பாணன்
மும்பையில் வாழும் மோகன்லால் சொந்தமாக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். பெரிய குடும்பம் – 4 சகோதாரர்கள் அனைவரும் மும்பையில் தான். ஆண்டுதோறும் சொந்த ஊரான வாரணாசியில் உள்ள மங்காரிக்குச் சென்று வரும் வழக்கம், திருமணம் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் ஊரில் தான்.
அப்படி சென்று வந்துகொண்டு இருந்த அவரிடம் நான் கேட்ட கேள்வி – நீங்கள் கடைசியாக எப்போது உங்கள் தாய்மொழியான வாரணாசி போஜ்புரி பேசினீர்கள் என்று. கேட்டேன்
நான் யார்?
என்னுடைய இந்தக் கேள்வி வாழ்க்கையில் முதல் முதலாக அவரை உலுக்கிவிட்டது. ஹிந்தி என்னும் ஆதிக்கத்தால் தன்னுடைய சுயத்தை மறந்து தான் யார் என்றே தெரியாமல் போன ஒரு 60 வயதை நெருங்கிக்கொண்டு இருக்கும் மோகன்லாலிடம் முதல் முதலாக அவரது தாய்மொழி குறித்து ஒருவர் கேட்டதும் அவரது விழிகளில் நீர் அரும்பியது.
நான் கடைசியாக என் தாய்மொழியான போஜ்புரியை எப்போது பேசினேன்? அதைவிட முக்கியமான கேள்வி என்னவென்றால், என் தாய்மொழி ஹிந்தி இல்லை, என்பதை இத்தனை ஆண்டுகள் கழிந்து உணர்ந்தேன் என்றார்.
எல்லோரும் ஹிந்தியில் மட்டுமே பேசுகிறார்கள். நான் ஏன் எனது ஊர்க்காரர்களிடம் கூட போஜ்புரியில் பேசுங்கள் என்று கேட்கவில்லை. உண்மை என்னவென்றால் என்னைச் சுற்றி மராட்டியர், மகதி, அவதி, பிரஜ், புந்டேலி, பகேலி, பீலி, காங்கிரி, கட்வாலி, ஹரியான்வி, பாங்ரி, மார்வாடி, மால்வி பஹாடி, கடிபோலி, போஜ்பூரி, சர்ஜாபுரி, பிர்ஜாபோலி, டோக்ரி, கூர்க் போன்ற எண்ணற்ற மொழி பேசும் மக்கள் இருந்தனர்.
ஹிந்தி விழுங்கிவிட்டது
இந்த மொழிகள் அவர்களுக்கு அவர்களுடைய குடும்பத்தி லிருந்தும், வரமாக கிடைத்தவை. ஒரு காலத்தில் இவற்றைச் சுமந்து கொண்டு அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து மும்பைக்கு வந்தனர். ஆனால், இங்கே ஹிந்தி என்னும் நச்சு ஆரியப் பாம்பு எங்களுக்கு வரமாகக் கொடுத்த மொழியை விழுங்கிவிட்டது.
ஏனெனில், நம்முடைய அந்த மொழி எப்போது ஹிந்தியாக மாறியது என்று யாருக்கும் தெரியவில்லை. இந்த மொழிகளை எப்போது மறந்தோம் என்று கூட யாருக்கும் தெரியாது.
தாய்மொழியை மறந்துபோன
மோகன்லாலும் அவரது குடும்பமும்
இங்கு ஹிந்தியை நீக்கிவிட்டால் எங்கள் மாநிலத்தில் (உத்தரப் பிரதேசத்தில்) 56 மொழிகள் எழுந்து நிற்கும். ஆனால், இந்த 56 மொழிகள் எங்கே போனது?
சட்டம் போட்டு – ஹிந்தியை பேசுவதை நிறுத்துங்கள் என்று அரசு உத்தரவிட்டால் யாருமே கவலைப்படமாட்டார்கள் – காரணம் அதைப் பேசும் ஒவ்வொரு மக்களுக்கும் ஒரு தாய்மொழி உண்டு என்று கூறினார்.
காணாமல் போனது எப்படி?
