நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஹிந்தி எதிர்ப்பு முழக்கத்திற்கு இடையே பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே “தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்போதும் தமிழ் தமிழ் தமிழ் என்றே கூறிக் கொண்டு இருக்கின்றனர்.
இவர்களுக்கு வரலாறு தெரியுமா? சமஸ்கிருதம் மிகவும் பழைமையான புனிதமான மொழி ஆகவே தமிழ் தமிழ் என்று பேசுவதை விட்டுவிடுங்கள்’’ என்று கோபாவேசமாக பேசினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கோட்டா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான இவர் 1993 ஆம் ஆண்டு டில்லி பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. அதன் பிறகு பி.எச்.டி. பட்டம் பெற்றதாக தன்னுடைய தேர்தல் வேட்புமனு தாக்கலின் போது குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அவர் கல்விச்சான்றிதழ் போலியானது – இது தொடர்பாக டில்லி பல்கலைக்கழகம் உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மகுவா மொய்த்ரா நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் புகார் அளித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு அளித்த புகார் குறித்து முடிவில்லை. தேர்தல் முடிந்து புது நாடாளுமன்றமும் அமைந்துவிட்டது.
மீண்டும் நிஷிகாந்த் துபே எம்.பி. ஆகிவிட்டார். ஆனால் இவர் மீதான போலிச் சான்றிதழ் புகாரை இதுவரை நிலைக்குழு விசாரணைக்கு எடுக்க மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஒப்புதல் அளிக்கவில்லை.
இனம் இனத்தோடுதானே சேரும். இப்படிப் போலி பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்றவர்தான் தமிழ் மொழியை விட பழைமையானது, புனிதமானது சமஸ்கிருதம் என்கிறார்.
அப்படியானால் அந்தப் புனிதமான தேவபாைஷ என்று பீற்றிக் கொள்ளும் சமஸ்கிருதம் ஏன் செத்த மொழியாயிற்று?
145 கோடி 99 லட்சத்து 28,991 ேபரில் சமஸ்கிருதம் பேசுவோர் எண்ணிக்கை 24,821 பேர் மட்டுமே. சமஸ்கிருதம் என்பது தனித்தன்மையான மொழியும் அல்ல!
சமஸ்கிருதம் என்றால் என்ன பொருள்? சமஸ் = எல்லாம் – கிருதி = தொகுக்கப்பட்டது என்பதே இதன் பொருள்.
‘‘என்சைக்ளோ பீடியோ பிரிட்டானிக்கா’ என்ற ஆங்கிலமொழி பேரகராதி என்ன கூறுகிறது?
‘சமஸ்கிருத மொழி ஆரிய மொழிகளுடன் கொண்டுள்ள தொடர்பையும், பல அம்சங்களில் கிரேக்க மொழி போன்று இருப்பதையும் வரலாற்று ஆசிரியர் டாக்டர் எச். ஜூலியஸ் எக்லிங் குறிப்பிடுகிறார்.
இந்தியாவில் நுழைந்த ஆரியர்கள் கோத்ஸ் (கிராய்) என்ற நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதும், கோதிக் மொழியைத் தம்முடன் கொண்டு வந்தவர்கள் என்பதும் பல வரலாற்றுச் சான்றுகளால் தெளிவாகிறது.
எனவே இந்த சமஸ்கிருதம் அமைதிக்கால மொழியென்றும், இம்மொழியிலிருந்துதான் பழங்கால மொழிகள் அனைத்தும் உற்பத்தியாயின என்பது எல்லாம் ஆதாரமற்றவை. ஏனெனில் சமஸ்கிருதம் கி.மு. 1500இலும், அதற்குப் பிறகும்தான் உருவாயிற்று.
வேத காலமாகிய கி.மு. 1500ஆம் ஆண்டுக்கு முற்பட்டவர் தொல் காப்பியர் என்று தமிழ்க் கடலாம் மறைமலை அடிகளார் குறிப்பிடுகின்றார்.
ஒரு மொழிக்கு இலக்கண நூல் (தொல் காப்பியம்) கி.மு. 1500 என்றால், அந்த தமிழ்மொழி தோன்றி எத்தனை ஆயிரம் ஆண்டாகி இருக்கும் என்பதை அறியலாம். சிந்து சமவெளி நாகரிகத்தோடு தமிழ் எழுத்துகள் தொடர்பு குறித்து அய்ராவதம் மகாதேவன் போன்ற தொல்வியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
உண்மை இவ்வாறு இருக்க செத்துச் சுடுகாட்டுக்குப் போய் சுண்ணாம்பான சமஸ்கிருதம்தான் உலகிலேயே மூத்த மொழி என்பது எல்லாம் ஆரியத்திற்கே உரித்தான தப்புத் தாளம் – திருகுதாளமே!