நாவலர் இரா. நெடுஞ்செழியன்
மொழிப் பிரச்சினைகளைத் துவக்கியவர்களும், அவற்றிற்கு ஆதரவு தருவதாக நினைத்து மொழித் தகராறுகளை வளர்த்தவர்களும் தாங்கள் கூறும் வாதங்களின் ஆரம்பக் கட்டத்திலேயே குழம்பி விட்டனர். அதன் காரணமாகப் பிரச்சினைகளும் குழம்பிய நிலையிலேயே இருக்கின்றன. அந்தக் குழப்பத்தை அவர்களே இதுகாறும் அறிந்து கொண்டதாகத் தெரியவில்லை.
தேசிய மொழி
“இந்தி இந்தியாவின் தேசிய மொழி” அல்லது “இந்துஸ்தானி இந்தியாவின் தேசிய மொழி” என்று சொல்லும்போது தடை எதுவும் சொல்லுவதற்கில்லை என்று ஒருவாறாகக் கூறலாம். இந்தியையோ, அல்லது இந்துஸ்தானியையோ அறிமுகப்படுத்தி வைக்கச் சொல்லப்படும் பொதுவான மொழிநூல் இலக்கணமாக அவற்றை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் “இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி” என்று வலியுறுத்தும்பொழுதுதான் மாறுபாடு எழுகிறது.
இரண்டு சொற்றொடர்களுக்குமுள்ள பொருள்களை நுணுகி ஆராய்ந்தால் வேற்றுமை இருப்பது விளங்கும். ஒருவன், முன்பின் தான் அறியாத மற்றொருவனை அழைத்து, மூன்றாவது ஆள் ஒருவனைச் சுட்டிக்காட்டி “அவன் மனிதன்” என்று சொல்லுவானேயானால், வந்தவன் “இதற்குத்தானா என்னைக் கூப்பிட்டாய்” என்று சற்று சலிப்போடு கூறி அலட்சியமாக அப்புறம் செல்வான். மீண்டும் அவனை அழைத்து “அவன்தான் மனிதன்” என்று மறுபடியும் சொல்லிக் காட்டுவானேயானால் அழைத்தவனைப் பற்றி அருகே வருபவன் சந்தேகப்படுவான். அவன் சந்தேகம் முதல் மனிதனைப் பைத்தியக்காரனாகக் காட்டினால் கேலிச்சிரிப்பு சிரிப்பான்; போவார் வருவாரை அழைத்து அவர்களோடு சேர்ந்துகொண்டு எக்கொலி கொட்டி நகைப்பான். இரண்டாவது மனிதனுடைய சந்தேகம் முதல் மனிதனைப் போக்கிரியாகக் காட்டினால், தன் உடலில் வலிவு இருக்கும் வரையில் அவனை நையப் புடைப்பான். “மூன்றாவது மனிதனைக் காண்பித்து அவன்தான் மனிதன் எனக் கூறுகிறாயே! அதுவும் என்னைக் கூப்பிட்டு ஏன் சொல்லவேண்டும்? என்னைப் பார்த்தால் மனிதனாக உனக்குத் தோன்றவில்லையா? நான் என்ன ஆடா, மாடா? ஏண்டா மடையா? உனக்கென்ன மதிகேடா?” என வசைச் சொற்களைக் கூறத் தயங்கான். அதைவிட “அவன் தான் யோக்கியன்” என்றோ, “அவன்தான் புத்திசாலி”, “அவன் தான் ஒழுக்கமுடையவன்” என்றோ கூறினால் முடிவு இன்னும் வேறுவிதமாக அமையும்.
