சமூகம் அடைந்த கேடுகள், தண்டனைக் கொடுமைகள், கைம்பெண் கோலம் பூண்டு வாழ்வை இழந்த பெண்கள், உடன்கட்டை ஏற்றிப் பெண்களை நெருப்பில் சாம்ப லாக்கிய துயரங்கள், கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெண்கள் பெற விடாது சாத்திரங்களால் தடுத்த ஆரியர் கொடுமைகளை விளக்கி, திராவிட இயக்கத்தால்தான் இன்று இவற்றுக்கு விடிவேற்பட்டுள்ளது” என்று செய்திகளைத் தந்தார்.
பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் சொ.பொன்ராஜ், “தந்தை பெரியாரும் திராவிடர் இயக்கமும் பாடுபட்டதால்தான் அந்தத் கருத்துகள் இன்று சட்டமாகி அடிமைப்பட்டுக் கிடந்த பெண்ணினம் விடுதலைக் காற்றைச் சுவாசிக்கிறது’ என்றார்.
‘அன்னை மணியம்மையாரின் சாத னைகள்’ என்ற தலைப்பில் சீ.மனோகரன், “ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்காது. பெண்களே போராடித் தம் உரிமையை நிலைநாட்ட வேண்டும்” என்றார் பெரியார். அய்யாவை நீண்ட காலம் வாழ வைக்க வேண்டும், கழகப் பணி தொய்வின்றி நடைபெறத் தந்தையின் நலமே முதலில் வேண்டும் என்று அய்யாவின் நலனை விரும்பி வந்தவரே அன்னையார் அவர்கள். பெற்றோராலேயே கழகக் கருத்துகளை அறிந்திருந்தவர் அம்மா அவர்கள். திருமணம் பற்றிக் கேட்டபோது அம்மாவின் தந்தையார் கனகசபை, ‘திருமணம் அவரின் சொந்த உரிமை’ எனப் பதில் தந்தார்.
அம்மாவோ, “திருமணம்? எனக் கேட்பது அவசியமற்ற பேச்சு” என விடை தந்தார். 1943இல் கழகத்தில் இணைந்தார். அய்யா பெரியாரின் அணுக்கத் தொண்டராய், தாயாய் இருந்து அய்யாவின் உடல் நலத்தைப் பேணினார். உணவுக் கட்டுப்பாட்டு முறைக்காக அய்யாவிடமிருந்து கடினமான சொற்களையும் பரிசாகப் பெற்றுத் தளராது பணி செய்தார்.
அய்யாவின் நண்பர் இராஜாஜி, “சிறிய பெண், பெரிய நிறுவனத்தை ஏற்கத் தகுதி பெற்றவரா?” என அய்யப்பட்ட சூழலில் தந்தை பெரியார் சரியான முடிவை உறுதியோடு எடுத்தார்கள். அய்யாவின் மறைவுக்குப் பிறகும் மனந்தளராது கழகத்தைக் கட்டிக் காத்து, போராட்டம், ஆர்ப்பாட்டம், மறியல், பிரச்சாரம் என விடாது சமூகப் பணியாற்றினார் அன்னையார். நெருக்கடி நிலையை இலகுவாகக் கடந்தவர். இராவணலீலா நடத்துவோம் எனப் பிரதமர் இந்திரா காந்திக்குத் தெரிவித்தே நடத்தித் தமிழர் மானம் காத்தவர்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற உரிமைக் கொள்கையினை முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கே விளக்கம் தந்து புரிய வைத்தவர். உலக மகளிர் நாளில் நினைவு கூரத்தக்க ஒரு தலைவரென்றால் அன்னை மணியம்மையார்தான்” என்று கருத்துரை வழங்கினார்.
இறுதியாக, ‘சுயமரியாதை இயக்கத்தில் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் மா.பால்ராசேந்திரம் சிறப்புரையாற்றினார். அவர்தம் உரையில், “1857இல் பெண்கள் முதன்முதல் வேலைக்கு அமர்த்திய கட்டாயம் – அன்றே மார்ச் 8இல் கூலி உயர்வு கேட்டுப் போராடியது – 1908 மார்ச்8 அன்று நியூயார்க்கில் வேலை நேரத்தைக் குறைக்க, கூலி உயர்வு, வாக்களிக்கும் உரிமை வேண்டி 15,000 பெண்கள் பேரணியாகச் சென்று போராடினர். 1910இல் ஜெர்மன் பெண்ணுரிமைப் போராளி கிளாரா ஜெட்கின், மார்ச் 8அய் ‘பன்னாட்டு மகளிர் தினமாக’ அறிவிக்கக் கோபன்ஹெகன் மாநாட்டில் அறைகூவல் விடுத்தும் அய்.நா.சபை 1975இல்தான் அங்கீகாரம் வழங்கியது.
உழைப்பு, கூலி என்று உலகில் பெண்கள் குரலெழுப்பிய வேளையில் இந்தியாவில் அடிமைகளாகவே பெண்கள் வாழ்ந்தனர். ‘கற்பு’ என்ற பொருள் தெரியாக் கட்டுப்பாடு, கல்வி, உழைப்பு இல்லா வாழ்வு, சொத்துக்கு உரிமையற்றவர் என்பனவற்றால் அவதியுற்றனர் பெண்கள்.
ஜாதி ஒழிப்பும், பெண்ணடிமை ஒழிப்பும் என இயக்கம் கண்ட பெரியாருக்குப் பின் பெண்கள் படை தொடர்ந்தது. அவர்களுள் அன்னை நாகம்மையாரும், கண்ணம்மையாரும் சான்றாகக் காட்டக் கூடியவர்கள். திண்ணைப் படிப்பே நிறைவாகப் பெறாத நாகம்மையார் அவர்கள் 1927இல் ‘குடிஅரசு’ ஏட்டின் பதிப்பாளராகித் தன் திறமையை வெளிக்காட்டினார். 1921இல் இந்தியாவெங்கும் ‘கள்ளுக் கடை மறியல்’ நடந்தாலும் ஈரோடு நகராட்சி மறியலே இந்தியத் தலைவர்களைத் திரும்பிப் பார்க்கவைத்தது. மறியலைத் திரும்பப் பெற காந்தியாரை வற்புறுத்திய வேளையில் அவர் கைகாட்டியது அன்னை நாகம்மையார், கண்ணம்மையார் மறியலைத்தான். 144 தடையை நீக்கக் காரணமாகத் திகழ்ந்த போராளி. வைக்கம் போராட்டக் களத்தில் பெரியாருக்கு மேலும் மேலும் களமும, சிறையும் கிடைத்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் என வேண்டியவர். அய்யாவைப் போல் அபராதம் ரூ.5 மட்டுமே கட்ட மறுத்து வழக்கு மன்ற சிறை வாய்ப்பைப் பெற்றவர்.
ஜாதி மறுப்பு மணம், கைம்பெண் மணம், சுயமரியாதை மணங்கள் பலவற்றைத் தம் வீட்டிலேயே நடத்திப்பாதுகாப்பு நல்கியவர். இன்னும் மூவலூர் இராமாமிர்தம்மாள், தஞ்சை இலட்சுமியம்மாள், தஞ்சை பரிபூரணத்தம்மாள் என மகளிர் பட்டியல் தொடரும்” என்று எடுத்துரைத்தார். பிரபாகரன் நன்றி கூற நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நிறைவுபெற்றது. கோ.இளமுருகு, சு.திருமலைக்குமரேசன், கி.கோபால்சாமி, அ.பிரசாத், பெரியார் பிஞ்சு பிரித்விராஜன், பொ.போஸ் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.