* கருஞ்சட்டை
கும்பமேளா நீர் குளிக்க தகுதியற்றது!
மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவல்
பிரயாக்ராஜ் : மகா கும்பமேளாவையொட்டி பிரயாக்ராஜில் ஆற்று நீர் மாசடைந்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளா கடந்த ஜன. 13 ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் இதுவரை சுமார் 54 கோடிக்கும் மேற்பட்டோர் ‘புனித’ நீராடியுள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தும் வருகிறது. நேற்று(பிப். 17) ஒரே நாளில் 1.36 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
இந்த நிலையில், பிரயாக்ராஜில் வெவ்வேறு இடங்களில் ஆற்று நீரை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அந்த நீரானது, மனிதர்கள் குளிப்பதற்கு உகந்த தரத்தில் இல்லை என்பது தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கும்பமேளா ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்றாலும் மாகி பௌர்ணமி உள்ளிட்ட சில முக்கிய நாள்களில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் ஆற்றில் இறங்கி புனித நீராடியுள்ளதைத் தொடர்ந்து, மேற்கண்ட நாள்களில் மனித கழிவுகள் அதிகளவில் ஆற்று நீரில் கலந்திருப்பதாகவும், இதன் காரணமாக அவற்றின் வழியே பரவும் ‘ஃபீக்கல் கோலிஃபார்ம் (எஃப் சி)’ நுண்ணுயிரிகளால் ஆற்று நீர் கடுமையாக மாசடைந்திருப்பதாகவும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையைச் சுட்டிக்காட்டி தேசிய பசுமை தீர்ப்பாயம் திங்கள்கிழமை(பிப். 17) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பிப்ரவரி 18 இல் வெளிவந்த அறிக்கை.
மார்ச் 10 ஆம் தேதி (‘தினமணி‘)யில் வெளிவந்த அறிக்கை என்ன சொல்லுகிறது?
‘தினமணி‘ 10.3.2025 அன்று வெளிவந்த செய்தி
மகா கும்பமேளாவில் கங்கை நதிநீர் நீராடுவதற்கு ஏற்றதே! -மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புது அறிக்கை
‘உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் அண்மையில் நிறைவுற்ற மகா கும்பமேளாவில் கங்கை, யமுனை நதிகளின் நீர் குளிப்பதற்கு பாது காப்பானதாகவே இருந்தது’ என்று தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்த புதிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சங்கமத்தில் கங்கை நீர் குளிப்பதற்கு பாதுகாப்பானதாக இல்லை என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் கடந்த மாதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தீர்ப்பாயத்தின் வலைதளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பதிவேற்றப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டி ருப்பதாவது: ஜனவரி 12 முதல் சிறப்பு நீராடல் நாள்கள் உள்பட வாரத்துக்கு இரண்டு முறை, கங்கை நதியில் அய்ந்து இடங்களிலும், யமுனா நதியில் இரண்டு இடங்களிலும் நீரின் தர சோதனையை வாரியம் நடத்தியது.
ஒரே இடத்திலிருந்து வெவ்வேறு தேதிகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் பிஎச், ‘டிஓ’ (கரைந்த ஆக்ஸிஜன்), ‘பிஓடி’ (உயிரி ஆக்ஸிஜன் தேவை), ‘எஃப்சி’ (மலக் கிருமி எண்ணிக்கை) போன்ற பல்வேறு அளவீடுகளின் மதிப்புகளில் குறிப்பிடத்தக்க மாறுபாடு இருந்தது. அதேபோன்று, ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் இருந்தும் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் தரவுகளிலும் மாறுபாடு கண்டறியப்பட்டது. இந்தப் பிரச்சினையை தரவு பகுப்பாய்வின் அடிப்படையில் ஆய்வு செய்த நிபுணா் குழு, ‘தரவு ஒரு குறிப்பிட்ட இடத்தில், அந்த நேரத்தில் நீரின் தரத்தை மட்டுமே பிரதிபலிக்கிறது. இது மனித நடவடிக்கைகள், நதி நீரோட்ட போக்கு மற்றும் கலவை, மாதிரி எடுக்கப்பட்ட ஆழம் மற்றும் நேரம் போன்ற பல காரணிகளைப் பொறுத்து கணிசமாக மாறுபடலாம். எனவே, இந்த மதிப்புகள் ஒட்டுமொத்த நதி நீரின் தரத்தை அவசியம் பிரதிபலிக்காது’ என்று தெரிவித்தனர்.
எப்படி இருக்கிறது?
பி.ஜே.பி. அரசின் திரைமறைவு திருகுதாளங்களுக்குப் பஞ்சமே இல்லை.
கும்பமேளாவை வைத்து அரசியல் நடத்தும் – காசு பறிக்கும் உ.பி. அரசுக்கு முதல் அறிக்கை நெருடலைக் கொடுத்தது.
கும்பமேளாவில் போட்ட முதலீடு ரூ.7500 கோடி அதே நேரத்தில் ரூ.3 லட்சம் கோடி வணிக வருவாயை ஈட்டியதாக உத்தரப் பிரதேச அரசும் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற கும்பமேளாவுக்கு வந்த பக்தர்களால் அப்பகுதியில் ரூ. 3 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும் என்று உத்தரப் பிரதேச அரசு கூறியதையே அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பும் தெரிவித்துள்ளது.
சும்மா இருப்பார்களா? சிண்டைப் பிடித்துக் குலுக்கி வேறொரு அறிக்கையைக் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள் என்பது கடுகத்தனை அளவு அறிவு உள்ளவர்களும் புரிந்து கொள்ளமாட்டார்களா?
மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் அவர்களுக்கு என்ன? பக்திக்குப் பங்கம் வந்துவிடக் கூடாது – கூடாது – அவ்வளவுதான்!
தன்னதிகாரம் படைத்த அத்தனை நிறுவனங்களும் பி.ஜே.பி., சங் பரிவார்களின் கட்டை விரலுக்கும் கீழேதானே!