* தந்தை பெரியார்
பெரியார் – மணியம்மை திருமணம் 9.7.1949 பிற்பகல் 3.30 மணிக்கு சென்னையில் ஜில்லா திருமண ரிஜிஸ்ட்ரார் முன் சட்டப்படி, முறைப்படி நிறைவேறிவிட்டது.
பெரியார் வயது 70, மணியம்மை வயது 31. பெரியார் பிறந்தது பிரமாதி ஆண்டு புரட்டாசித் திங்கள் 2ஆம் தேதி. மணியம்மை பிறந்தது சித்தார்த்தி ஆண்டு மாசித் திங்கள் 27ஆம் தேதி.
மணியம்மை இயக்கத் தொண்டுக்கு ஆகவும், பெரியார் பாதுகாப்புக்கு ஆகவும் என்று கருதி தமது வீட்டாரிடம் அனுமதி பெற்று வீட்டாராலேயே அனுப்பப்பட்டு பெரியாரிடம் வந்து சேர்ந்து இன்றைக்கு ஆறு ஆண்டுகள் பூர்த்தி ஆகிவிட்டன. மணியம்மை பக்குவம் அடைந்து இன்றைக்கு 17 ஆண்டுகள் ஆகின்றன.
இயக்கத் தொண்டு
மணியம்மையின் தந்தையார் காலமாகி இன்றைக்கு 6 ஆண்டுகள் ஆகின்றன. மணியம்மையாரின் தந்தையார் இருக்கும்போதே மணியம்மையார் பக்குவமடைந்து
10 ஆண்டுகளுக்கு மேலாகவே தந்தையார் வீட்டில் திருமணப் பேச்சே பேசப்படாமல் இயக்க உணர்ச்சிப் பேச்சே பேசப்பட்டு, தந்தையார் தம் மகளை இயக்கத் தொண்டே செய்து கொண்டிருக்க ஆசைப்பட்டு விட்டிருந்தார்.
மணியம்மை திருமணத்தைப் பற்றி யாராவது தந்தையாரைக் கேட்டால் அவர் சுயமரியாதை இயக்கக் கருத்துப்படி, “அதைப் பற்றி நாம் ஏன் பேச வேண்டும்; அதன் இஷ்டப்படி அது எப்பொழுதோ யாரையோ திருமணம் செய்து கொள்ளட்டும். நமக்கு ஏன் அந்தக் கவலை?” என்று சொல்லி விடுவார்.
மணியம்மையை யாராவது திருமணம் பற்றிக் கேட்டாலும், “உங்களுக்குச் சிறிது கூட நாகரிகம் தெரியாதா? உங்களுக்கு ஏன் இந்தப் பேச்சு? உங்கள் வேலையைப் பாருங்கள்” என்று தமது 16, 17-ஆம் ஆண்டுகளிலேயே சொல்லி விடுவது வழக்கம்.
இந்தப்படியே சொல்லி வந்து இன்றைக்கு 31ஆவது ஆண்டு வரையிலும் திருமணத்தைப் பற்றிய கவலையும், பேச்சும் இல்லாமல், பெரியார் நலம் பேணுவதையே தமது வாழ்க்கைத் தொண்டு; வாழ்வின் பயன் என்று கருதி இந்த 6 ஆண்டுகளாக பெரியாரிடமிருந்து பற்றுடன் ஏவல் செய்து கொண்டிருந்து வந்திருக்கிறது.
மணியம்மையின் யோக்கியதாம்சம் என்னவென்றால் அது எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பில் இரண்டு ஆண்டுகள் படித்ததாகும். முதலாண்டு பரீட்சைக்குப் போகாததற்குக் காரணம் உடல் நிலை மிக்க காய்ச்சலுக்குள்ளாகிப் போக முடியவில்லை. இரண்டாவது ஆண்டு பரீட்சைக் காலத்தில் தந்தையாரின் உடல்நிலை கடினமான காயலாவுக்குள்ளாக, தந்தைக்கு அருகிலிருந்து தொண்டு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுப் போக முடியாததாகி விட்டது.
