நாவலர் இரா. நெடுஞ்செழியன்
ஹிந்தி – உருது – இந்துஸ்தானி
வட இந்தியாவின் மொழி வரலாறு பெரும்பாலும் சிதறிய நிலையிலேயே காணப்படுகிறது. முதன்முதலில் சிந்து கங்கைச் சமவெளிகளில் தமிழ் மொழியும், திராவிட நாகரிகமும் செழித்தோங்கியிருந்தன. சிந்துவெளித் திராவிட நாகரிகம், சிறப்புற்றிருந்த நிலையில்தான் ஆரியர் நடு ஆசியாப் பகுதியிலிருந்து இந்தியாவுக்குள் வந்து நுழைந்தனர்.
பேசப்படாத மொழி
அவர்கள் வரும்பொழுது எடுத்துவந்த மொழி ‘பிராகிருதம்’ என்னும் சிதைந்த நிலையிலுள்ள மொழியாகும். சிந்துவெளி நாகரிக மக்களோடு கலந்ததன் பிறகே தம் மொழிக்கு இலக்கணக் கோப்பு அமைத்து, ‘திருத்தப்பட்ட மொழி’ என்னும் பொருளைத் தரும் ‘சமஸ்கிருதத்தை’ உருவாக்கினர்கள். ‘சமஸ்கிருதம்’ இந்தியாவில் எக்காலத்திலும் எந்த இடத்திலாவது பேச்சு வழக்கில் இருந்ததாகத் தெரியவில்லை. மதக் கோட்பாடுகளை விளக்குவதாகவும், கடவுள் வழிபாடுகளைக் கொண்டதாகவும், மூதாதையரின் மொழி என்ற அளவிலும் பேச்சு வழக்கில்லாமல் அது நின்றுவிட்டது.
கற்றறிந்தோர்களால் மட்டுமே கையாளப்படும் நிலையிலிருந்ததேயொழிய அன்றாட நடைமுறை வாழ்க்கைக்குப் பயன்படுவதாயிருந்ததில்லை. ஆரியர் வடஇந்தியா முழுமையும் பரவியபொழுது அவர்கள் பேச்சுவழக்கில். இருந்துவந்த பிராகிருதத்தின் சொற்கள் இடத்திற்கு இடம் வேறுபட்டு வழங்கிவரத் தொடங்கின. திராவிடக் குழுமொழிகளோடு அவை கலக்க இலக்கிய இலக்கண வளமற்ற மொழிகள் பல பேச்சு வழக்கில் மட்டும் நின்று நிலவி வரலாயின. அவைகளில் நூல் வழக்கு ஏற்பட உதவியாக இருந்தது கற்றறிந்தோர்களால் செம்மைபடுத்தி வரப்பட்ட சமஸ்கிருதமாகும்.
சமஸ்கிருதத்தின் சாயல்
எனவேதான் சமஸ்கிருதத்தின் சாயல் வடஇந்திய மொழிகள் அனைத்திலும் காணப்படுகிறது. வட இந்தியாவின் சிதைவு மொழிகள் பலவும் சமஸ்கிருதச் சொற்களை மிகுதியாகக் கொண்டிருந்த போதிலும், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் திட்டுத் திட்டாகச் சிதறிக் கிடந்தமையால் அடிப்படைச் சொற்கள் கூடத் திரிந்தும், மாறுபட்டும் வழங்க ஆரம்பித்தன. மேலும் இம் மொழிகள் பெரும்பாலும் பேச்சுவழக்கில் மட்டும் இருந்ததால் மொழியைக் கட்டுப்படுத்தும் இலக்கிய இலக்கண நூல் வழக்கு இன்றி வேகமாக மாறுபட்டுக்கொண்டிருந்தன.
