கோவை, ஜூலை 10 – குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கம் திட்டம் எவ்வித தவறுகளுக்கும் இடமின்றி முழுமையாக நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு, ஆயத் தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி கோவையில் செய் தியாளர்களிடம் கூறியதாவது:: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். இந்த திட்டம், திமுகவை சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே போய் சேரும் என கொச்சைப்படுத்தி, மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். அவரது குற்றச்சாட்டு அப்பட்டமான பொய். இத்திட்டத்தில் எந்த தவறுக்கும் இடம் கொடுக்காமல், முழுமையாக நிறைவேற்றப்படும். எல்லா பயனாளி களுக்கும் இந்த தொகை முறையாக, முழுமையாக வந்து சேரும். இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அரசு சார்பில் வகுக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் முழுமையாக பின்பற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.