தந்தையார் காலமாகி ஒரு மாதத்திலேயே அதாவது 1943 ஜூலையில் மணியம்மை பெரியாரிடம் சேர்ந்தது என்றாலும், சில நாளிலேயே பெரியார், மணியம்மையை தமிழ் படிப்பதற்காக குலசேகரப்பட்டினத்திலுள்ள சி.டி.நாயகம் அவர்களது தமிழ்க் காலேஜிக்கு தமிழ் படிக்க அனுப்பிவிட்டார். அங்கு தமிழ்ப் பிரவேச பண்டித பரீட்சைக்கு படித்துக் கொண்டே சி.டி. நாயகம் அவர்களுடன் திருநெல்வேலி ஜில்லாவில் பிரசாரத்துக்குச் சென்று ஒரு மணிக்கு மேலாகப் பேசிப் பிரச்சாரம் செய்து வருவார்.
பண்டிதர் பரீட்சை
கடைசியாக மணியம்மை சர்க்கார் பரீட்சைக்கு எழுதுவதற்கு ஆக மதுரைக்கு வந்து பரீட்சைச் சீட்டு வாங்கிக் கொண்டு பரீட்சை மண்டபத்துக்குப் போய்க் கொண்டிருக்கையில், மணியம்மையின் நெருங்கிய உறவினர் ஒருவர் மதுரைக்கு வந்திருந்தவர், மணியம்மையைத் தனித்து வந்துவிட்டதாகக் கருதி, மணியம்மையை நடக்க விடாமல் தடுத்துப் பிடித்துக் கொண்டு வேலூருக்கு வரும்படி அழைத்தார். மணியம்மை என்ன சொல்லியும் அவர்விடவில்லை. போலீசார் இருவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விட்டார்கள். அங்கு சப்-இன்ஸ்பெக்டர் இருவரையும் விசாரித்து, மணியம்மை கையில் இருந்த பரீட்சை ஆதாரங்களை, பிரவேச சீட்டை, பணம் கட்டின ரசீதையெல்லாம் பார்த்து, பரீட்சை அறைக்குப் போகும்படி கான்ஸ்டபிளுடன் அனுப்பிக் கொடுத்தார். அதற்குள் பரீட்சை துவக்க நேரம் தாண்டி விட்டதால், பரீட்சை மண்டபக் கதவு மூடப்பட்டு விட்டது. திரும்பி ஈரோடு வந்து சேர வேண்டியதாகி விட்டது. என்றாலும் தமிழில் ஓர் அளவுக்குப் பயிற்சி உண்டு.
பெரியாரது மனைவி நாகம்மையார் 1933ஆம் ஆண்டு முடிவெய்தி விட்டார். இன்றைக்கு 16 ஆண்டுகள் ஆகின்றன. 16 ஆண்டுகளாகவும் அதற்கு முன் 13 ஆண்டுகளாகவும் பெரியார் தமது வியாபாரம், குடும்பம், எஸ்டேட் ஆகிய நிர்வாகம் எதையும் கவனியாமல் விட்டுவிட்டு, 30 ஆண்டுகளாகப் பொதுத் தொண்டு என்னும் பேரால் சதா பிரச்சார வேலையிலேயே ஈடுபட்டு வருகிறார். அவர் தலைவரானாலும்கூடப் பேர்தான் தலைவரே ஒழிய, அவரது நேர் வேலை பிரச்சார வேலையாகவே இருந்து வந்திருக்கிறது.
அவருக்குக் குழந்தை இல்லாத காரணத்தால் அவரது 32ஆவது ஆண்டு முதல் அவரை மற்றொரு மனைவியை மணம் செய்து கொள்ளும்படி தாய், தந்தை, தமையனாரான பெரியவர் கிருஷ்ணசாமி அவர்களும், மனைவி நாகம்மையும்கூடத் தூண்டி வந்தார்கள். நாகம்மையார் காலமான 1933ஆம் ஆண்டில் பெரியாரின் தாயார், பெரியாரைத் திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தி வந்தார். அப்போது பெரியாருக்கு வயது 54 அல்லது 55 இருக்கும். அப்போது உத்தேசிச்கப்பட்ட பெண் எதுவென்றால் பெரியாரின் தங்கை கண்ணம்மாள் மகள் இராஜாத்தி. அதற்கு வயது சுமார் 17 அல்லது 18 இருக்கும். 6ஆவது பாரம் படித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம்.
பொதுத் தொண்டு
அப்போது பெரியார் சொன்னது என்னவென்றால், “பொதுத் தொண்டுக்கு அனுகூலமாக இருக்கும் பொருட்டே என் மனைவி இறந்துவிட்டதாகக் கருதி மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன். அப்படியிருக்க, எனக்கு மனைவிச் சனியன் ஏன்?” என்று சொல்லி விட்டார்.
இதன் மத்தியில் பெரியாரிடம் நெருங்கி அன்பு காட்டிப் பழகி வந்த பெண்கள், தாய்மார்கள் கணக்கிலடங்காது. காலம், நேரம், இடம் எதுவும் கவனிக்கப்படாமல் அவரிடம் பழகிய தாய்மார்கள் கணக்கிலடங்காது. இப்படிப்பட்ட காலங்களிலும் பெரியார், அவர்களை நடத்தினதும், நடந்துகொண்டதும் பெண்கள் உலகம் நன்றாய் அறியும்.
பல பெண்கள் தங்களை மறந்து நடந்து கொண்ட போதும், தவறான உணர்ச்சிகளைக் காட்டிக் கொண்ட போதும், அப்படிப்பட்டவர்களை ஜாடையாய் விலக்கியும், இயக்கத்தில் அலட்சியப்படுத்தி நெருங்கவிடாமல் செய்தும், தடுத்து இருப்பதோடு என்னதான் சுதந்திரக் காதல் பேசினாலும் கூடுமானவரை இயக்கத்திற்குள் காதல் பேச்சுக்கு – ஒழுக்கத் தவறான நடத்தைக்கு இடமில்லாமல் பாதுகாத்து இருக்கிறார். அதனால் பல ஆண், பெண்களுடைய அதிருப்தியைப் பெற்று இருக்கிறார்.
இயக்கத் தோழர்களிலும் அப்படிப்பட்ட நடத்தை உள்ளவர்களைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்தே நடந்து வந்திருக்கிறார்.
பெண்கள் சம்பந்தமான புகார்கள் வந்தவர்கள் எப்படிப்பட்டவர்களானாலும் அவர்களை வெறுத்தே வந்திருக்கிறார்.
நபர்களைப் பற்றியும், நடத்தைகளைப் பற்றியும், அவர்களை வெறுத்தது பற்றியும், அவர்கள் இன்றும் எதிரிகளாய் இருப்பது பற்றியும் அவசியம் வரும்போது பட்டியல் தருவார் பெரியார்.
சிந்திக்க வேண்டும்
அப்படிப்பட்ட நமது கழகத்தில் நம் பெரியாரும், மணியம்மையும் திருமணம் செய்து கொண்டார்கள் என்றால் இது காதல் திருமணமாகவோ, பொருந்தாத் திருமணமாகவோ, சீர்திருத்தத்திற்கு விரோதமான திருமணமாகவோ, இயக்கத்துக்கும் இயக்கக் கொள்கைகளுக்கும் கேடு செய்யும் திருமணமாகவோ இருக்க முடியுமா என்பதைப் பகுத்தறிவுவாதிகள், நடுநிலைமைச் சுயமரியாதைக்காரர்கள், சீர்திருத்தவாதிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கலவி இச்சைக்கு ஆக பெரியாரைப் போன்றவர்கள் பரிகாரம் தேட வேண்டுமானால் அதற்குத் திருமணம்தான் வழியா? இது சாதாரண ஆஸ்திகர்களுக்கும், அழுக்கு மூட்டை வைதீகர்களுக்கும் கூட விளங்குமே! இயக்க மைனர்களுக்கு விளங்கவில்லை என்றால் யார் நம்புவார்கள்?
இது பகுத்தறிவு, சீர்திருத்தம் பேசுகிறவர்களுக்கு விளங்கவில்லை என்றால் இது மெய்யாய் – நாணயமாய் இருக்க முடியுமா?
தவிர, மணியம்மை திருமணம் பொருந்தாத் திருமணம் என்று எந்தக் கருத்தில் சொல்லப்படுகிறது? “70-க்கும் 30-க்கும் 40 வயது வித்தியாசம் இருக்கிறது” என்பதனால்தான். இந்த வித்தியாசம் 40 ஆனால் என்ன, 60 ஆனால் என்ன? எந்த நிமிஷத்திலும் திருமணத்தை ரத்து செய்து கொண்டு தனக்கு வேண்டிய கணவனை மணம் செய்து கொள்ள உரிமை உள்ள திருமணம்தானே இது? இன்று மணியம்மை குழந்தை அல்லவே? பகுத்தறிவும், சீர்திருத்த உணர்ச்சியும், சுயமரியாதை அறிவும் கொண்ட 30 வயதுப் பெண் அல்லவா? அது விஷயம் உணர்ந்து ஒப்பித் திருமணம் நடந்திருக்கிறது என்றால், இதில் யாரை யார் ஏமாற்றி, யாரை யார் கட்டாயப்படுத்தி, யாருக்கு யார் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி அல்லது யார் யாருக்குச் சம்மதமில்லாமல் தூக்கி வந்து செய்து கொள்ளப் பட்ட திருமணம் என்று சொல்லக்கூடும்?
இதை ஏன் இவ்வளவு விளக்குகிறோம் என்றால், இந்தத் திருமணத்தைப் பகுத்தறிவு, சீர்திருத்தம், பொருந்திய மணம், சுயமரியாதை என்னும் பெயரால் ஆட்சேபிப்பவர்களைக் கண்டு பொதுமக்கள் ஏமாந்து போகாமல் விளக்கம் பெறவே தெரிவிக்கிறோம்.
இயக்கத் தோழர்களின் எதிர்ப்பு
இனி அடுத்தபடியாக இந்தத் திருமணத்தைக் குறைகூறும் இயக்கத் தோழர்கள் சொல்லும் குற்றம் “இயக்கத்துக்கு மணியம்மையை வாரிசு ஆக்குவது தகாது” என்பது.
இதைப் பெரியாரின் எதிரிகள் எந்தக் காரணம் காட்டி, எப்படிப் பிரச்சாரம் செய்து மக்களை ஏய்க் கிறார்கள் என்றால், பெரியார் மணியம்மையைத் திராவிடர் கழகத்துக்குத் தலைவராக ஆக்கி மகுடம் சூட்டி, அந்தம்மாள் (அந்தம்மாளை மிகக் கேவலமான சொற்களால் அர்ச்சித்து) “நமக்குத் தலைவராவதில் நமக்கு மானம், ரோஷம், வெட்கம், சுயமரியாதை இல்லையா?” என்று கேட்டு, ரோஷஸ்ட்ரீம் ஏற்றப்படுகிறது. இந்த வேலையை எடுத்துக் கொண்டவர்கள் சிறிதுகூட ஈவு, இரக்கம், நேர்மை, மனச்சாட்சி இல்லாமல் “மணியம்மையா நமக்குத் தலைவர்?” என்று மக்களுக்குச் சொல்லும் முறையில், அநேக சங்கதிகளைப் புகுத்தி வசன வீரர்களாகி விட்டார்கள். அது எப்படியோ போகட்டும். தங்கள், தங்கள் நிலையை, லிஸ்ட்டை, வாழ்க்கையைப் பார்க்கும் ஓய்வு கிடைத்தால் அப்போது ரோஷக்காரர்கள் வெட்கப் பட்டே தீருவார்கள்.
ஆனால் இயக்கத் தலைமை என்பது ஒரு தனி மனிதன் சூட்டக்கூடிய வாரிசுக் கிரமத்தில் கட்டுப்பட்டதா?
உலகத்தில் எந்த இயக்கத் தலைமை ஸ்தாபனமாவது அப்படி இருக்கிறதா?
பெரியார் அவரது இந்த 50 வருஷ வாழ்வில் பல தலைமை ஸ்தாபனத்தில் இருந்திருக்கிறார். இவற்றுள் ஏதாவது ஒன்று ஒரு தனிப்பட்ட மனிதன் வாரிசுக் கிரமத்தில் சூட்டிய தலைமைப் பதவியாக இருக்கக் கூடுமா?