பாலிமொழியின் வளர்ச்சி
பிராமண மதத்தை எதிர்த்து புத்தமதம் எழுந்ததும், புத்தமதக் கொள்கைகளும், கோட்பாடுகளும் எழுதப்பட்டிருந்த பாலிமொழி வளர ஆரம்பித்தது. முதன் முதலாக வட இந்தியாவில் பாலி மொழி பேச்சு வழக்கின் மூலமும் ஏட்டு வழக்கின் மூலமும் எங்கணும் பயிலப்பட்டது. அசோகன் காலத்தில் புத்தமதம் உயர் நிலையை அடைந்ததும், பாலி மொழியும் அதன் வளர்ச்சியின் உச்ச நிலையை அடைந்தது. அசோகன் கல்வெட்டுக்கள் பலவும் பாலிமொழியிலேயே எழுதப்பட்டன.
கி.மு. 3ஆவது நூற்றாண்டிலிருந்து கி.பி. 6ஆவது நூற்றாண்டு வரை ஏறத்தாழ ஒன்பது நூற்றாண்டுகள் பாலிமொழி சிறப்புற்று விளங்கியது. புத்த சமயம் தாழ்ந்து பிராமண மதம் ஆதிக்கம் பெறத் தொடங்கியதும், பாலிமொழியின் ஆட்சி குன்ற, அரசாங்கத்தின் ஆதரவு பிராமண மதத்தைச் சார்ந்த சமஸ்கிருதத்திற்குத் தரப்பட்டது. சமஸ்கிருதத்தின் நூல் வழக்கு உயர்ந்த போதிலும், பாலி மொழி வகித்துவந்த இடத்தை சமஸ்கிருதத்தால் நிரப்ப முடியவில்லை. ஏனெனில் முன்னர் கூறப்பட்டபடி சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இயங்காத மொழியாகி விட்டது. எனவே ஆங்காங்கிருந்த சிதைந்த மொழிகளே பழையபடி வழங்கின.
வெளிநாட்டுப் படையெடுப்பு
வட இந்தியாவின் மொழி வரலாறு வெளிநாட்டுப் படை யெடுப்புகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டது; அதனால் மாறியது. முதன் முறையாக கி. பி. எட்டாவது நூற்றாண்டில் அராபியர் குஜராத் பகுதியின்மீது படையெடுத்தனர். அதற்குப் பின் முகம்மது கஜினி காலம்வரை குறிப்பிடத்தகுந்த படையெடுப்புகள் எதுவும் கிடையாது. கஜினி காலத்தில் தான் அயல்நாட்டுப் படையெடுப்புகள் அதிகரித்தன. கஜினி மட்டும் பதினேழு தடவைகள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்துள்ளான். கஜினிக்குப் பின் திரும்பத் திரும்பப் படையெடுத்து இந்தியாவிற்குள் வருவது என்பது போய், இந்தியாவிலிருந்தே ஆட்சி புரிவது என்ற நிலைக்கு வந்தனர்.
துருக்கி, அரபி, பாரசீகம்
அதற்குப் பிறகுதான் கோரி, அய்பக் கில்ஜி, சையத், ஆப்கன் போன்ற பல அரச பரம்பரைகள் வட இந்தியாவில் தொடர்ந்து ஆண்டன. இந்த அரசர்களுடன் வந்த துருக்கி, அரபி, பாரசீகப் போர் வீரர்கள் டில்லி நகரைச் சுற்றிலும், மதுரா போன்ற பகுதிகளிலும் தங்கி, பின் வட இந்தியா முழுதும் ஆட்சி விரிவடைய விரிவடைய இவர்களும் பரவினர். அவர்கள் பேசிய துருக்கி, அரபி, பாரசீகம் ஆகிய மொழிகளின் சொற்கள் அவர்கள் தங்கிய இடங்களில் வழங்க ஆரம்பித்தன.
அந்தச் சொற்கள் ஆங்காங்கு நிலவிய மொழிகளுடன் கலந்து புதுமொழிகள் தோன்றின. குறிப்பாக டில்லி மதுரா என்ற பகுதிகளில் வழங்கிய சிதைந்த மொழியுடன் அந்தப் பகுதிகளில் தங்கிய முகம்மதிய போர் வீரர்கள் பேசிய அரபி, பாரசீகச் சொற்கள் கலந்து உருது மொழி உண்டாயிற்று. துருக்கி மொழியில் உருது என்றால் துருப்பு, படை, பாடிவீடு என்று பொருள். அதாவது உருதுமொழி துருப்பு, படைவீடு, பாசறைகளில் வழங்கிய மொழி என்று பெயர்.
ஹிந்தி
ஹிந்தி அல்லது இந்த்வி என்ற சொல் ஒரு தனிப்பட்ட மொழியின் பெயரல்ல என்பதை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும். முகம்மதிய படையெடுப்புக்கள் வட இந்தியாவிற்குள் புகுந்ததும், வெளிநாட்டு மொழிகள் வட இந்தியாவில் நுழைந்தன. வெளிநாட்டு மொழிகளினின்றும் வடஇந்திய மொழிகளைப் பிரித்துக் காட்டுவதற்காக வட இந்திய மொழிகளனைத்திற்கும் தரப்பட்ட பெயர் ஹிந்தி அல்லது இந்த்வி என்பதாகும்.
அயல் மொழிகள், அயல் மொழிகளல்லாதவை என்ற பிரிவில், தமக்குள் எவ்வளவோ மாறுபட்டிருந்த போதிலும் வட இந்திய மொழிகள் அனைத்தும் இரண்டாவது பிரிவில் சேர்க்கப்பட்டு ஹிந்தி அல்லது இந்த்வி என்ற பெயரால் அழைக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, தென்னாட்டுக்கு, போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் போன்ற பல பிரிவினர் வந்தபோதிலும், அவர்களனைவரும் அய்ரோப்பியர் என்றோ பரங்கிகள் என்றோ ஒரே பொதுப் பெயரால் அழைக்கப்பட்டது போல, ‘ஹிந்தி’ என்ற சொல் வட இந்திய மொழிகள் அனைத்துக்கும் பொதுப் பெயராகத் தரப்பட்டது.
ஹிந்தி என்று பொதுப் பெயரில் கூறப்பட்ட இந்த வட இந்திய மொழிகள் கீழ் நாட்டு ஹிந்தி, மேல் நாட்டு ஹிந்தி என இரு பெரும்பிரிவில் அடங்கும். இவற்றில் அடங்கும் முக்கிய மொழிகளாவன (1) பந்தேலி, (2) கனோஜ், (3) பிரஜ் பாஷா, (4) பங்காரு, (5) காரிபோலி, (6) அவதி, (7) பகேலி, (8) சாட்டிஸ்காரி. சில மொழியாசிரியர்கள் இந்த எட்டுடன் (1) ராஜஸ்தானி, (2) மககி என்ற இரண்டு மொழிகளையும் சேர்த்து பத்து முக்கிய மொழிகளாக எண்ணுகிறார்கள். ஆசிரியர் மறைமலையடிகள் தம் “ஹிந்தி பொது மொழியா?” என்ற நூலில் மேல் நாட்டு ஹிந்தி, கீழ் நாட்டு ஹிந்தி இரண்டுடன் மைதிலி, போஜ்புரி, மககி என்ற மூன்றையும் கொண்ட பிகாரி என்ற குழுவையும் அமைத்து மூன்று பெரும் பிரிவுகளாக வகுத்துள்ளார்.
இந்த முக்கிய மொழிகளையல்லாமல் சிந்தி, லந்தி, பஞ்சாபி, குஜராத்தி, ருமேனி, கடுவாலி, நேபாலி, உரியா, பங்காளி, மராட்டி, காஷ்மீரி, கோஸ்தானி, திராகி, பஷை, கலாஷா, கவர்பாபு போன்ற பல மொழிகள் வட இந்தியாவில் இருப்பதை அவர் குறிப்பிடுகிறார். இந்த மொழிகளனைத்தும் ஏற்கெனவே வழங்கிவந்த சிதைவு மொழிகளுடன் அரபி, பாரசீகச் சொற்கள் கலந்து உருப்பெற்றவையாகும். மேற் குறிப்பிட்டவற்றுள் பிரஜ்பாஷா என்பதே உருது மொழியின் அடிப்படையாகும்.
கி.பி. 13ஆவது நூற்றாண்டில்தான் ராஜஸ்தானி வட இந்தியாவில் வளரத் தொடங்கியது. அது சில நூற்றாண்டுகள் கழித்து, பேச்சு வழக்கில்லாமல் நின்றுவிட்டது.
பக்தி மார்க்கம்
15ஆவது நூற்றாண்டில் வட இந்தியாவில் உண்டான பக்தி மார்க்கம் வட இந்திய மொழிகளில் இலக்கியத்தை உண்டாக்கியது. பக்தி மார்க்கத்தில் முக்கியமானவை மூன்று (1) நிரகர் பக்தி, (2) கிருஷ்ண பக்தி, (3) ராம் பக்தி.
கபீர்தாசர், நானக், தாது என்பவர்கள் நிரகர் பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது பாடல்களும், எழுத்தும் காரிபோலி என்ற மொழியில் இருக்கிறது. இந்தக் காரிபோலி என்ற மொழி, பின் மொழிப் பிரச்சினை வளர்ந்த சமயத்தில் இந்துஸ்தானியுடன் ஒற்றுமைப்படுத்திக் காட்டப்பட்டது.
இரண்டாவதாகக் கூறப்பட்ட கிருஷ்ண பக்தியைச் சேர்ந்த சுரதாசர், நந்த்தாஸ் முதலியவர்களின் பாடல்கள் பிரஜ் பாஷையில் இருக்கின்றன.
துளசிதாஸ் எழுதிய ராமாயணம் அவதி மொழியிலுள்ளது. அவர் ராம் பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவர்.
பக்திப் பாடல்கள்
இந்த மூன்று பக்தி மார்க்கங்களும் மூன்று மொழிகளில் இலக்கியத்தை உண்டாக்கியதும், அந்த இலக்கியங்களும் துதிப்பாடல்களாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கனவாகும். எனவே அந்த மொழிகளில் இலக்கியங்கள் என்று சொல்லத்தக்கவை நாலைந்து நூற்றாண்டுகளுக்குட்பட்ட பக்திப் பாடல்களேயாகும். இந்த மொழிகளில் இந்துக்கள் மட்டுமல்ல, பின் முகம்மதிய கவிகளும் தோன்றி சில இலக்கியங்களை உண்டாக்கியிருக்கிறார்கள்.
மொகலாயர் ஆட்சிகாலத்தில் உருதுமொழி இலக்கியம் வளர்ந்தது. வட இந்தியாவில் உருது மொழி அக்காலத்தில்தான் பரவ ஆரம்பித்தது. இந்துக்கள், முஸ்லீம்கள் இருபாலரும் வழங்கும் மொழியாக அது இருந்து வந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை அதற்கு எத்தகைய எதிர்ப்பும் இல்லையென்று கூறலாம்.
உருது எல்லோராலும் பேசப்பட்ட போதிலும் முஸ்லீம் சார்பான மொழி என்ற எண்ணத்தின் மீது இந்துக்களுக்குத் தனியான மொழியொன்று தேவை என்ற முயற்சி எழுந்தது. இது 19ஆவது நூற்றாண்டின் ஆரம்பத்தில் எனலாம். கல்கத்தாவில் இருந்த கில்சிர்ஸ்ட் என்ற ஆங்கில அதிகாரி இதற்குப் பெரிதும் காரணமாயிருந்தார்.
தேவநாகரி வடிவம்
அவருடைய தூண்டுதலின் பேரில் லல்லுபாய், சடல் மிஸ்ரா முதலியவர்கள் ஒன்றுகூடி பாரசீக மொழியிலிருந்தும், உருது மொழியிலிருந்தும் பல இலக்கியங்களை மொழி பெயர்த்தும், பல சொற்களை மாற்றியமைத்தும் புதுப்பித்தனர். அவர்கள் கையாண்ட முறை உருது மொழியிலிருந்த அரபி, பாரசீகச் சொற்களைத் தள்ளிவிட்டு, அதற்குப் பதிலாக சமஸ்கிருதச் சொற்களைப் போட்டு, புதுமொழி வழக்கை உண்டாக்குவதாகும். இந்த அமைப்பில் உருதுவின் வரிவடிவாகிய அரபி எழுத்துக்களுக்குப் பதிலாக, வடமொழியின் வரிவடிவாகிய தேவநாகரி எழுத்துக்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. எனவே வழக்கிலிருந்த அரபி, பாரசீகச் சொற்களுக்குப் பதிலாக சமஸ்கிருதச் சொற்கள் புகுத்தப்பட்ட செயற்கை மொழியாக இப்பொழுது ஹிந்தி என்று குறிப்பிடப்படும் மொழி உருப்பெற்றது.
