பீகாரில் உள்ள உலகப் புகழ்பெற்ற புத்த கயாவில் பிப்ரவரி முதல் பவுத்த துறவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களின் கோரிக்கை என்னவென்றால், பி.டி. (BT) சட்டம் அதாவது புத்தகயா கோவில் சட்டம், 1949 ரத்து செய்யப்பட வேண்டும் என்பதாகும்.
இந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் புத்த கயா கோவில் மேலாண்மைக் குழுவில் (பிடிஎம்சி) பவுத்தர்களையும் பார்ப்பனர்களையும் உறுப்பினர்களாக ஆக்குவதற்கான ஒரு விதி உள்ளது. இதை பவுத்த பிக்குகள் நீண்ட காலமாக எதிர்த்து வருகின்றனர். முன்னதாக மகாபோதி கோவிலுக்கு அருகில் பவுத்த பிக்குகள் சாகும் வரை பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், பிப்ரவரி 27 அன்று நிர்வாகம் அவர்களை மகாபோதி கோவில் வளாகத்திலிருந்து அகற்றியது.
போராட்டம்
இப்போது இந்த பவுத்த பிக்குகள் மகாபோதி கோவிலிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோமுகன் என்ற இடத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கயா மாவட்ட நீதிபதி (டி.எம்) தான், பிடிஎம்சி-இன் அலுவல் ரீதியான தலைவராகவும் உள்ளார். இது குறித்து, கயா டி.எம்.தியாகராஜன் கூறியதாவது. “பவுத்தர்களின் இந்தக் கோரிக்கை 1990களில் இருந்தே உள்ளது. தற்போது, மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்” என்று அவர் கூறினார். “பீகார் அரசின் உள்துறை பிடிஎம்சி-அய் நிர்வகிக்கிறது. இது ஒரு கொள்கை முடிவு.” என்றும் அவர் தெரிவித்தார். பீகார் தலைநகர் பாட்னாவிலிருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள கயா மாவட்டத்தின் புத்த கயா நகரத்தில், எல்லாம் சாதாரணமாக இருப்பது போலவே தெரிகிறது.
மகாராட்டிராவின் நாக்பூரிலிருந்து பீம்ராவ் சின்சோலே, மகாபோதி கோவில் பவுத்த துறவிகளின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்துள்ளார்,
அம்பேத்கர்
“இந்த இயக்கத்தைப் பற்றி நாங்கள் தொலைக்காட்சி மூலம் அறிந்தோம். இப்போது எங்கள் பவுத்த விகாரங்களில் இது தொடர்பாக கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மகாராட்டிராவிலிருந்து பலர் இங்கு வருவார்கள்” என்று அவர் கூறுகிறார்.டோமுகனில் அனல் காற்றையும் பொருட்படுத்தாமல் பவுத்த துறவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டக் களத்தில் சில சமயங்களில் அம்பேத்கரின் ஒளிப்படத்தையும், சில நேரம் அரசமைப்பின் பிரதியையும் காணமுடிகிறது.
ஆக்கிரமிப்பு
இந்த இயக்கத்தை வழிநடத்தும் ஆகாஷ் லாமா, “இது போல, ஒரு மதத்தினரின் இடத்தை வேறொரு மதத்தினர் ஆக்கிரமிப்பது, உலகில் வேறெங்கும் நடப்பதில்லை. மசூதி முஸ்லிம்களால் நடத்தப்படுகிறது, கோவில் ஹிந்துகளால் நடத்தப்படுகிறது, குருத்வாரா சீக்கியர்களால் நடத்தப்படுகிறது, ஆனால் மகாபோதி கோவிலை பார்ப்பனர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.” என்று கூறுகிறார்.
“நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம். பீகார் அரசாங்கத்தையும் சிறுபான்மை ஆணையத்தையும் கூட அணுகினோம், ஆனால் யாரும் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை” என்றும் அவர் கூறினார். உண்மையில், புத்தகயா கோவில் சட்டத்தில் பார்ப்பனர்கள் சேர்க்கப்பட்டதற்கான காரணம், அதன் விதிகள் உருவாக்கப்பட்டதன் வரலாற்றுப் பின்னணியில் ஒளிந்துள்ளது. பி.டி. சட்டம் எவ்வாறு உருவாக்கப்பட்டது?
புத்த கயாவில் உள்ள போதி மரத்தின் அடியில் புத்தர் ஞானம் பெற்றார்.
புத்த கயா கோயில்
கி.மு.3ஆம் நூற்றாண்டில் பேரரசர் அசோகர் இந்த இடத்தில் ஒரு கோவிலைக் கட்டினார். புத்தகயா கோவில் வலைத்தளம் பின்வருமாறு விவரிக்கிறது,
“13ஆம் நூற்றாண்டில் துருக்கிய படையெடுப்பாளர்களின் தாக்குதல் வரை புத்தகயா கோவில் அதன் ஆதரவாளர்களின் கைகளில் இருந்தது. 1590ஆம் ஆண்டில், காமண்டி கிரி என்ற என்ற பார்ப்பனச் சங்கராச்சாரி புத்தகயாவிற்கு வந்தார். அவர் காலப்போக்கில் மகாபோதி கோவிலைக் கைப்பற்றினார். அவர் தான் மகாவிகாரத்தின் (மகாபோதி கோயில்) சட்டப்பூர்வ வாரிசு என்று உரிமை கோரினார்.” பின்னர், 1885ஆம் ஆண்டில், ஆங்கில பத்திரிகையாளரும் எழுத்தாளருமான எட்வின் அர்னால்ட், மகாபோதி கோவிலை பவுத்தர்களிடம் திருப்பித் தருவது குறித்த கேள்வியை எழுப்பினார்.