அவன் ஒரு மனிதன் என்று கூறுவதுபோல, இந்தி ஒரு தேசிய மொழி என்று அறிவிக்கப்படுமானால் எதிர்ப்பு உண்டாவதற்கு இடமில்லை; அக்கூற்றுபற்றி அலட்சிய மனப்பான்மையே ஏற்படும். இந்தி ஒரு தேசிய மொழி என்று விளம்பரப்படுத்த அரசியல் மேடையோ, பிரச்சார சபைகளோ தேவையில்லை. இந்திய மொழிகள் பற்றிய அட்டவணையில் இந்தி மொழி இடம்பெற்றிருந்தாலே போதும். அதைக்கண்டு இந்தி ஒரு இந்திய தேசிய மொழி என்று எளிதில் யாரும் அறிந்து கொள்ளலாம். “இந்திதான் இந்தியாவின் தேசியமொழி. இந்தியா முழுமைக்கும் இந்திதான் தேசியமொழியென ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்” என்று வலியுறுத்தும் பொழுதுதான் ஏனைய மொழியாளர்களிடமிருந்து எதிர்ப்பு மூளுகிறது. இந்திதான் தேசிய மொழியாகும் என்றால், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, குஜராத்தி, வங்காளி போன்ற சிறப்புடைய மொழிகள் தேசிய மொழிகளல்லவா? இந்தி ஒன்றே தேசிய மொழி என்று கூறுவதானால் மற்றவற்றின் நிலை என்ன? அந்த மொழிகள் மறைந்து போவதா? அல்லது அவற்றை வழங்கும் மக்கள்தாம் மாண்டுபோவதா?
இந்திய தேசியமொழி என்று கூறும் பொழுது இந்தியாவிற்குச் சொந்தமான மொழி, இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்தமொழி என்ற காரணஞ் சொல்லப்படு மானால் இந்தியும், வெறும்புள்ளி விபரக்கணக்குக்காக அதோடு தொடர்புபடுத்திக் கூறப்படும் பல்வேறு வட இந்திய மொழிகளும் (அவற்றின் வரலாறுகள் பின்னர் விரித்துக் கூறப்படும்) சமஸ்கிருதத்தின் சிதைவு மொழிகளுடன் அரபு, பாரசீகச் சொற்கள் பலப்படையாகக் கலக்க, உண்டானவை. இந்தி மொழி ஆதரவாளர்களாலும், வடஇந்திய இந்து தலைவர்களாலும், தேசிய வரலாற்றாசிரியர்களாலும், ‘இந்தியாவின் உன்னத தேசிய கலாச்சாரத்தின் அடிப்படை’ என்றெல்லாம் கூறப்படுகிற சமஸ்கிருதம் பிறந்தது, வழங்கியது எல்லாம் இந்தியாவிற்கு வெளியில் தான். அது இந்தியாவிற்குள் எப்பொழுதாவது, எவ்விடத் திலாவது வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.
திராவிட மொழி
எனவே சமஸ்கிருதம் இந்தியாவிற்கு முதல் தரமான அந்நியமொழியாகும். அரபி, பாரசீக மொழிகள் வேற்றுநாட்டு மொழிகள் என்பதை விளம்பத் தேவையில்லை. ஆனால் இந்தி இந்தியாவில் பிறந்த மொழி யென்றாலும், வேற்று நாட்டு மொழிகளான சமஸ்கிருதம், அரபி, பாரசீகச் சொற்களின் கூட்டுச் சேர்க்கையால் உதித்த மொழியாகும். இந்தியோ அதனோடு தொடர்புடையதாகக் கருதப்படும் ஏனைய மொழிகளோ, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திராவிட மொழிகளைக்காட்டிலும் எந்தவிதத்திலும் நெருங்கிய தேசியமொழிகளாகா.
