எம்மொழி கற்ப தற்கும்
எவர்க்கும் உரிமை உண்டே!
‘எம்’மொழி காப்ப தற்கும்
எமக்கும் உரிமை உண்டே!
இம்மொழி கற்க வேண்டும்
என்பது திணிப்பு தானே?
மும்மொழி என்ப தெல்லாம்
முகத்தில் மூன்று கண்ணே!
இரண்டு கண்கள் போதும்
இன்னொன்(று) எதற்கு மூடா?
இரண்டு காதுகள் போதும்
இன்னொன் (று) எதற்கு மூடா?
இரண்டு கைகள் போதும்
இன்னொன்(று) எதற்கு மூடா?
இரண்டு கால்கள் போதும்
இன்னொன்(று) எதற்கு மூடா?
மானுடம் கூறும் உண்மை
மண்டையும் ஏற்றால் நன்மை!
தானெனும் அகந்தை கொண்டால்
தரைக்குள் தலைபோம் தன்மை!
வீணனே யாரிடம் வந்து
வீணே வாதம் செய்வாய்?
‘மானமும் அறிவும் இந்த
மனிதர்க்(கு) அழகாம்’ என்றே
சொன்ன பெரியார் மண்ணில்
சூது மூளை கொண்ட
சின்ன நரியே! மீண்டும்
சிங்கக் கடிபட லாமோ?
என்னைக் கடிக்க வந்த
சிற்றெ றும்பே? என்றன்
சுண்டுகால் விரலே போதும்
சுடுகா(டு) உன்னுடல் போகும்!
கட்ட பொம்மன் வீரம்
காட்டும் தமிழர் நாடே!
எட்டப்ப நாயே உன்னை
எட்டி உதைப்பேன் போடா!
வெட்டிப் பேச்செலாம் இங்கே
வேகா; வேகா போடா!
தட்டிக் கேட்ப தற்குத்
தமிழ்நா டேஎழும் மூடா!
எப்படி சிவனுக்(கு) இரண்டோ
எப்படி முருகனுக்(கு) இரண்டோ
அப்படி இருக்க நீயே
அடுத்தொன்(று) எதற்குக் கேட்க?
இப்படி அப்படி வாழ்தல்
எல்லாம் தகாது தெற்கே!
செப்படி வித்தை எல்லாம்
சாட்டைஅடி பெறுவ தற்கே!
ஊரிலே பேசு தற்கே
உள்ளூர் மொழியே போதும்;
பாரிலே பேசு தற்குப்
பார்மொழி ஆங்கிலம் போதும்!
வேறொரு மொழியும் கற்க
விரும்புவோர் கற்க லாமே!
யாரடா என்னை நீயும்
‘இதுபடி’ என்று சொல்ல?
‘பெரும்பா லுமிங்கே ஹிந்தி
பேசுவோர் அதிகம் என்று
நரம்பே இல்லா உங்கள்
நாக்கும் சொல்லு மானால்,
கரிய காக்கை தானே
பெரும்பான்மை? மயிலும் அல்ல!
அறிவிப்பீர் தேசியப் பறவை
காக்கை’ என்றார் அண்ணா!
இன்று வரையிலும் கொம்பன்
எவனும் பதில்தர வில்லை!
அண்ணா மலையோ, மோடியோ
அதற்குத் தருமா என்ன?
என்முன் வந்து நின்றே
இதற்குப் பதிலும் தரச்சொல்!
மின்சாரம் பாய்ந்தாற் போல
வீசிஉடல் பறக்கும் மேலே!
காட்டாற்று வெள்ளத் திற்குக்
கரைகட்ட ஏது மூடி?
கூட்டாட்சித் தத்து வத்தைக்
கொலைசெய்யும் மோடி! கட்டி
நாடாண்ட ரசியா கூட
துண்டுதுண் டானது தானே?
மூடர்கள் ஆட்சி செய்தால்
இந்தியாவும் உடையும் தானே!