பகுத்தறிவு

2 Min Read

மூடர்களே! மூடர்களே!! ஒரு சின்ன சங்கதி. கோவிலின் மீதிருக்கும் கலசம் திருட்டுப் போகின்றது, அம்மன்கள் விக்கிரகங்களின் கழுத்திலிருக்கும் தாலிகள் திருட்டுப் போகின்றன. விஷ்ணு விக்கிரகத்தின் நெற்றியில் இருக்கும் நடுநாமம் (தங்கத்தில் வைத்தது) திருட்டுப் போகின்றது, சிவன் விக்கிரகத்திலிருக்கும் நெற்றிப் பட்டை மற்ற விக்கிரகங்களை கீழே தள்ளி அதிலிருக்கும் தங்கம், முத்து, ரத்தினம் திருட்டுப் போகின்றது. இவற்றின் வாகனத்தில் தேரில் நெருப்புப் பிடிக்கின்றது. அச்சு ஒடிகின்றது. இவற்றின் பயனாய் பலர் சாகின்றார்கள்.
மூடர்களே! இவற்றைப் பார்த்தும், கேட்டும் கூடவா அந்த இடங்களில்;அந்த விக்கிரகங்களில், அந்தத் தேர் வாகனங்களில், “புனிதத் தன்மை, தெய்வத் தன்மை, அருள் தன்மை ஆண்டவனை ஞாபகப்படுத்தும் தன்மை” முதலியவை இருக்கின்றதாக நினைக்கின்றீர்கள். உங்களிலும் மூடர்கள் இனியும் என்றாகிலும் உண்டா? தயவு செய்து சொல்லுங்கள்.
இன்னும் ஒரே ஒரு குட்டி சங்கதி.

வட்டி வாங்குகின்றவர்கள் கோடீஸ்வரனாகிறான். வட்டி கொடுப்பவன் நாசமாய், பாப்பராய்ப் போகின்றான் என்பதைப் பார்த்தும், கேட்டும் இன்னமுமா பாழாய்ப் போன கடவுள் இருக்கிறார் என்று கருதுகின்றீர்கள்? இன்னும் ஒன்றுதான் அப்புறம் ஒன்றுமில்லை. துளியுண்டு சங்கதி; காவடி எடுத்துக் கொண்டு போனவன் காலராவில் செத்த பிறகு கூடவா நாசமாய்ப் போன சாமி இருக்குதுண்ணு நினைக்கின்றீர்கள்?
மூடர்: சும்மா இப்படியெல்லாம் பேசிவிட்டால் போதுமா? இந்த உலகத்தைப் படைத்ததற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டாமோ? அதுதான் கடவுள்.
பதில்: சரி அப்படியானால், அந்தக் காரணத்தை – கடவுளை உண்டாக்கினதற்கு மற்றொரு காரணம் வேண்டாமா? அதுதான் சுயமரியாதை இயக்கம். (பகுத்தறிவு).
மூடர்: கடவுளைப் படைப்பதற்கு ஒரு காரணம் கேட்பது முட்டாள்தனமாகும்.
பதில்: அப்படியானால், உலகப் படைப்புக்குக் காரணம் தேடிக் கொண்டிருப்பது அதைவிட இரட்டிப்பு முட்டாள்தனமாகும்.
மூடன்: உங்களோடு யார் பேசுவார்கள்?
பதில்: சரி, நல்ல காரியமாச்சுது “சனியன்” தொலைந்தது. ஆனால், காணாத இடத்தில் குலை(ரை)க்காதே.
(சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் எழுதியது, ‘குடிஅரசு’ 4.1.1931)

ஒரே தகப்பனுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒன்றை இந்நாட்டிலும் ஒன்றை இங்கிலாந்திலும் வளர்த்துப் பாருங்கள். அவன் (இங்கிலாந்தில் வளர்ந்தவன்) எதையும் விஞ்ஞானக் கண்கொண்டு பார்ப்பான்; இவன் எதையும் மதக் கண்கொண்டு பார்ப்பான்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *