கோடை வெப்பம் தினமும் உடலுக்கு சூடேற்றி வரும் நிலையில் தமிழ்நாட்டு மக்களின், மொழி, பண்பாடு ஆகியவற்றிற்கு சவால்விடும் வகையில், உணர்வு சூடேற்றும் வகையில், வரிந்து கட்டிக்கொண்டு மல்லுக்கு வரும் சூழல், புதுப்புது கோணத்தில் தலைநீட்டி வருகிறது. சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுத்தானாம். அந்த வகையில் 29.11.2024 தேதியிட்ட ‘விடுதலை’ இதழ், ‘பிராமணர்களின் தாய்மொழி தமிழ்’ என்று கூறிய ‘தினமணி’யின் இமாலயப் புளுகுக்கு வலுவான மூன்று சாட்சியங்களை முன் வைத்து மூக்குடைத்து முக்காடிட வைத்துள்ளது.
மேலும், ஓரிரு சாட்டையடி சாட்சிகள், “தமிழ்ப் பார்ப்பனர்களின் பொதுவான மக்கள் திரள் தமிழ் மீது கொண்டிருந்த ஒவ்வாமை உண்மையானதாகவும், ஆழமானதாகவும், நீடித்ததாகவும் இருந்தது. அவர்கள், தமிழ் ஒரு பார்ப்பனரல்லாதவரின் மொழி என்ற உணர்வைப் பெற்றிருந்தனர். அவர்களுடைய உண்மையான பற்று இயல்பாகச் சமற்கிருதத்தின் பால் இருக்க வேண்டும் என்பதாகும். (ஆதாரம்: ‘தமிழகத்தில் பார்ப்பனர்கள்’ முனைவர் ந.சுப்பிரமணியன்.)
ராஜகோபாலாச்சாரியார், லயோலா கல்லூரியில் பேசியது இதைத்தானே எதிரொலிக்கிறது.
மணிமேகலை காப்பியத்தில் மணிமேகலை ஒரு பார்ப்பனப் பெண்ணைச் ‘சமற்கிருதப் பெண்’ என்று கூறுகிறார்.
அடுத்து, நான்காவது சாட்சியாக, ‘பிராமணர் சங்க’த் தலைவர் என்.நாராயணன் நிறுத்தப்படுகிறார். அவர் கூறிய ஆலோசனை “இந்தப் பிராமணப் பாரம்பரியம் வாழையடி வாழையாகத் தழைத்தோங்க வேண்டுமானால் நாம் ஒவ்வொருவரும் பிராமண உணர்வுடன் வாழ்ந்து, நடை உடை பாவனை, ஆத்துல பிராமண பாஷை பேசணும்.’
ஆலோசனையைத் தொடர்ந்து, சுயநலமே பெரிதான சுவைமிக்க உரையாடல் தொடர்கிறது. இதனைப் புரட்சிக் கவிஞர் பாவேந்தர்,
“காட்டினிலே ‘கிரீச், கிரீச்’ என்று கத்துகிறாய் கூட்டினிலே, நாங்கள் பெற்ற குழந்தைகள் போல் கொஞ்சுகின்றாய் வீட்டிலே ‘தூத்தம்’ என்பார். வெளியிலே போலியாகத் தண்ணீரென்பார் அவர் போல்தான் நீயும் கிள்ளாய்” என்று கவிநயத்துடன் வெளிச்சம் போட்டு காட்டுகிறார்.
அக்கிரகாரத்து தமிழ்நாட்டு மாமிகள் ஆச்சாரத்தை மறந்து ஆடம்பர வழியில் செல்வதாகக் குறைபட்டு, காங்கிரஸ்காரர் காந்தியாருக்கு கடிதம் எழுதுகிறார். காந்தியாரும் அதைக் கண்டித்து அவரின் ‘எங் இந்தியா’ இதழில் எழுதினார். அதைக் காண்போம்.
“நம் இயக்கத்தின், வெற்றிப் பாதையில் மதராஸில் பெரும் தடையாக இருப்பவர் நம் பெண்களே. உயர் பிரிவின் பெரும்பாலான பார்ப்பனப் பெண்கள், பல வகையான மேலை நாட்டுத் தீயப் பழக்கங்களுக்கு அடிமையாகி உள்ளனர். மூன்று முறைக்குக் குறையாமல் காஃப்பி குடிக்கிறார்கள்.
அதற்கு மேலும் குடிப்பதை நவ நாகரீகமாக கருதுகிறார்கள். வீட்டில் அணிய வேண்டிய எளிய உடையைக் கைவிட்டு விட்டார்கள். வெளிநாட்டு விலை உயர்ந்த துணியின் பின்னால் ஓடுகிறார்கள். நகை அணிவதில் பார்ப்பனப் பெண்கள் மற்றவர்களைத் தோற்கடித்து விடுகிறார்கள். பார்ப்பனர்களில் வைணவப் பெண்கள் மோசமான பாவச் செயலுக்கு உள்ளானவர்கள். தூய்மையான வாழ்க்கையை நோக்கிச் செல்ல முயலும்போது பெண்கள் ஆடம்பரத்தில் மூழ்கி வருகின்றனர். கோயிலுக்குச் சென்று கடவுளை வழிபடச் செல்லும்போது தூய எளிய உடையை அணிவதில்லை. இருப்பதில் மிக உயர்ந்த விலையுள்ள நகைகளை அணிவதும், சரிகை அதிகம் கொண்ட துணியை அணிவதும் மிகுதியானது.”
– காந்தியார் தன் கருத்தைக் கூறுகிறார் – வைணவப் பிரிவுடன் ஒத்துழைக்காத நண்பர் கூறிய உண்மையானவற்றை எண்ணிப் பார்க்கக் கசப்பாக உள்ளது. தமிழ்நாட்டு சகோதரிகள் மற்றப் பகுதி பெண்களைவிட பகட்டில் ஆர்வம் கொண்டவர்கள் என்பதை நம்ப என் மனம் இடம் தரவில்லை. ஆனாலும், நண்பர் கூறியவை தமிழக சகோதரிகளுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கட்டும். அவர்கள் எளிய வாழ்க்கை முறைக்குத் திரும்பட்டும். பகட்டான உடையணிவதைவிட, உள்ளத் தூய்மையின் அடையாளமான எளிய உடையை அணிந்தால் கடவுளே மகிழ்ச்சி அடைவார். நம்முடைய கோயில்கள் பகட்டுக் காட்சிக்கான இடமில்லை. மாறாக, அடக்கத்திற்கும் எளிமைக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். அதுவே பக்தி சூழலுக்கு முன் மாதிரியாக அமையும்.
(ஆதாரம்: ‘தி இந்து’ 16.8.2021)
நூறாண்டுகளுக்கு முன் வந்த செய்தி.
அடிமேல் அடி அடித்தாலும், வயிற்றைக் கழுவுவதில் குறியாக இருக்கும் பார்ப்பனர்கள் தமிழைத் தழுவி நடிப்பதில் வியப்பேதுமில்லை. பார்ப்பனர்கள், முருகன், கலையரசன், இளங்கோ, அறிவுச்செல்வி, அவ்வை என்று பெயர் கொண்டுள்ளார்களா?
எத்தனைக் காலம் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
விழித்துக் கொண்டார்கள் இளைஞர்கள். கவனம் இருக்கட்டும்.