இதிலும் தனிப்பட்ட மொழிகளைப் பற்றி பேசினால், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு—அதாவது சுமார் 15 ஆண்டுகள் பழைய தரவுகளின் அடிப்படையில்—அப்போது நாட்டில் 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் போஜ்புரி, 2.5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ராஜஸ்தானி, 1.5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் சத்தீஸ்கரி, மற்றும் சுமார் 1 கோடி மக்கள் ஹரியான்வி போன்ற மொழிகளைப் பேசினர்.
கொடுமை என்னவென்றால் ஹிந்தி என்ற ஒற்றை குடையின் கீழ் வருவதால் மேலே கூறிய அனைத்தும் இந்தியாவின் அட்டவணை மொழிகளில் (Scheduled Languages) சேர்க்கப்படவில்லை.
மறுபுறம், நீங்கள் அறிந்திருப்பீர்கள் – பீகார், சத்தீஸ்கர், டில்லி, அரியானா, இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய 10 மாநிலங்களில் ஹிந்தி அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இங்கு நடைபெறும் அனைத்து அரசு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பணிகளும் ஹிந்தி மொழியிலேயே நடைபெறுகின்றன.
ஆதிக்கம்
ஆனால், இந்த தனிப்பட்ட மாநிலங்களின் மொழிகளைப் பகுப்பாய்வு செய்தால், கதை சற்று வித்தியாசமாகத் தெரிகிறது. உத்தரப் பிரதேச, பீகார் மக்கள் ஹிந்திக்கு பதிலாக மகஹி, போஜ்புரி, மய்திலியைப் பேசினர்.
2011ஆம் ஆண்டு மக்கள் தொகையின் படி பார்த்தால் கூட, பீகாரில் வெறும் 12.8 சதவீதம் பேர் ஹிந்தியை தங்கள் தாய்மொழியாகக் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் அது தாய்மொழி குறித்த விழிப்புணர்வின்மையின் தாக்கம் தான்.
50 விழுக்காட்டிற்கும் மேலுள்ள மக்கள் போஜ்புரியை தங்கள் தாய்மொழியாகக் கூறுகின்றனர். பீகாரில் 146-க்கும் மேற்பட்டமொழிகள் பேசப்படுகின்றன.
அதிகாரப்பூர்வ மொழி
அப்படியிருக்கையில், அங்கு ஹிந்தியை மட்டும் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிப்பது சரியா? இந்தக் கேள்வியை பீகாரின் மக்களும் அவ்வப்போது கேட்டு வருகின்றனர். அதேபோல், ராஜஸ்தானைப் பற்றி பேசினால், இங்கு 37 சதவீத மக்கள் ராஜஸ்தானியை தங்கள் தாய்மொழியாகக் கருதுகின்றனர். ஆனால், ராஜஸ்தான் சுற்றுலாவின் விளம்பரங்களை கவனித்தால், அவர்கள் சுற்றுலாப் பயணிகளை “பதரோ மாரே தேஷ்” என்று ராஜஸ்தானியில் அழைப்பதைப் பார்க்கலாம்.
ஆனால், ஆச்சரியமாக, ராஜஸ்தானின் அதிகாரப்பூர்வ மொழி ஹிந்தி மட்டுமே. இதனால்தான் நீண்ட காலமாக ராஜஸ்தானில் ராஜஸ்தானி மொழிக்கும் அதிகாரப்பூர்வ தகுதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
முரண்பாடுகள்
இத்தகைய முரண்பாடு ராஜஸ்தானில் மட்டுமல்ல, இமாச்சல பிரதேசத்திலும் காணப்படுகிறது. அங்கு ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் யாருமே இல்லை. ஆனால் தாய்மொழியை மறந்த 15 விழுக்காடு பேர் வேறுவழியின்றி தாய்மொழி ஹிந்தி என்கின்றனர்.