மற்றும் இன்று இந்நாட்டில் எத்தனையோ ஸ்தாபனங்களும், தலைமைப் பதவியும் இருந்து வருகின்றன. இவைகளில் எது யாரால் சூட்டப்பட்டதாகும்?
திராவிடர் கழகத் (ஜஸ்டிஸ் கட்சி) தலைவர் பெரியா ருக்குத் தலைமைப் பதவி அவர் ஜெயிலில் இருக்கும்போது, பொப்பிலிராஜா வீட்டில் நடந்த தேர்தலில், சென்னையில் தீவு மைதானத்தில் நடந்த மகாநாட்டுத் தேர்தலில், சேலம் மகாநாட்டுத் தேர்தலில், திருச்சி மகாநாட்டுத் தேர்தலில் தெரிந்தெடுக்கப்பட்ட தலைவர் பதவியாகும்.
இப்படிப்பட்ட தலைமைப் பதவி பெரியாரால் மணியம்மைக்குச் சூட்டப்படப் போகிறது என்று போலி ஆத்திரமும், போலி அழுகையும் காட்டி மக்களை ஏய்த்தால், மக்கள் ஒரு நாளைக்காவது சிந்திக்கும்படியான நிலை வராதா என்று கருத வேண்டாமா?
பெரியார் மணியம்மைக்குத் தலைமைப் பதவியைச் சூட்டுவதற்காக மனைவியாகவோ, வாரிசாகவோ பெற வேண்டிய அவசியம் என்ன?
இயக்கத்தில் இதுவரை நடந்து வந்த நடப்பு விதிகள் கான்ஸ்ட்டிடியூசன் இன்னது என்று தெரியாத, அறியாத மனிதர் கூட இதைச் சொல்ல முனையமாட்டாரே. “மணியம்மைக்குத் தலைமைப் பதவி சூட்டுவதற்காக நான் வாரிசு முறை ஏற்படுத்துகிறேன்” என்று பெரியார் எங்குச் சொல்லியிருக்கிறார்?
“எனக்குப் பின் கட்சிக்கும், என் சொத்துக்கும் அடுத்த வாரிசு ஏற்படுத்த வேண்டும். இதை விரைவில் செய்யப் போகிறேன்” என்பதானது.
“இது கோவை மகாநாட்டில் பெரியார் சொன்னது.”
உடல் நலமின்மை
அடுத்த ஆதாரம்.
“இயக்க விஷயத்தில் எனக்கு இதுவரை அலைந்தது போல் அலைய உடல் நலம் இடம் கொடுக்கவில்லை.”
“என்னைப் போல் பொறுப்பு எடுத்துக் கொள்ளத்தக்க ஆள் யார் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுள்ளவர்கள் கிடைக்கவில்லை.”
“ஆதலால் எனக்கு வாரிசாக ஒருவரை ஏற்படுத்தி அவர் மூலம் ஏற்பாடு செய்துவிட்டுப் போக வேண்டும் என்று அதிகக் கவலை கொண்டு இருக்கிறேன்.”
“இதுபற்றித்தான் சி.ஆர். அவர்களிடம் பேசினேன்.” என்பது, “இது 19.6.1949இல் பெரியார் எழுதியது.”
இரண்டும் இந்தப்படியே இருக்கிறதாகவே வைத்துக் கொள்வோம்.
இந்த இரண்டு வாக்கியத்திலும் இயக்கத் தலைமைக்கு ஆக இந்த ஏற்பாடு என்றாவது, இயக்கத் தலைமையை சூட்டுவதற்காக வாரிசு என்றாவது காணப்படுகிறதா என்பதை எதிரிகள் தவிர்த்து மற்றவர்கள் கூர்ந்து பார்க்க வேண்டும்.
இயக்கத்தில் பெரியார் தொண்டு இன்னது என்பது யாருக்கும் தெரியும். அப்படித் தொண்டு செய்யக் கூடியவர்கள் பெரியாருக்குப் பின் தொண்டு செய்ய யார் இருக்கிறார்கள் என்பது அதாவது ஒருவரும் தென்படவில்லை என்பது பெரியார் கருத்து.
“அப்படிப்பட்ட தொண்டு செய்ய ஓர் ஏற்பாடு செய்கிறேன். அதற்கு வாரிசு வேண்டும்” என்கிறார்.
ஏன் வேண்டும்?
அந்தத் தொண்டை நடத்த- எப்படி நடத்துவது?
பண்டு வைத்து நடத்துவது. பெரியார் வைக்கும் பண்டை, நிதியை வேறு ஒருவர் வந்து வாரிசு கொண்டாடாதபடி தடை செய்ய வாரிசு ஏற்படுத்தி, அந்த வாரிசையும்கூட இருந்து நிர்வாகம் செய்யும்படி ஏற்பாடு செய்வது.
இந்த ஏற்பாட்டுக்கும் கழகத்துக்கும் சம்பந்தமே இருக்காது என்று கூடச் சொல்லலாம். எப்படி என்றால் கழகத்துக்கு யார் வேண்டுமானாலும் தலைவராகலாம், கழகம் எப்பேர்ப்பட்டவர்கள் கைக்கும் போய் விடலாம், கழகத்தை இன்றையப் போக்கில் யார் வேண்டுமானாலும் விலைக்கு வாங்கி எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம். இது திராவிடர் கழகத்துக்கு மாத்திரமல்லாமல் எந்தக் கழகத்துக்கும் இயற்கை.
ஏமாற்ற முடியுமா?
அப்போது டிரஸ்ட்டும் நிதியும் சரிவர நடக்க அதாவது டிரஸ்ட்டு நடக்காமல் இருந்தால் நடக்கும்படியோ, கண்டவர்கள் தவறு செய்தால் செய்யாமல் இருக்கும்படியோ பார்க்க, ஓர் அத்துக்கு டிரஸ்ட்டு நிதிக்குடையவனுடைய வாரிசு உரிமை ஒரு காவலாக இருக்கவே தான் வாரிசு.
இதுவும் நிரந்தரமாய் இருக்க முடியாது என்பது இயற்கை. ஆனாலும் கூடுமான அளவு ஒரு தலைமுறைக்கு ஆவது நடக்கலாம் என்கின்ற ஒரு ஆறுதலுக்கு வாரிசு என்று கருதுகிறார்.
இந்தக் கருத்தை பெரியார் பல தடவை தெளிவுபடுத்தி இருந்தும் “இயக்கத் தலைமைக்கு வாரிசு” என்றே மக்களுக்குச் சொல்லி ஏய்ப்பதென்றால், இத்தனை மக்களுமா இயக்க நடப்பு விதி, தலைவர் தேர்தல் முதலியவை தெரியாமல் இருக்க முடியும்?
டிரஸ்ட்டில் இயக்கக் கழகத் தலைவர் இன்னார் என்று எழுதி விடுவதாலும் தலைவராகி விட முடியுமா?
பெரியாருக்கு அவ்வளவுகூட விதிமுறை தெரியாதா? யாரை அவர் ‘தலைவராக எழுதினாலும்’ மக்கள் ஒத்துக் கொண்டால்தானே அதுவும் தேர்தலில் தெரிந்தெடுக்கப் பட்டால்தானே அது செல்லும்?
இவ்வளவு தெளிவு இருக்கும்போது இயக்கத்துக்குத் தலைவர் மணியம்மை. “அந்தக் குமரி அந்தப் பேய்…” என்றெல்லாம் வைவதற்கும், இந்தக் கற்பனையைப் பயன்படுத்திக் கொண்டால் இது எத்தனை நாளைக்குச் செல்லும்? இதில் எவ்வளவு நாணயம் இருக்க முடியும்?
இந்நிலையில் “பெரியார் பல்ட்டி அடித்து விட்டார். ஏமாற்றுகிறார்” என்றும் எழுதுவதால், இதனால் மக்களை அறியாதவர்களாக ஆக்கலாமே தவிர, பெரியாருக்கோ அவர் தொண்டுக்கோ இயக்க நடப்புக்கோ என்ன கெடுதி ஏற்படக் கூடும்?
“என்னைப் போல் அலைந்து திரிய, தொண்டுக்குத் தகுதியானவர்கள் என் புத்திக்குக் கிடைக்கவில்லை” என்கிறார். யாராவது இருப்பதாக யாருமே குறிப்பிட வில்லையே, யாராவது நடந்ததாகவும் காணப்பட வில்லையே.