மகாபோதி சங்கம்
இதன் பின்னர், இலங்கையின் அநாகரிக தர்மபாலர் 1891இல் புத்தகயாவிற்கு வந்து மகாபோதி சங்கத்தை நிறுவி, கோவிலின் மீது பவுத்தர்களின் கட்டுப்பாட்டை வலியுறுத்தி, இயக்கத்தைத் தொடங்கினார். பின்னர் இந்தப் பிரச்சினை 1922ஆம் ஆண்டு கயாவில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் எழுப்பப்பட்டது. ராஜேந்திர பிரசாத் உட்பட பல தலைவர்களின் தலையீட்டிற்குப் பிறகு, புத்தகயா கோவில் மசோதா 1948 அக்டோபரில் பீகார் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது 1949இல் நடைமுறைக்கு வந்தது.
1953ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி, முதல் புத்தகயா கோவில் மேலாண்மைக் குழு (பிடிஎம்சி) அதன் செயல்பாடுகளை ஏற்றுக்கொண்டது. புத்தகயா கோவில் சட்ட (பிடி சட்டம்) விதிகளின்படி, புத்தகயா கோவில் மேலாண்மைக் குழுவில் நான்கு பவுத்தர்கள் மற்றும் நான்கு இந்துகள் உட்பட மொத்தம் எட்டு உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்தக் குழுவின் அலுவல் ரீதியான தலைவர் கயா மாவட்ட மாஜிஸ்திரேட் ஆவார். அவர் ஹிந்துவாக இருப்பது கட்டாயமாகும். கயா மாவட்ட நீதிபதி, பார்ப்பனரல்லாதவராக இருந்தால், மாநில அரசு ஒரு பார்ப்பனரை தலைவராக நியமிக்க வேண்டும்.
சட்டத் திருத்தம்
இருப்பினும், 2013 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், மாநில அரசு இந்த சட்டத்தில் திருத்தம் செய்து, மாவட்ட ஆட்சியர் பார்ப்பனராக இருக்க வேண்டும் என்ற விதியை ரத்து செய்தது.
ஆனால், அந்தக் குழுவில் பார்ப்பனர்கள்’ உறுப்பினராக இருப்பதை பவுத்தர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.இந்த சர்ச்சையின் மற்றொரு புறம் புத்தகயா மடாலயம் உள்ளது. பிடிஎம்சி-யில் உள்ள பார்ப்பன உறுப்பினர்களில், ஒரு பதவி புத்த கயா மடாலயத்தின் மடாதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், புத்தகயா, மகாபோதி கோவில் பகுதியில் புத்தரின் ஆலயம் தவிர, ஹிந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் கோவில்களும் இருப்பதாக நம்புகிறார்கள்.
பார்ப்பன அர்ச்சகர்கள்
மகாபோதி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கோவில்கள் பிடிஎம்சி மற்றும் புத்தகயா மடாலயம் எனும் இரண்டு குழுக்களால் நிர்வகிக்கப்படுகின்றன. அதாவது, பவுத்த துறவிகள் மற்றும் பார்ப்பன அர்ச்சகர்கள் என இரு குழுக்கள் கோவில் வளாகத்தில் இருக்கின்றன.
புத்தகயா மடாலயத்தின் நிர்வாகி பார்ப்பனரான மஹந்த் விவேகானந்த கிரி, “நாங்கள் பிடிஎம்சி-யில் இருக்கிறோம், ஆனால் பவுத்த மதத்தினருக்கு புத்தகயா மடாலயக் குழுவில் எந்த உரிமையும் இல்லை” என்று தெரிவித்தார்.
பவுத்தர்கள் மற்றும் ஹிந்துகளுக்கான பொதுவான பாரம்பரிய தலம் என்று நம்பப்பட்டது. அந்த அடிப்படையில், பவுத்தர்கள் பிஎம்டிசி-இல் சேர்க்கப்பட்டனர்.”
“சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும், நாங்கள் இந்தக் கோவிலை பவுத்தர்களுக்குக் கொடுக்கவில்லை. பின்னர் மடாலயத்திற்கும் பவுத்தர்களுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டு, 1953இல் கோவில் பவுத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.” என்றும் குறிப்பிட்டார்.வித்யானந்த் பாண்டேவின் குடும்பத்தினர் மகாபோதி கோவிலில் பிண்ட கொடை செய்து வருகின்றனர்.