அதே சமயம், 32 சதவீதம் பேர் பஹாரியையும்,
16 சதவீதம் பேர் காங்கிரியையும் தங்கள் தாய்மொழியாகக் கூறுகின்றனர். இருப்பினும், அங்கு அதிகாரப்பூர்வ மொழி ஹிந்தியாகவே உள்ளது, இப்போது அதனுடன் சமஸ்கிருதமும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்டிலும் இதே போன்ற கதைதான். சத்தீஸ்கரைப் பற்றி பேசினால், அங்கு 62 சதவீத மக்கள் சத்தீஸ்கரியையும், வெறும் 10 சதவீத மக்கள் மட்டுமே ஹிந்தியையும் தாய்மொழியாகக் கூறுகின்றனர்.
உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம் இரண்டு மாநில மக்கள் மட்டுமே 50 விழுக்காடு தாய்மொழி ஹிந்தி என்று கூறுகின்றனர். காரணம் அவர்களது விண்ணப்பப் படிவத்தில் தாய்மொழி ஹிந்தி என்றுமட்டுமே உள்ளதால் அவர்கள் வேறு வழியின்றி ஹிந்தி என்று கூறுகின்றனர்.
பழங்குடி மக்களின் கேள்வி
எங்களை ஏன் ஹிந்தி பேசும் மக்கள் என்று அழைக்கின்றீர்கள் என அசாம் மாநிலத்தில் நடந்த பழங்குடியின மக்களின் கலாச்சார நிகழ்வின் போது வட இந்தியாவில் இருந்து வந்து கலந்துகொண்ட ஒட்டுமொத்த பழங்குடியின மக்கள் ஊடகவியலாளர்களைப் பார்த்து கேள்வி எழுப்பினர்.
வட இந்தியாவில் பேசப்படும் பெரும்பாலான தாய்மொழிகளுக்கு தனித்தன்மையும், தனி அடையாளமும் உள்ளன. இவற்றில் பலவற்றின் வரலாறு ஹிந்தியை விட மிகவும் பழைமையானது. இதனால், அவற்றின் கலாச்சார மதிப்பை அளவிடுவது எளிதல்ல.
பேசும், எழுதும், ஹிந்தி 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் ஆங்கிலேயர் ஒருவரால் உருவாக்கப்பட்டது.
ஹிந்தி என்பதில் ஏற்கெனவே பேசப்பட்டு வந்த ஹிந்துஸ்தானி மொழி, உருது மற்றும் பாரசீக வார்த்தைகளும் பலவற்றைக் கொண்டிருந்தன. இதை வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
பார்ப்பனர் சூழ்ச்சி
ஹிந்தியை மக்களிடையே கொண்டு செல்ல ஆங்கிலேயரோடு இணைந்து சூழ்ச்சி செய்தனர் பார்ப்பனர்கள்.
பனாரஸ் நியூஸ், சுதாரக தத்வ போதினி, சரஸ்வதி போன்ற இதழ்கள் முதல் முதலில் ஹிந்தியில் எழுதத் துவங்கின.
ஆங்கிலேயர்கள் மற்றும் சில செல்வந்தர்களின் நிதி உதவியோடு பார்ப்பனர்ப் பண்டிதர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் மகாவீர் பிரசாத் திவேதி, பால் முகுந்த, அம்பிகா பிரசாத் வாஜ்பேய், சோட்டே ராம் சுக்லா போன்றவர்கள் வட இந்தியாவில் ஹிந்தியை திணிப்பதிலும் சமஸ்கிருத சொற்களை எளிமையாக்கி ஹிந்தியில் புகுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்தனர்.
ஹிந்தியில் இலக்கியமா?
அதுமட்டுமல்லாமல், ஜெய்சங்கர் பிரசாத், சுமித்ரா நந்தன் பந்த், ராமதாரி சிங் தினகர், மைதிலி சரண் குப்தா, மகன் லால் சதுர்வேதி, பாரதேந்து ஹரிச்சந்திரா, மகாதேவி வர்மா போன்ற எழுத்தாளர்கள் சமஸ்கிருத இலக்கியத்தை எளிமையாகி ஹிந்தி இலக்கியமாக மாற்றினர். 1850-களின் காலகட்டத்தில் ஹிந்தி பேசுவது நகரத்தில் நகரீகமான மக்கள் போல் வாழ்வதற்குச் சமம் என்றும், போஜ்பூரி, உள்ளிட்ட தாய்மொழிகளைப் பேசுவது தாழ்த்தப்பட்ட சூத்திரர்கள் பேசும் மொழி என்றும் இழிவுபடுத்தப் பட்டது. இதனால் எல்லோரும் ஹிந்தி பேசுவதை பெருமையாக கருதத் துவங்கினர். இப்படித்தான் ஹிந்தி பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியாக போய்ச் சேர்ந்தது.