ஹிந்தி தோன்றிய 150 ஆண்டுகளுக்குள்தான் ஆகிறது. இதைக் கேட்டதும் ஹிந்தி ஆதரிப்பாளர் களுக்கு – உடனே அல்ல என்றுதான் சொல்லத் தோன்றும். மொழி நூல் வரலாற்றை நன்றாக ஆராய்ந்தால் இந்தக்கூற்று உண்மை என்பதை அவர்களே ஒப்புக்கொள்வர். இதற்குச் சான்றாக வட இந்திய தலைவர்களின் பேச்சையும், ஹிந்தி மொழியாசிரியர்களின் எழுத்தையுமே காட்டலாம்.
செயற்கை மொழி
இந்தி சம்மேளனத்தின் தலைவராக இருந்தவரும், அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவுமிருந்த ராஜேந்திர பிரசாத் அவர்கள் தாம் எழுதிய கட்டுரை ஒன்றில் “இந்தி ஒரு செயற்கை மொழி” என்பதை ஒப்புக்கொள்ளுகிறார். செயற்கைமொழி என்று குறிப்பிடப்படுவதாவது மிகக்குறுகிய காலத்தில் அவசரமாகக் கட்டாய முயற்சியின்பேரில் உண்டாக்கப்பட்ட மொழி என்பதாகும். எல்லா மொழிகளும் உண்டாக்கப்பட்டவையே என்ற போதிலும், காலப் போக்கில் தானாக வளராமல் கட்டாயப்படுத்தி அவசியத்தையும் அவசரத்தையும் முன்னிட்டு வளர்க்கப்படும் மொழி பொதுவாக செயற்கை மொழி என்று சொல்லப்படும்.
ஹிந்தி மொழி எழுத்தாளர் தாரா சந்த் என்பவர் கூறுவதாவது:-
“தற்காலத்தில் ஹிந்தி இவ்வாறு ஆரம்பித்ததைக் கூறும்பொழுது சில ஹிந்தி எழுத்தாளர்கள் எதிர்க்கின்றனர். நான் கவனித்த வரையில் அந்த எதிர்ப்பு பலனற்றது. தற்காலத்தில் ஹிந்தி மொழியின் ஆரம்பத்தையும், வளர்ச்சியையும் விருப்பு, வெறுப்பற்ற முறையில் ஆராய்ந்தால் இந்த ஒரே முடிவுக்குத்தான் வரவேண்டும். அதாவது: ஹிந்தி மொழி 135 ஆண்டுகளுக்குட்பட்டது. அது கூட அதிகம் என்றுதான் கூறவேண்டும். ஏனென்றால் சடல்மிஸ்ராவும், லல்லுலால்ஜியும் ஹிந்திமொழியின் உதயத்தைக் கண்ட போதிலும், அந்த உதயம் நிலைபெறவில்லை. இருள் சூழ்ந்து கொண்டது. கவனிப்பாரற்று இருட்டில் இருந்தமொழி 1857க்கு அப்புறம்தான் இலக்கிய வளர்ச்சியைப் பெற்றது” என்பதாகும். இவர் கூறுப்படி ஹிந்தி தோன்றி சற்று ஏறக்குறைய 150 ஆண்டுகளான போதிலும் (தாராசந்த் எழுதியது 1935இல்), ஹிந்தி இலக்கியத்தின் முதலெழுத்து தோன்றி ஒரு நூற்றாண்டுகூட ஆகவில்லை.