“எங்கள் சிவலிங்கமும், அய்ந்து பாண்டவர்களும் இங்கே இருக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் இங்கே பிண்ட கொடை செய்கிறார்கள். எங்கள் தாத்தா, தந்தை, நான், என் மகன், அனைவரும் இங்கே பிண்ட கொடையைச் செய்து வருகிறோம், தொடர்ந்து செய்வோம். ஆனால் இந்த மக்கள் ஸநாதன தர்மத்தை அகற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, பகவான் புத்தர் யாருடைய குழந்தை?” என்று கேட்கிறார். பாண்டவர்கள் இங்கு வந்து தங்களில் மூதாதையாருக்கு பிண்ட கொடை செய்தனர் என்று கதை சொல்கிறார்.
உலக பாரம்பரிய சின்னம்
இந்த இடம் ஒரு உலக பாரம்பரிய சின்னம், இது மதிக்கப்பட வேண்டும்” என்கிறார். பி.டி.எம்.சி.யில் இருந்து இந்து உறுப்பினர்களை நீக்க வேண்டும் என்ற பவுத்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
முன்னதாக 1992ஆம் ஆண்டு, ஜப்பானில் இருந்து இந்தியாவிற்கு வந்த பவுத்த துறவி சராய் சுசாய், இதற்காக ஒரு பெரிய இயக்கத்தைத் தொடங்கினார். இம்முறை இயக்கத்தின் அளவு சிறிதாகத் தெரிகிறது, ஆனால் அமெரிக்கா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் மற்றும் லடாக் உட்பட நாட்டின் பல பகுதிகளில் புத்தகயாவில் நடந்து வரும் இயக்கத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. லடாக்கிலிருந்து போராட்ட இடத்திற்கு வந்த டெச்சின் ஹெஜி, “இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக நான் இங்கு வந்துள்ளேன். இது பவுத்தர்களான எங்களுக்கு மிக முக்கியமான இடம். எனவே, பவுத்த கோவிலை பவுத்த மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கூறுகிறார்.
யாருக்கு சொந்தம்
இதற்கிடையில், பிப்ரவரி 12 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மகாராட்டிராவைச் சேர்ந்த ஜெய்வந்தி ஆதவ், “இந்தச் சட்டம் அரசமைப்புச் சட்டம் எழுதப்படுவதற்கு முன்பே உருவாக்கப்பட்டது. எங்கள் சட்டம் அம்பேத்கர் வகுத்த அரசமைப்பின்படி இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மகாபோதி கோவில் பவுத்த துறவிகளுக்கு வழங்கப்பட வேண்டும்” என்கிறார்.
டில்லியில் கெஜ்ரிவால் அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த போது, இந்து தெய்வங்கள் குறித்த கருத்தால் சர்ச்சையில் சிக்கி பதவி விலகிய ராஜேந்திர பால் கவுதமும் புத்தகயாவை அடைந்திருந்தார்.”நமது பிரதமர் வெளிநாடு செல்லும் போது, நாங்கள் புத்தரின் நாட்டிலிருந்து வருகிறோம் என்று கூறுகிறார், ஆனால் இங்கு பவுத்தர்களே தங்களது கோவிலின் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள்” என்று ராஜேந்திர பால் கவுதம் கூறினார்.
தீவிரமாகும் போராட்டம்
“அரசாங்கமும் பார்ப்பனர்களும் எங்கள் கோவிலை எங்களுக்குத் தர வேண்டும். இது நடக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும்.” “எங்களது பல பவுத்த கோவில்கள் இந்துக் கோவில்களாக மாற்றப்பட்டுள்ளன. நாங்கள் புத்தகயா மீதான எங்கள் உரிமைகளைப் பெற விரும்புகிறோம்” என்று அவர் கூறினார். புத்தகயாவில் பவுத்த துறவிகள் போராட்டம் தொடங்கிய பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர் ஆசாத்தும் இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பினார்.
2002ஆம் ஆண்டு உலக பாரம்பரியச் சின்னமாகச் சேர்க்கப்பட்ட மகாபோதி கோவிலைச் சுற்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 63 மடங்கள் உள்ளன. பிடிஎம்சியின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.
பார்ப்பனர் மோசடி
பிடிஎம்சி அமைப்பில் தற்போது பெரும்பான்மையாக பார்ப்பனர்களே உள்ளனர். ஆகவே வெளிநாட்டில் இருந்து வரும் அத்தனை நிதி மற்றும் நன்கொடைகள் மருத்துவமனைகள் அல்லது பள்ளிகளைத் திறப்பதற்குச் செலவிடப்படுவதில்லை, மாறாக அரசு விருந்தினர்கள், உறவினர்கள் மற்றும் இந்த அமைப்பின் உறுப்பினர்களில் சொந்த தேவைக்காகவும் வெளிநாடுகளுக்கு உல்லாசப் பயணம் செய்வதற்காவும் செலவிடப்படுகின்றன என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். பிடிஎம்சி முற்றிலும் போலியான பவுத்த நிறுவனம் போன்றது. ஆனால் தற்போது எங்கள் முதன்மையான கோரிக்கை புத்தகயா கோவில் சட்டத்தை ரத்து செய்வதாகும்” என்றும் தெரிவித்தார்.