திராவிட நாகரிகத்தின் சின்னம்
இன்னும் சற்று ஆழ்ந்து சிந்தித்தால் வரலாற்றறி ஞர்கள், மொழி நூல் வல்லுநர்கள், மேலை நாட்டாராய்ச்சி யாளர்கள் ஆகியோர் கூற்றுப்படி, தமிழும் அதனோடு தொடர்புடைய திராவிட மொழிகளுமே உண்மையான தேசிய மொழிகளாகும். கொட்டும் புனல் குமரியிலிருந்து, இமயப்பெருமலை வரை உள்ளிட்டுப் பரந்து கிடக்கும் பெருவெளி முழுமையும் பரவிக்கிடந்து, சிந்துநதி தீரத்தில் சிறப்புடன் தவழ்ந்து, நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கலைப்பண்பிலும், காவிய வளர்ச்சியிலும் சிறப்புற்றோங்கிய திராவிட நாகரிகத்தின் சின்னமாக விளங்கும் தமிழும், அதன் கிளைமொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம்முதலிய மொழிகளுமே தேசிய மொழிப்பட்டியலில் முதலிடம் பெற வேண்டியவைகளாகும்.
இப்படிக் கூறுவதன் மூலம் தமிழ்தான் இந்தியாவின் முதன்மொழி என்றோ, திராவிடக் குழுமொழிகளைத் தவிரஏனைய மொழிகள் இந்தியாவிலே இருக்க இடம் கிடையாதென்றோ நாம் கூற முன்வரவில்லை. இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்று வலியுறுத்தி வருவோர், எதை முக்கிய அடிப்படையாகக் கொண்டு கூறுகிறார்களோ அந்த ‘தேசிய’ அடிப்படையை அலசிப்பார்க்கும் போது, திராவிடமொழிகளே தேசிய மொழியாவதற்கு அதிகம் உரிமையுடையன என்பது பெறப்படுகின்றது என்பதை அன்னார்க்கு உணர்த்துதற்பொருட்டே இவற்றைக் கூறுகிறோம்.
சர்.டேஜ் பகதூர் சாப்ரூ
தேசிய மொழியாக இந்தி வலியுறுத்தப்பட்ட பொழுது, வடஇந்தியாவிலிருக்கும் அறிஞர்களிடத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பாமற்போகவில்லை. மொழிப் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க வந்த சர்.டேஜ் பகதூர் சாப்ரூ கூறுகிறார்:-
“இந்த மொழியை (புதிதாக அமைக்கப்பட்டு இந்துஸ்தானி என்று அழைக்கப்படும் மொழியை) ‘தேசிய’ மொழியென வலிந்து அழைத்து நாம் ஏன் அவதிப்பட வேண்டும் எனத் தெரியவில்லை. வடஇந்தியாவில் கடந்த இருநூறு ஆண்டுகளாக அது (இந்தி) வகித்து வந்த இடத்தைத் தொடர்ந்து அமைத்துக் கொள்ளுமானால் அது போதுமானது. தெலுங்கு, தமிழ், குஜராத்தி, வங்காளி முதலிய மொழிகளும் இந்தியைப் போலத் தேசிய மொழிகளே. இந்த மாகாணங்களில் தெலுங்கு, தமிழ், குஜராத்தி, வங்காளி முதலிய மொழிகளில் என் குழந்தைகளைப் படிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தினால் நான் பலமாக எதிர்க்கமாட்டேனா?”
இந்தக் குரல் தென்னாட்டிலிருந்து எழுந்ததல்ல. வடநாட்டுத் தலைவர் சாப்ரூ கூறுகிறார். மொழி விவாதத்தில் அவருடைய சொற்களுக்கு மதிப்புக் கொடுக்க மறுப்பவர் யாரும் இருக்கமுடியாது. அரசியல் தலைவர் என்ற காரணம் மட்டுமல்ல, இந்தி, உருது மொழிகளை நன்கு பயின்றவர்; அகில இந்திய உருதுமொழி சம்மேளனத்தின் தலைவராகக் கூட சில காலம் இருந்தவர், அவர் உணர்கிறார் தமிழ், தெலுங்கு போன்ற சிறந்த மொழிகளைப் புறக்கணித்துவிட்டு, இந்தியை மட்டும் தேசிய மொழியெனப் பறையறைதல் அடாதது, அர்த்தமற்றது என்று.