பாரம்பரிய மொழிகள்
பீகாரின் மய்திலி மொழியும் அதில் எழுதப்பட்ட கவிதைகளும், இலக்கியங்களும் இவற்றை விட பல நூறு ஆண்டுகள் பழைமையானவை. அதனால்தான் நீண்ட காலமாக மய்திலியை நாட்டின் செம்மொழிகளில் ஒன்றாக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
ஹிந்தி என்ற ஒன்று இல்லாத 17 ஆம் நூற்றாண்டு மற்றும் 18 ஆம் நூற்றாண்டின் முதல்பாதிவரை பிரஜ், அவதி, மற்றும் போஜ்புரி மொழிகளில் கவிதைகளும், உரைநடைகளும் படைக்கப்பட்டு வந்தன. இந்த மொழிகளுக்கு எழுத்து முறைகளும் இருந்தது.
மய்திலி திரஹுத் அல்லது மிதிலா சார் எழுத்து முறையில் எழுதப்பட்டது. அதேபோல, போஜ்புரி முன்பு திராவிட பிராமி எழுத்துமுறையான கைதி எழுத்து முறையில் எழுதப்பட்டது.
ராஜஸ்தானியைப் பொறுத்தவரை, குறிப்பாக மார்வாடி மொழி மகாஜனி எழுத்து முறையில் எழுதப்பட்டது. அதேபோல, ஒரு காலத்தில் பஹாரி மொழியை எழுதுவதற்கு பாலி எழுத்து முறை பயன்படுத்தப்பட்டது, மராட்டியும் கன்னடமொழியை ஒற்றிய வட்டெழுத்து முறையில் எழுதப்பட்டது. சிவாஜியின் முத்திரைகளில் கூட அந்த வட்டெழுத்து காணப்பட்டது. ஆனால், இன்று அனைத்தும் ஹிந்தியைப் போலவே தேவநாகரியில் எழுதப்படுகின்றன.
தாய்மொழி மீதான அக்கறையின்மை
இதற்குக் காரணம் தாய்மொழி குறித்த அக்கறையின்மை மற்றும் ஹிந்தி திணிப்பு காரணமாக இந்த மொழிகளின் தனி எழுத்து முறைகள் தொலைந்துவிட்டன.
ஹிந்தி மொழியின் ஆதிக்கம் அதிகரித்ததன் விளைவு இந்த மொழிகளின் தனித்தன்மை காணாமல் போனது.
பீப்பிள்ஸ் லிங்குவிஸ்டிக் சர்வே ஆஃப் இந்தியாவின் கூற்றுப்படி, அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் 400க்கும் மேற்பட்ட மொழிகள் இப்படியே தொலைந்துவிடும். இதனால்தான், மய்திலி, போஜ்புரி, ராஜஸ்தானி, பஹாரி, கட்வாலி போன்ற மொழிகளை மேம்படுத்தவும், அதனை வலுப்படுத்தவும் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இவற்றின் பயன்பாட்டை ஊக்குவித்து, இவற்றின் இருப்பை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பார்ப்பனர் சதி
ஒருவழியாக அச்சு ஊடகத்தின் மூலம் ஹிந்தியைத் திணித்த பார்ப்பனக் கூட்டங்கள். 1980 மற்றும் 1990 களுக்கு இடையில் நவீன சாதனங்கள் குறிப்பாக தொலைக்காட்சி வாயிலாக மெல்ல மெல்ல மக்களிடையே செல்லத் துவங்கினர்.
இங்கும் ஹிந்தியைக் கொண்டு செல்ல திட்டமிட்ட பார்ப்பனக் கூட்டம் . ராமாயணம், மகாபாரதம் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் சமஸ்கிருதம் கலந்த ஹிந்தியை கொண்டு சென்றனர்.
