“பாட்டிசைக்காதே பழி வந்து சேரும், ஏட்டைத் தொடாதே தீமை உண்டாகும், அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு?” எனும் அர்த்தமற்ற வினாக்களைத் தொடுத்து பெண்களை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்திருந்தனர் நமது முன்னோர்கள்.
இத்தகைய கொடுமையினைக் கண்டு எரிமலையாய்க் கொதித்தெழுந்த தந்தை பெரியார், நாட்டில் சரிபகுதி உள்ள பெண்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு உள்ளிட்டவை கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை உள்ள மக்களிடையே இரவு – பகல் பாராமல் இடைவிடாது பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் பெண் கல்வியின் அவசியத்தை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து அவர்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அந்நாட்டிலுள்ள பெண்களின் முன்னேற்றத்தைப் பொறுத்தது என்பதை தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்ததின் விளைவாக; 1929-ஆம் ஆண்டு பிப்ரவரி 17, 18 ஆகிய இரு நாட்கள் செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் மட்டுமன்றி காவல்துறை, ராணுவம் உள்ளிட்டவற்றில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக ஒன்றிய – மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்மானத்தை வார்த்தெடுத்தார்.
சுயமரியாதை மாநாடு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க தாமாக முன்வந்தனர் என்பது சிறப்புக்குரிய செய்தியாகும். பெண் குழந்தைகள் பல்வேறு இன்னல்களை, இடர்பாடுகளை, தடைகளை உடைத்தெறிந்து ஆர்வமுடன் கல்வி கற்று வருவது பெருமைக்குரிய விடயமாகும்.
இன்றைய சூழலில், அண்மையில் ஒன்றிய அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை இந்தியா முழுவதும் இடைநிற்றல் இல்லாமல் மாணவர்கள் படிப்பது குறித்து ஒரு ஆய்வை நடத்தியது. அந்த தகவல் முறைமை கொடுத்த ஆய்வறிக்கையில் 2024-ஆம் ஆண்டில் மாணவர்கள், மாணவிகள் இரு பாலர்களிலும் தமிழ்நாடு முதல் இடம் பெற்று இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக – முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து முத்திரை பதித்திருப்பதாக சுட்டிக்காட்டி இருப்பது சமூகநீதியின் சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியின் கல்வி வரலாற்றில் ஓர் மைல்கல்லாகும்.
வீட்டிற்குள் சிறைப் பறவைகளாக இருந்த பெண்களை வெளி உலகிற்கு சுதந்திரப் பறவைகளாகக் கொண்டு வந்தவர் தந்தை பெரியார். பெண்களிடம் கொட்டிக் கிடக்கின்ற அறிவை, ஆற்றலை, துணிவை, மதிநுட்பத்தை நல்லவண்ணம் பயன்படுத்திக் கொண்டு இச்சமுதாயம் அறிவார்ந்த சமூகமாக, அறிவியல் மனப்பான்மை கொண்ட, பகுத்தறிவுச் சிந்தனை வளர்ந்த, முற்போக்கு எண்ணம் கொண்ட எழுச்சி மிகுந்த சமுதாயமாக உருப்பெற்று எழ வேண்டும் என்பதே தந்தை பெரியார் அவர்களின் தணியாத வேட்கையாகும்.
ஒரு ஆணாக இருந்துகொண்டு பெண் கல்வி, பெண் உரிமை, பெண் விடுதலை மற்றும் பெண்கள் நலன், பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கு சொத்துரிமை ஆகியவற்றிற்காக தனது வாழ்நாள் முழுவதும் வாதாடியவர் – போராடியவர் பெண்ணுரிமைக் காவலர் தந்தை பெரியார் அவர்கள் ஆவார். வீட்டின் வளர்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதை ஓங்கி ஒலித்தவர் பெரியார்.
தந்தை பெரியாரின் ஈடு இணையற்ற உழைப்பின் காரணமாக, பெண்கள் தற்போது பட்டம் பெற்று பல்வேறு துறைகளில் செவ்வனே பணியாற்றி வருவதோடு மட்டுமன்றி, உயர் அதிகாரிகளாகவும் சிறந்து விளங்குகின்றனர் என்பது பாராட்டுக்குரிய செய்தியாகும். மேலும், இஸ்ரோ உள்ளிட்ட விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி மய்யத்திலும் தங்களது திறமையை உலகிற்கு பறைசாற்றி வருகின்றனர் என்பது சமூகநல ஆர்வலர்களை, முற்போக்குச் சிந்தனையாளர்களை, பகுத்தறிவாளர்களை, கல்வியாளர்களை, பெண்ணுரிமைப் பேணுபவர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறது.
மேலும் பல்வேறு மாநிலங்களில் பெண்கள் ஆளுநராக, முதலமைச்சர்களாக, கட்சித் தலைவராக, நீதிபதிகளாக, மாவட்ட ஆட்சித் தலைவராக, மாநகராட்சி மேயராக, காவல்துறை உயர் அதிகாரிகளாக, நகராட்சி – உள்ளாட்சித் தலைவர்களாக மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களாக, தலைசிறந்த கல்வியாளர்களாக, ஆசிரியர்களாக, உயிர் காக்கும் மருத்துவராக, வழக்குரைஞராக, பொறியியல் வல்லுநர்களாக சிறப்பாக செயலாற்றி வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை தேடித் தந்துள்ளனர் என்பது தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக்கும் தன்னலமற்ற உழைப்பிற்கும் கிடைத்த ‘இமாலய வெற்றி’ ஆகும்.
இவ்வாறு, எங்கும் பெண்கள், எதிலும் பெண்கள் என்ற நிலையை எய்துவதற்கு உறுதுணையாக இருந்து அயராது உழைத்த தந்தை பெரியார் -அன்னை மணியம்மையார் ஆகியோரை ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகப் பெண்கள், மகளிர் அமைப்புகள், இளைஞர்கள்-மாணவர்கள் உள்ளிட்டோர் நன்றி உணர்வோடு நாளும் நினைத்து மகிழ்கின்ற இனிய வேளையில்; தன்னை கருப்பு மெழுகுவர்த்தியாக உருக்கிக் கொண்டு, தந்தை பெரியாரை 94-வயது வரை பாதுகாத்த தொண்டறத் தாய் அன்னை மணியம்மையார் அவர்களின் 106 -ஆம் ஆண்டு பிறந்த நாளினைக் கொள்கை நாளாகப் போற்றுவோம்!
வாழ்க தந்தை பெரியார்!
வாழ்க அன்னை மணியம்மையார்!