மொழிப் பிரச்சினையைத் துவக்கியவர்களும், இந்தியைத் தேசிய மொழியெனப் புகன்றோரும், அதை ஆதரித்து நின்றோரும் மற்ற மொழிகளைப் புறக்கணிக்க வேண்டுமென்ற எண்ணமோ, இழித்துரைக்க வேண்டுமென்ற விருப்பமோ கொள்ளாதவர்களாக இருந்திருக்கலாம். ஆனால் நடைமுறையில் நிகழ்ந்தது புறக்கணிக்கப்பட்ட நிலைதான். பலதிறப்பட்ட பல்வேறு மொழிகள் தனித்தனியே சிறந்து வளர்ந்தோங்கி வரும்பொழுது, ஒரு தேசிய மொழி வேண்டும் அதுவும் இந்திதான் என்ற கவலை ஏன் பிறந்தது? பல மொழிகளையுடைய ஒரு கண்டத்தில் அத்தகைய கவலை பிறக்கலாமா? வேதனையின் விளைவுகள் நாலாபக்கங்களிலும் வெடித்தெழாமல் போகுமா?
இந்தியத் துணைக்கண்டம் வெள்ளை ஏகாதிபத்தியத் தின் இரும்புப் பிடியிலே சிக்குண்டிருந்தது. அந்தப் பிடியினின்றும் இந்தியாவை விடுவிக்க ஒருமித்த ஒன்றுதிரண்ட உரிமை வேட்கை தேவைப்பட்டது. வெள்ளை ஆட்சியை எதிர்க்கும் செயலில் ஈடுபட, அவன் துப்பாக்கி முனையின் கீழ் இருந்த பல பகுதிகளும் ஒன்று சேர்ந்து நிற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
செயலாற்ற ஒரே உணர்ச்சி கொள்ள வேண்டி யிருந்தது. ஆகவேதான் இந்தியா என்று சுட்டிக்காட்டப் பட்டு, அது சுதந்திரமாக இருந்த நிலை எடுத்துக் காட்டப்பட்டு, வெள்ளையன் ஆட்சியின் கீழ்ப்படும் அவதி உணர்த்தப்பட்டு, மற்ற நாடுகள் சுதந்திரமாக வாழும் தன்மை அறிவுறுத்தப்பட்டு விடுதலை வேட்கை யுணர்ச்சி மக்களுள்ளந்தோறும் கொளுத்தப்பட்டது. விடுதலைக்காகப் பாடுபட முனைந்த காங்கிரஸ், அந்த அளவோடு தன் கடமையைச் செய்ய முற்பட்டி ருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் தலையிட்டிருக்க வேண்டாத – கூடாத பல பிரச்சினை களிலும் தலையிட்டார்கள். அதில் ஒன்றுதான் தேசிய மொழிப் பிரச்சினை.
காங்கிரஸ் தலைவர்கள் சுதந்திரமாக வாழும் பல நாடுகளைப் பார்க்கும்பொழுது, அந்தந்த நாட்டில் தேசிய மொழி யொன்று முதலிடம் பெற்று விளங்குவதைக் கண்டனர். எனவே விடுதலைக்காகப் போராடும் இந்தியாவுக்கும் தேசிய மொழி யொன்று தேவை என நினைந்து இந்தி – பின் இந்துஸ்தானி தேசிய மொழியாக வேண்டுமென முடிவு செய்தனர்.
நாடு விடுதலை பெற்றதும் அதனுடைய மொழிக்கு முதலிடம் கொடுப்பது தவறா? அடிமைப்பட்ட நாடு சுதந்திர நாடானதும், சுதந்திர நாட்டுக்குரிய உரிமைகளோடு அது வாழ வேண்டாமா? சுதந்திர நாடு என்பதன் அடையாளமாகத் தேசிய மொழி வளர்வதை ஏன் தடை செய்யவேண்டும்? என்று இந்தி மொழி ஆதரிப்பாளர்கள் கேட்க முனைவார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளும், கூறும் காரணங்களும் சரியானவைதாம். ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பின் ஏன் எதிர்ப்பு, தகராறு? என்று கேட்கத் தோன்றும்,
தேசியம், சுதந்திரம், மொழி இவைகளை அடிப் படையாக வைத்து அவர்கள் காட்டும் காரணங்களை நாம் மறுக்கவில்லை. ஆனால் அவற்றை இந்தியாவோடு தொடர்புபடுத்தி, இந்திதான் தேசிய மொழி எனக் கட்டாயப்படுத்தும்போதுதான், அடிப்படைக் காரணங்களையே ஆட்டிவைக்கும் அளவுக்கு முரண்பாடு தோன்றுகிறது. தேசிய மொழி தேவை என்று எங்கிருந்து ஆரம்பிக்கப்படுகிறதோ அந்த அடிப்படைக் கட்டத்திலேயே கேள்வி எழுகிறது. இந்தியா ஒரு தேசமா? கேள்வி சற்றுக் கசப்பானதுதான் – தேசம், தேசியம், தேசியமொழி என்று கனத்த குரலில் பேசிய பிறகு, விவாதத்தின் அடிப்படைக்கே ஆபத்தைத் தரும் கேள்வி!
இந்தியா ஒரு தன்மை கொண்ட ஒரு நாடல்ல; பல்வேறு மொழி பேசும் வகுப்பினரையும், மாறுபட்ட கலாச்சாரங்களையும், வேறுபட்ட பழக்க வழக்கங்களையும் கொண்டிருக்கிறது. வரலாற்று முறைப்படி பார்த்தாலும், இனப் பாகுபாடுகளை நோக்கினாலும், கலாச்சார அளவு கோலை வைத்துக் கவனித்தாலும், மொழி வேற்றுமைகளை நினைத்தாலும், நிலப்பரப்பைக் கண்ணுற்றாலும், ஆங்காங்குள்ள பழக்க வழக்கங்களைக் கண்டாலும் இந்தியா ஒரே தேசமல்ல; ஒன்றுபட்ட இனத்தைக் கொண்டதல்ல; ஒரே கலாச்சாரத்தை யுடையதல்ல; ஒரு பெருந் துணைக்கண்டம் என்பது பெறப்படும். நிலப்பரப்பில் ரஷ்யா தவிர்த்த அய்ரோப்பா கண்டத்திற்குச் சமம். ஆனால் வரலாறு, கலாச்சாரம், மொழி, பழக்கவழக்கம் ஆகியவற்றைப் பார்த்தால் ரஷ்யா உள்ளிட்ட அய்ரோப்பாவையும் இந்தியா மிஞ்சி நிற்கும்.
வரலாறுகள் பிரிந்தும், சிதறியும் கிடக்கின்றன. கலாச்சாரங்கள் ஒன்றோடொன்று மோதுகின்றன. மொழி வேற்றுமைகளோ எண்ணத் தொலையா. ஓரிடத்தில் காணப்படும் பழக்க வழக்கத்திற்கும் அதனருகில் அதே நிலையில் காணப்படும் பழக்க வழக்கத்திற்கும் பகுத்துணரும் அளவுக்கு வேறுபாடு. இந்த நிலையில் இந்தியாவை ஒரே தேசமென நினைத்து, அதற்கான பண்புகளைச் செயற்கை வழிகளால் காட்டி, அதற்கென தேசிய மொழி ஒன்றைத் தயாரிக்க விரும்புவது, சிதறிக் கிடக்கும் கண்ணாடித் துண்டுகளை ஒன்று சேர்த்து ஒட்டி, முகம் பார்க்க விரும்பும் தன்மையை ஒப்பதாகும். அதில் முகமும் சரியாகத் தெரியாது; ஒட்டப்பட்ட துண்டுகளும் நீண்ட நேரம் ஒட்டிய நிலையிலேயே இருக்கா.