காரணம் திரைப்படங்கள் ஹிந்தி என்றாலும் பாடல்களும் வசனங்களும் பெரும்பாலும் உருது, ஹிந்துஸ்தானி, ஹரியான்வி, உள்ளிட்ட மொழிகளிலேயே பேசப்பட்டு வந்தது. எடுத்துக்காட்டாக மிகவும் பேசப்பட்ட படமான ஷோலே (எரிமலை) போஜ்புரி, புந்தேளி, மற்றும் கடிபோல் மொழியில் அதிகம் வசனங்கள் இருந்தது. இப்படித்தான் அன்றைய திரைப்படங்கள் எல்லாம் மக்களின் மொழியில் இருந்தது. ஆனால், திரைப்படம் ஹிந்தி திரைப்படம் என்று பேசப்பட்டது.
பாடல்களிலும் கிஷோர் குமார் போன்றோர் தங்களின் வட்டார மொழிகளான சுர்ஜாபூரி, surjapuri language பிர்ஜபுலி, brajabuli language போன்ற மொழியில் பாடல்கள் பாடினார்கள்.
ஆகவே, திரைப்படங்கள் மூலம் ஹிந்தியைத் திணிப்பதற்கு முதலில் திரைப்பட நடிகர், நடிகைகளையும், இதர திரைத்தொழில் செய்பவர்களையும் ஹிந்தி மயமாக்க வேண்டும் என்ற சூழ்ச்சியோடு, ஹிந்துமத புராணம் தொடர்பான திரைப்படங்களை எடுக்கத் துவங்கினர். இதனால் தானாகவே உருதுமொழி இல்லாமல் சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி மொழிபேசும் சூழலை ஏற்படுத்தியது.
மாயவலை
1990களில் நாட்டில் பெரிய அளவிலான நகரமயமாக்கல் தொடங்கியிருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மக்கள் வேலை மற்றும் வாழ்வாதாரத்தைத் தேடி வேகமாக பெரிய நகரங்களை நோக்கி புலம்பெயர்ந்தனர். இப்படி வெவ்வேறு பின்னணிகளிலிருந்தும், பகுதிகளிலிருந்தும் வந்த மக்களுக்கு ஹிந்தி தான் இணைப்பு மொழி என்ற ஒரு மாயையை ஏற்படுத்தி விட்டார்கள்
தாய்மொழியின் சிறப்பு
தாய்மொழி இறந்துவிட்டால், உங்கள் பண்பாடும் அடையாளமும் அதனுடன்சேர்ந்து இறந்துவிடும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு தாய்மொழியின் பொருள் என்னவென்றால், இந்த மொழியை நாம் நமது தாயின் கருவறையில் இருக்கும்போதே கற்கத் தொடங்கிவிட்டோம். எனவே, நமது முயற்சி என்னவாக இருக்க வேண்டும் என்றால், நமது வேர்களை மறப்பதற்குப் பதிலாக, தலைமுறை தலைமுறையாக நமது அடையாளத்தையும் மொழியையும் அடுத்த தலைமுறைக்கு பரிமாற்றம் செய்ய வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், இது குறித்து யுனெஸ்கோவே ஒரு உண்மையை உறுதிப்படுத்துகிறது, “ஒரு குழந்தை தனது கல்வியை தாய்மொழியில் தொடங்குவது அவனது வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது” என்று கூறுகிறார்கள்
தெற்கேயும் திணிக்க முயற்சி
ஒன்றிய அரசு ஹிந்தியை பாதுகாக்க முயற்சிகளை மேற்கொள்வது என்பது வேலையாட்களை உருவாக்குவது என்ற எண்ணத்தின் வெளிப்பாடு மட்டுமே. அவர்களுக்கு ஏவலாட்கள் தேவை – அறிவாளிகள் தேவையில்லை. என்ற கொடூர சிந்தனை.
ஹிந்தியை கொண்டு சென்று அந்த மாநிலத்தின் மக்களின் சொந்த மொழியை கொலை செய்கின்றனர். இதை வடக்கே செய்து முடித்துவிட்டனர். தெற்கே செய்ய முயல்கின்றனர். ஒன்றிணைந்து முறியடிப்போம்!