கடந்த 3.3.2025 அன்று ஜெயங் கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு அரியலூர் மாவட்டம் தா. பழூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்றோம்.மிகுந்த எழுச்சியோடும் உணர்ச்சிப் பெருக்கோடும் நடைபெற்ற விழாவில் தாங்கள் தொகுத்த போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் அவர்களால் வெளியிடப்பட்ட ‘சுயமரியாதை வீரர் மக்கள் தொண்டர் க.சொ.கணேசன்’ என்ற நூலை படித்தேன். நூலின் மூலம் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.கணேசன் அவர்களின் வியக்கத்தக்க கொள்கை உணர்வை தெரிந்து கொண்டேன். ராகு காலத்தில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற கொள்கை உறுதியால் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களையே காக்க வைத்தவர் என்பது அதிசயக்கத்தக்க ஒன்று. தலைவர் கலைஞரும் அந்தக் கொள்கைக்காரர் என்பதால் அதை ஏற்றுக் கொண்டார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் பருப்பு வழங்கிட வேண்டும் என்று இவர் வைத்த கோரிக்கை தான் பின் நாட்களில் அரசாணையாக வெளிவந்தது என்பது வெளிவராத செய்தி.இவர் சுயமரியாதைச் சுடரொளி அணைக்கரை டேப் தங்கராசு அவர்களின்உறவினர் என்பது நாம் அறிந்திருந்தாலும் அவரால் ஊட்டப்பட்ட கொள்கை உணர்வை இறுதிவரை கொண்டிருந்தார் என்பது சிறப்புக்குரிய செய்தி .
1964 ஆம் ஆண்டு திமுக நடத்திய மொழிப்போரில் கலந்து கொண்டு திருச்சி மத்திய சிறையில் 2 மாதம் சிறைத் தண்டனையை அனுபவித்த மொழிப்போர் தியாகி.
தா.பழூரில் கழக அலுவலகம் கட்டி அதனை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் திறக்கச் செய் தவர். மதனத்தூர் – நீலத்தநல்லூர் வரை கொள்ளிடத்தில் பாலம் அமைக்க சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தவர்.என்பது அந்தபாலத்தைப் பயன்படுத்தும் எத்தனை பேருக்கு தெரியும். நன்றி எதிர்பார்க்காத தொண்டு அல்லவா?
கழக அலுவலகத்திலேயே மறைந்த அய்யா அவர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய இரங்கற்பாவால் அய்யா அவர்களின் தியாகத்தை அறிய முடிகிறது. இப்படிப்பட்ட சுயமரியாதை நாயகர்களுக்கு பல்வேறு பணிகளுக்கிடையே விழா எடுத்து அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இளையத் தலைமுறையினர் அறியும் வண்ணம் தொடர்ந்து நூலாக வெளியிடும் தங்களின் பணி நன்றிக்குரியது.வரலாற்றில் போற்றப்படும்.மிக்க மகிழ்ச்சி.. நன்றி.
– சிவசக்தி, ஆசிரியர், செந்துறை