அடுத்தபடியாகப் பொதுமொழி என்னுங் கூற்றைக் கவனிப்போம். மொழிப் பிரச்சினையை ஆரம்பித்த காங்கிரஸ் தலைவர்களும், ஆதரிப்பாளர்களும் ‘தேசிய மொழி’, ‘பொது மொழி’ என்ற சொற்றொடர்களைப் பாகுபாடின்றியே வழங்கி வந்துள்ளனர். இரண்டு சொற்றொடர்களும் ஒன்றோடொன்று குழம்பிய நிலையிலேயே சொல்லப்படுகின்றன.
‘தேசிய மொழி’ என்று கூறும்போது பலதிறப்பட்ட மொழி, பழக்க வழக்கம், பண்பாடு, வரலாறு ஆகிய வேறுபாடுகளைக் கவனிக்க மறுத்தாலும், ‘பொது மொழி’ என்று கூறும்போது, பல மொழிகள் வழங்குகின்றன என்பதை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். பொதுமொழி ஒன்று தேவை என்பதை வலியுறுத்தி காந்தியார் எழுதிய கட்டுரை ஒன்றில் காணப்படுவதாவது:-
“இந்திய கலாச்சாரம் செய்யப்படும் நிலையிலிருக்கிறது. ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருக்கும் கலாச்சாரங் களை ஒன்று கலந்த ஒரே கலாச்சாரமாக்க நாம் முயலுகி றோம்” என்பதாகும்.
இந்தியாவில் பல திறப்பட்ட கலாச்சாரங்கள் இருக்கின்றன என்பது மட்டுமல்ல, அவை ஒன்றோ டொன்று மோதிக்கொள்வனவாக இருக்கின்றன என்பதையும் காந்தியார் ஒப்புக்கொள்ளுகிறார். இவ்வாறு ஒன்று சேர்க்கும் வாய்ப்பைப் பொதுமொழியின் மூலம் அடைய அவர் எண்ணுகிறார் என்பது கட்டுரையின் மூலம் அறியப்படுகிறது.
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்தியா முழுமையும் ஒன்றாகத்திரட்டி, ஒரே தேசமாக இந்தியாவை நிலை நாட்ட காந்தியார் விரும்பினார். கடைசி சில ஆண்டுகள் வரை அந்த நினைவில் தடுமாற்றம் ஏற்படவில்லை. இந்தியா முழுவதையும் ஒன்றாகச் சேர்த்து அடிமைத் தளையை அகற்றும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டது. போராட்டம் நடத்தவும், இந்தியா முழுமையும் ஒன்றுபடுத்திப் பொதுவான எதிர்ப்பு முன்னணி அமைக்கவும், வெள்ளையராட்சி நீங்கினால் இந்தியா முழுமைக்கும் ஒரே அரசாங்கத்தை அமைத்து ஆட்சி புரியவும் பொது மொழி ஒன்று வேண்டும் என்ற கொள்கை வலியுறுத்தப்பட்டது.
பொதுமொழி ஒன்று தேவை என்ற பேச்சு பிறந்ததும், பொது மொழியாவதற்குரிய மொழி எது என்ற பிரச்சினை எழுந்தது. இந்தி, உருது, இந்துஸ்தானி மூன்று மொழிகளும் விவாதிக்கப்பட்டன. பொது மொழிப் பிரச்சினை பின் வளர்ந்த விதத்தையும், அதனால் ஏற்பட்ட பலன்களையும் கவனிக்குமுன் மொழிப்பிரச்சினையில் அடிபடும் இந்தி, உருது, இந்துஸ்தானி இவைகளின் வரலாறுகளைச் சிறிது கவனிக்கவேண்டும். கவனித்தால் தான் மொழிப் போராட்டத்தின் போக்கும் விளைவும் நன்றாக விளங்கக்கூடும்.