கடைசியாக ராமாமிர்தம் அம்மையாரைத்தான் காட்ட முடிந்தது.
அதுவும் அந்த அம்மையாரே “நான் இல்லையா?” என்று “முன் வந்தார்.” ரொம்ப சரி. நாளை முதற்கொண்டே அவர்கள் செய்யட்டும். யாரும் தடுக்கவில்லை. ஒரு 3 மாத காலமாவது அந்தம்மாள் கோவையில் குறிப்பிட்டபடி செய்யும் தொண்டைப் பார்த்துவிட்டு, பெரியார் அவர் சொன்ன வார்த்தையை வாபசு வாங்கிக் கொள்ளுகிறார். அதற்கு ஆக அவரது மற்ற ஏற்பாடு தொடங்கப்பட வேண்டியதேன்? இதனால் கெட்டுப் போகும் காரியம் என்ன இருக்கிறது? குறை கூறும் காரியம் என்ன இருக்கிறது? யாரைக் கூட்டமாகவோ, தனிப்பட்ட முறையிலோ குறை கூறப்பட்டிருக்கிறது?
வாரிசா?
இயக்கத்துக்குப் பணம் வேண்டாம் என்கிறார்கள். யாரும் கட்டாயப்படுத்திப் பணம் கொடுக்க வரவில்லை. பெரியாருக்கு ‘இருக்கும் நிதியை’ நல்ல வழியில் பயன்படுத்த வாரிசே அல்லாமல் இயக்க நிதிக்கு வாரிசு அல்ல. ஆதலால் இயக்க நிதிக்குத் தனி வாரிசு என்றாவது, இயக்க சுவாதீனத்தில் பெரியாரின் நிதி வைக்கப்படுகிறது என்றாவது யாரும் கற்பனை செய்துகொள்ள வேண்டிய தில்லை.
சிலருக்குத் தன்நலனுக்கு அல்லாமல் பொது நலனுக்குப் பணம் தேவையே இருக்காது; சிலருக்குப் பொது நலனுக்கு அல்லாமல் சுயநலனுக்குப் பணம் தேவையே இருக்காது. இருவரும் பண விஷயத்தில் முட்டிக் கொண்டால் சிரிப்புக்கு இடமாகத்தான் இருக்கும்.
(16.7.1949 – ‘குடிஅரசில்’ எழுதப்பட்ட இத்தலையங்கம்
தந்தை பெரியார் அவர்களாலேயே எழுதப்பட்டதாகும்).
தோழர்கட்கும், பொதுமக்களுக்கும் நிலைமையை விளக்கவே இப்படிச் சில நேரங்களில் அய்யா அவர்கள் எழுதியுள்ளார்கள் என்பது அதன் பழைய வாசகத் தோழர்கள் அறிவார்கள்.
என் தொண்டு
மணியம்மையார் இயக்கத் தொண்டுக்கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு – தேவைக்கு உதவிசெய்து வந்ததன் காரணமாக என் உடல்நிலை எப்படியோ என் தொண்டுக்குத் தடையாயில்லாமல் நல்ல அளவுக்கு உதவி வந்ததால் என் உடல் பாதுகாப்பு, வீட்டு நிருவாகம் ஆகியவற்றில் எனக்குத் தொல்லை இல்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன்.
– தந்தை பெரியார்
‘விடுதலை’ 15.10.1962
அளவிடற்கரியது
எனது காயலா சற்றுக் கடினமானதுதான்; எளிதில் குணமாகாது. மூத்திர வழியிலே கற்கள் இருக்கின்றன. அவை கரைய மாதக் கணக்கில் காலமாகும். ஒரு சமயம் ஆபரேஷன் (அறுவை சிகிச்சை) தேவை இருந்தாலும் நான் பயப்படவில்லை. எதற்கும் தயாராக இருக்கிறேன். மணியம்மையார் கவனிப்பும் உதவியும் அளவிடற்கரியது.
– தந்தை பெரியார்
(தந்தை பெரியார் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர் 17.09.1967)